பொன்விழா கொண்டாடும் சென்னை கல்சுரல் அகாடமியின் விருது வழங்கும் விழா!

பொன் விழா ஆண்டைக் கொண்டாடும் சென்னை கல்சுரல் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கவின் கலைகள் விழா இந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தொடங்கி ஜனவரி 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பொன்விழா கொண்டாடும் சென்னை கல்சுரல் அகாடமியின் விருது வழங்கும் விழா!


சென்னை: பொன் விழா ஆண்டைக் கொண்டாடும் சென்னை கல்சுரல் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கவின் கலைகள் விழா இந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தொடங்கி ஜனவரி 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை தி.நகரின் ஹபிபுல்லா சாலையில் உள்ள ராமாராவ் கலா மண்டபத்தில் நடைபெறும் கவின் கலைகள் விழாவை திருமதி ரஜினி ஹரிஹரன் துவக்கி வைக்கிறார். சென்னை கல்சுரல் அகாடமியின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி துவக்க உரையாற்றுகிறார். 

இந்த கலை நிகழ்ச்சியில், பல்வேறு கலைத்துறையில் தங்கள் ஈடு இணையற்ற சேவையை ஆற்றி வரும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

நிகழ்ச்சியில், மேல்நாட்டு வாத்தியம் எனக் கருதப்பட்டு வந்த கிளாரினட்டில் நம் தமிழ்நாட்டின் இசையினை வாசிக்கும் முறையை அறிவித்த முன்னோடியாகக் கருதப்படும் ஏ.கே.சி. நடராஜனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட உள்ளது.

கர்நாடக இசைக் கலைஞர்களான ஓ.எஸ். தியாகராஜனுக்கும், நெய்வேலி ஆர். சந்தானகோபாலனுக்கும் சங்கீத 'கலா சிரோமணி' விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

ஸ்ரீதேவி நிருத்யாலயா நடனப் பள்ளியைத் துவங்கி கலைச் சேவை செய்து வரும் நடனக் கலைஞர் ஷீலா உன்னிக்கிருஷ்ணனுக்கு நிருத்ய 'கலா சிரோமணி' விருது வழங்கப்படுகிறது.

கிரேஸி மோகன் நாடகக் குழுவில் மது என்று பிரபலமாக அறியப்படுபவர் ஆர். பாலாஜி, 4 ஆயிரத்துக்கும் அதிகமாக நாடகங்களில் தோன்றியுள்ளவர். 25 முறை சிறந்த நடிகர் விருது பெற்ற பாலாஜிக்கு நாடக 'கலா சிரோமணி' விருது வழங்கப்படுகிறது.

குறைந்த செலவில் சிறந்த சேவை அளிக்கும் வகையில் சுவாமி விவேகானந்தா டயாக்னஸ்டிக் மையம் மூலம் ஏழைகளுக்கு உதவி வரும் லையன் பிரேம்நாத்துக்கு சென்னை கல்சுரல் அகாடமியின் 'சிறப்பு விருது' வழங்கப்படுகிறது.

விருது பெறும் கலைஞர்களை கௌரவித்து விருதுகளை வழங்க டாக்டர் பத்மா சுப்ரமணியம், டாக்டர் கண்ணன் புகழேந்தி, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

கேசிடி கோவை நிர்வாகி டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர்  விருது பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார். டிசிஎஸ் சென்னை பிரிவின் சிஏஓ சுரேஷ் ராமன், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிர்வாகி ஜி. ஸ்ரீனிவாசன், கோபுரம் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஒய்.வி. ஹரி கிருஷ்ணன், மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாகி டாக்டர் வி.மோகன், பீ.பி. சந்தானகிருஷ்ணன் ஆகியோர் விருது பெறுபவர்களை கௌரவிக்க உள்ளனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக இரவு 7.30 மணிக்கு கிளாரிநெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன் மற்றும் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.

தொடர்ந்து 15.12.17ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 4ம் தேதி வியாழக்கிழமை வரை பல்வேறு இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரிகளும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com