Enable Javscript for better performance
எஸ்.ராம கிருஷ்ணனின் யாமம் நாவல் அறிமுகம்!- Dinamani

சுடச்சுட

  

  எஸ்.ராம கிருஷ்ணனின் யாமம் நாவல் அறிமுகம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 04th April 2018 04:02 PM  |   அ+அ அ-   |    |  

  00000_yamamm

   

  இந்தியாவில் மிளகு வாங்கி விற்றுக் கொண்டிருந்த டச்சுக்காரர்கள் அதன் விலையை கன்னா பின்னாவென்று உயர்த்தி பதுக்கி வைத்து விற்க முனையவே... வந்தது ரோஷம் இங்லாந்துக்காரர்களுக்கு மள மளவென்று ராணி எலிசபெத்தை கொடுக்க வேண்டிய அன்பளிப்புகளைக் கொடுத்து சரிக்கட்டி நன்னம்பிக்கை முனை தாண்டி கடல் பயணம் மேற்கொண்டு வியாபாரம் செய்ய அனுமதி ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு... புறப்பட்டே விட்டார்கள் பலபல பேராசைக் கனவுகளுடன்!

  முதல் தடவை கப்பல் கடலில் மூழ்கியது...

  வியாபாரிகள் கடலில் சிதறி ஆளுக்கொரு திசையில் காணாமல் போனார்கள்...

  இரண்டாம் முறை வில்லியம் ஹாக்கின்ஸ் தலைமையில் புறப்பட்ட கப்பல் சூரத்தில் வெற்றிகரமாக நங்கூரமிட்டதாம். எல்லாம் இந்த மிளகால் வந்த வினை?! வெள்ளையர்களின் பெரும்பான்மை உணவான இறைச்சியை வெறும் உப்பிட்டு மட்டும் உண்பதென்பது நினைக்கச் சகிக்காத விஷயம். காரம் அதிலும் மிளகின் காட்டமான காரம் அத்தனை மாயம் செய்கிறது சாப்பாட்டு விசயத்தில்.

  அடுத்தபடியாக வெள்ளையரின் இந்திய வருகையை ஆதரித்த பெருமை பேரரசர் ஜஹாங்கீரைச் சேரும்... டெல்லி பாதுஷா... ஆலம்கீர் இன்னும் என்னென்னவோ பட்டங்கள். அதில் ஒரு பட்டம் வெள்ளை ஆதரவாளர் .

  ஜகாங்கீரின் ஆங்கிலேய மோகத்தைப் பற்றி அறிய விரும்புவோர் சிரமம் பாராமல் மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்களை" மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்க்கலாம் .

  சற்றேறக்குறைய வரலாற்றை ஒட்டிய நிகழ்வுகளைக் கொண்ட புதினம் என்பதால் லாம்டனின் நில அளவைப் பணியில் இந்த நாவலின் ஹீரோ... ஹீரோ என்று சொல்வதைக் காட்டிலும் "பத்ரகிரியை "வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை?! ஏனெனில் கதையில் அவனது பங்கு மிக முக்கியமானதே.

  பத்ரகிரி மட்டுமல்ல அவனைப் போலவே...

  அப்துல் கரீம் ("யாமம்" என்ற பெயரிடப் பட்ட அத்தர் வியாபாரி )
  சதாசிவப் பண்டாரம் (இவரை விடவும் இவரை தன் போக்கில் அழைத்துச் செல்லும் "நீலகண்டம் "எனும் நாய் கூட ஹீரோ தான் இங்கு )

  திருச்சிற்றம்பலம் (பத்ரகிரியின் தம்பி )

  கிருஷ்ணப்ப கரையாளர் (மேல்மலையின் உரிமையாளர்... தேயிலை ஏற்றுமதிக்கு தனக்கே தெரியாமல் காரணமாகி விட்டவர் என்று நாவல் கூறுகிறது)

  இவர்களைத் தவிர பத்ரகிரியின் மனைவி "விஷாலா...எனும் விஷாலாட்சி"

  திருச்சிற்றம்பலத்தின் மனைவி "தையல் எனும் தையல் நாயகி "

  அப்துல் கரீமின் மூன்று மனைவிகள்... முதல் மனைவி ரஹ்மானியா, இரண்டாம் மனைவி வகீதா, மூன்றாம் மனைவியான பதின் மூன்றே வயதான சுரையா

  இவர்களில் வகீதாவின் அன்பைப் பெற்ற சந்தீபா எனும் ஏழைச் சிறுவன் .

  கிருஷ்ணப்பக் கரையாளரின் காதலியாக வரும் நடுத்தர வயது ஆங்கிலோ இந்தியப் பெண் எலிசபெத்.

  சதாசிவப் பண்டாரத்தின் அம்மா... பண்டாரத்தின் நாயுடனான பிரயாணத்தில் இடர்படும் ஒரு பெண்... இவளுடன் கூடி ஒரு குழந்தை பெரும் தருணத்தில் பண்டாரத்தை நாய் மறுபடியும் தன் போக்கில் இழுத்துக் கொண்டு செல்கிறது.

  திருச்சிற்றம்பலம் மேற்படிப்புக்கு லண்டன் செல்லும் பொது கப்பலில் உடன் வரும் இந்திய நண்பனாய் "சற்குணம்"

  திருச்சிற்றம்பலத்தின் லண்டன் பேராசிரியர்... இவனை மகனைப் போல நடத்தும் பேராசிரியரின் மனைவி,

  பத்ரகிரி... திருச்சிற்றம்பலம் இவர்களது பாசமற்ற தந்தை... பாசம் நிறைந்த நங்கைச் சித்தி... தையலின் வினோதமான தோற்றமும் செயல்பாடுகளும் கொண்ட "நெல்லிவலை" அத்தை; 

  அப்துல் கரீமின் கனவில் வந்து அவரது வாழ்க்கைப் பாதையை பல நேரங்களில் தீர்மானித்துச் செல்லும் பக்கீர் அல் முசாபர்.

  நில அளவைப் பொறியாளர் லாம்டன் .

  நட்சத்திரங்களை கணக்கிடும் இன்னொரு அயல் நாட்டவன்.

  அவனுக்கு உதவ பணியமர்த்தப்பட்ட ஏ எஸ் ஐயர்.

  கிருஷ்ணப்ப கரையாளரின் எஸ்டேட்டில் திருட வந்து மாட்டிக் கொண்ட ஒரு திருடன்... அவனது உதவியாள நண்பன், இப்படி நாவலில் பல கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவே செய்கின்றன.


  கதை சுருக்கம்:-

  நாவலை

  அத்தரும் அப்துல் கரீம் மற்றும் அவரது மூன்று மனைவிகளும்...

  பத்ரகிரியும் விஷாலாவும் அவர்களது வாழ்வில் இடைப்படும் தையலும்...

  திருசிற்றமபலத்தின் லண்டன் வாழ்க்கையும் சற்குணத்தின் நட்பும்...

  சதாசிவப் பண்டாரத்தின் நீலகண்டத்துடனான (நாய்) நெடும் பயணம்...

  கிருஷ்ணப்பக் கரையாளர் மற்றும் எலிசபெத்தின் மேல்மலை வாழ்க்கை...

  இப்படி ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம் .

  வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக நாவல் நகர்த்திக் கொண்டு சென்றாலும் கூட கதை நிகழும் கால கட்டம் கி.பி.1600 இன் பிற்பகுதி என்றவகையில் அனைவரையும் வெள்ளையர்களின் அதிகாரம் ஒன்றிணைக்கிறது. அதோடு கூட அப்துல் கரீம் ரோஜாக்களில் இருந்து வடித்து எடுக்கும் ஒரு வித வாசனாதி தைலமான "யாமம்" என்ற பெயரிடப் பட்ட அத்தரும் இவர்களின் வாழ்வை ஒன்றிணைத்துச் செல்கிறது.

  யாமம்... 

  யாமம் என்பது இரவின் ஒரு பொழுதை குறிக்கும். அத்தருக்கும் யாமத்துக்கும் வெகுவான சம்பந்தம் உண்டு என்பதாலோ என்னவோ ஆசிரியர் இந்நாவலுக்கு "யாமம்" என்ற பெயர் சூட்டியமை சாலப் பொருந்துகிறது. சங்க இலக்கியங்கள் காட்டும் சிறு்பெழுதுகளில் யாமமும் ஒன்று;

  வைகறை விடியலைக் குறிப்பதைப் போல யாமம் "இரவை" குறிக்கும். இரவுப் பொழுது தம்பதிகளுக்கு இனிமை கூட்டக் கூடிய ஒரு பொழுதல்லவா? அங்ஙனமே இவ்விடத்தில் நாவலில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே "யாமத்தால்" ஈர்க்கப் பட்டு அதன் அலாதியான நறுமணத்தில் மிதந்து அதனின்றும் மீள முடியாதவர்களாகி விடுகின்றனர். மதராபட்டிணத்தில் வாழும் சகலரையும் அவ்வமயம் இந்த "யாமம்" எனும் அத்தர் ஆட்டிப் படைக்கிறது. இன்னின்னவர்கள் மட்டும் தான் என்றில்லை அப்துல் கரீமின் அத்தர் கடை இருக்கும் மீர் சாஹிப் மார்க்கெட்டில் எல்லோருமே அத்தர் வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அப்துல் கரீமும் அவரது மனைவிகளும் செல்வச் செழிப்பான வாழ்வை அனுபவிக்கிறார்கள்.

  அப்துல் கரீம் ஒரு கடல் வணிகர் ...அவரது வாழ்வை அவரது கனவுகளில் அடிக்கடி வரும் "அல் முசாபர் எனும் பக்கீர் " பல சமயங்களில் வழி நடத்திச் செல்கிறார் . இப்படியாக முதல் மனைவி ரஹ்மானியாவுக்குப் பின் வகீதாவை மணந்த அப்துல் கரீம் அதன் பிறகு ஒரு கடல் பயணத்தில் காணாமல் போய் வெகு சிரமப் பட்டு பல ஆண்டுகளின் பின் திரும்பி வருகிறார். அப்போது அவரது கனவில் தோன்றிய பக்கீரின் சொற்படி "வாசனையின் திறவுகோல் " எனும் பெயரில் ஆற்காட்டில் ஒரு ரோஜாத் தோட்டம் அமைக்கிறார்.அங்கு மலரும் ரோஜாக்களில் இருந்தே "அத்தர் " தாயாரிக்கப் பட்டு மதரா பட்டினத்தையே தன் வயமாககுகிறது.

  இத்தனை மாயாஜாலங்கள் செய்யும் அத்தரை ஒரு ஆண்மகனே வடித்து எடுக்கத் தகுதியானவன் என்று அப்துல் கரீம் நம்பியதால் அவருக்கு ஆண்குழந்தையின் மீது வெகுவாக ஆசை மேலெழுகிறது.இப்படி பேரோடும்..புகழோடும் செல்வச் செழிப்பில் திளைத்த அப்துல்கரீம் ஆண்குழந்தை வேண்டி மூன்றாவதாக "சுரையா" வைத் திருமணம் செய்து கொள்கிறார்.

  ஆனாலும் விதி வலியது கடைசி வரை அவருக்கு ஆண்குழந்தையே பிறக்காமல் முதல் மனைவி ரஹ்மானியாவிற்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை என்ற நிலையில் அப்துல் கரீமின் மனம் அத்தர் தயாரிப்பில் இருந்து "குதிரைப் பந்தயத்தில்" திரும்பி விடுகிறது.

  குதிரையின் வாலில் கட்டிய பணம் பின்னாட்களில் என்ன ஆகக் கூடுமே அது தவறாது நடந்து அப்துல் கரீமின் செல்வம் எல்லாம் கரைந்து ஒருநாளில் கரீம் எவர் கண்ணுக்கும் அகப் படாதவராகி "அந்தர் தியானமாகிறார்".

  கணவரால் கைவிடப் பட்ட அந்த மூன்று அபலைப் பெண்களும் என்ன செய்வார்கள்?! பாவம் செல்வச் செழிப்போடு இருந்த காலத்தில் ஒருவருக்கொருவர் பொறாமையில் வம்பு பேசி சண்டை சச்சரவு என்றிருந்த மூவரும் இப்போது ஒரு தாய் வயிற்றில் பிறந்த பெண் மக்களாகி ஒற்றுமையுடன் வயிற்றுப் பாட்டிற்க்காக குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மீன் விற்கும் நிலைமைக்கு அவர்களது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து விடுகிறது.

  கடைசியில் அப்போது மதரா பட்டினத்தில் பரவிய காலராவிற்கு ரஹ்மானியாவும் ...உதவிக்கென இருந்த ஒரே ஆண் துணையான எடுபிடிச் சிறுவன் சந்தீபாவும் பலியான பின் மற்ற இருபெண்களும் தத்தமது பிறந்தகம் நோக்கிச் செல்வதோடு அவர்களது கதை முடிகிறது .

  அடுத்து பத்ரகிரியும் விஷாலாவும் அவர்களது வாழ்வில் இடைப் படும் தையலும்:-

  பத்ரகிரி லாம்டனின் நில அளவைப் பணியில் ஊதியம் பெரும் ஒரு இந்திய ஊழியன் ...அவனுக்கு விஷாலா என்று ஒரு சாந்த குணம் நிரம்பிய அழகிய மனைவி ...பெயர் சொல்ல ஒரு ஆண்குழந்தை என்று அமைதியான வாழ்வு அவனுடையது.கதைப் படி மயிலை பார்த்த சாரதி கோயிலின் பின் புறத்தில் பத்ரகிரியின் வீடு .

  பத்ரகிரியைப் பற்றி பேசுகையில் நாம் அவனது இளம் பிராயத்தையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் பின்னாட்களில் அவன் தனது வாழ்வை சிக்கலாக்கிக் கொண்டதற்கு இளம் பிராயத்தில் அவனது வாழவல் அவன் சந்தித்த பெரும் துயரமே கூட காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  சுயநலமே உருவான ஒரு தந்தை ...அவரால் ஒரே வீட்டில் வாழ்ந்தும் புறக்கணிக்கப் பட்ட நோயுற்ற தாய் ...கூடவே கைக்குழந்தையான தம்பி திருச்சிற்றம்பலம் ...இப்படியான சூழலில் ஒரு நாள் தாயின் இறப்பின் பின் தந்தையின் உறவினர்களாலும் தந்தையாலுமே வேண்டாம் என ஒதுக்கப் பட்டு சித்தி வீட்டில் சித்தியின் கவனிப்பில் வளரும் நிலைக்குத் தள்ளப் பட்ட சோகம் நிறைந்தது பத்ரகிரிய்ன் இளம் பருவம் .

  பத்ரகிரி அவனது தம்பி திருச் சிற்றமபலத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவனாகக் கதையில் காட்டப் படுகிறான் .பின் எதற்காக தம்பி மனைவியுடன் காதல் கொள்கிறான் என்பது கொஞ்சம் நெருடுகிறது.அதிலும் விஷாலா போன்ற அன்ன அனுசரணையான மனைவி இருக்கையில் பத்ரகிரி ஏன் தன் வாழ்வை தானே இடியாப்பச் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் என்று படிக்கும் போது புத்தி கேள்வி கேட்க தவறுவதில்லை .

  அதிலும் தானே விருப்பப் பட்டு மேற்ப்படிப்புக்காக தம்பியை லண்டனுக்கு அனுப்பி விட்டு இத்தகைய செயலை பத்ரகிரி செய்யக் கடவது அத்தனை நயமாகப் படவில்லை.இதில் இவனை மட்டும் குற்றம் சொல்லி விட இயலாது. திருச் சிற்றம்பலத்தின் மனைவியான தையல் விலகிச் செல்லும் மைத்துனனிடம் சதா மையலுடன் பழகி அவனது கவனத்தைக் கலைப்பது வருத்தத்தையே தருகிறது.

  பத்ரகிரி... விஷாலா... தையல் மூவரும் சர்க்கஸ் பார்க்கச் செல்கிறார்கள் ...பாதியில் அங்கே எதோ கலவரமாகி கூட்டம் சிதறி ஓடியதில் விஷாலா கூட்டத்தில் காணாமல் போகிறாள் குழந்தையுடன் . தையல் மட்டும் பத்ரகிரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு காணமல் போன மனைவியைத் தேடும் சிந்தனை கூட அவனுக்குள் எழும்பா வண்ணம் இன்னும் கொஞ்ச நேரம் கடற்கரையில் நடந்து விட்டு பிறகு போகலாம் என அவனது புத்தியை பேசி மயக்கி திரிந்து போகச் செய்து நெடுநேரம் சென்று வீடு திரும்புவதாக நாவலில் ஓரிடம் வருகிறது.அதற்குப் பிந்தைய வரிகளில் "பிள்ளையைத் தொட்டிலில் இட்டு ஆட்டிக் கொண்டே விஷாலா அழுகிறாள்"படிப்பவர்களுக்கும் அவளது நிலையை எண்ணி வேதனையே மிஞ்சக் கூடும்.

  லண்டன் போவதற்கு முன்பு தனியாக இருக்க சிரமம் என்று தான் திருச்சிற்றம்பலத்தை வற்புறுத்தி அவனது படிப்பு முடிந்து அவன் திரும்பி வரும் வரை தான் அவனது அண்ணியுடன் இருப்பதாக மதரா பட்டினம் வருகிறாள் தையல் .பின்பு நடந்தது என்னவோ தையல் மற்றும் பத்ரகிரியின் தகாத உறவால் அவளுக்கு பிழை உண்டாக விஷாலா கோபித்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட , தையலுடன் ஓயாத மன உளைச்சலுடன் தனிக் குடித்தனம் செய்யும் பத்ரகிரிக்கு அதுவும் நிலைக்கவில்லை .

  பிரசவத்தின் பின் தையலின் மனநிலை பாதிப்படைந்து அவள் தான் பெற்ற பிள்ளையையே கொல்லக் கூடிய அளவில் மனச் சிதறல் அடைகிறாள். வைத்தியத்திலும் தேறாத நிலையில் பத்ரைரியால் அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தையும் போதிய போஷாக்கு இன்றி மரித்துப் போக சித்தம் கலங்கிப் போன பத்ரகிரி தையலை அவளது தாய் வீடானா கடையத்தில் சேர்த்து விட்டு சொல்லில் அடங்கா ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பெற்றுக் கொண்டு சிறு பிராயத்தில் தனது நங்கை சித்தி தன்னையும் தன் தம்பியையும் வளர்த்த அதே ஊருக்கு பித்துப் பிடித்தவன் போல திரும்புகிறான்.

  இதுவே பத்ரகிரியின் சிதிலபட்ட வாழ்வின் கதை ...அவன் தன் வாழ்வை மட்டும் சீரழித்துக் கொண்டானில்லை...கூடவே தான் மிகவும் நேசம் கொண்ட தன் தம்பி தன் மனைவி இப்படி எல்லோரது வாழ்வையும் சிக்கலாக்கி விடை தெரியாது நசிந்தவனானான் .

  அடுத்தது சதாசிவப் பண்டாரத்தின் கதை .இந்தக் கதையில் இவர் அறிமுகம் ஆகும் போதே நீலகண்டம் எனும் நாயுடன் நடந்து கொண்டே தான் அறிமுகமாகிறார்.பண்டாரம் திருவிடை மருதூரில் இருந்து மதராபட்டினம் நோக்கி நாயுடன் நடக்கத் தொடங்குகிறார். இடையில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்கின்றன .

  தன் தாய் எவ்வளவோ மனம் கசிந்து வற்புறுத்தியும் கூட தனது சன்யாச வாழ்க்கையை விட மனமில்லாமல் பற்றிக் கொண்டிருந்த சதாசிவத்தை நீலகண்டம் பலவாறு சோதிக்கிறது.நாயின் வாலைப் பற்றிக் கொண்டே போகும் சதாசிவப் பண்டாரம் தனது "பற்றற்ற தன்மையை தனக்கே மறுபடி " உறுதி செய்து கொள்ளும் வண்ணம் பல அவமானங்களைச் சகித்துக் கொள்கிறார்.

  குப்பை மேட்டில் படுத்து உறங்குகிறார். குப்பையில் இட்ட கழிந்து போன மிச்ச மீதிகளை உண்டு பசியாறுகிறார்.இறுதியில் கோயிலில் உட்கார்ந்த இடத்தில் சோறு கிடைக்கும் என்ற நிம்மதியான நிலையில் தான் நாய் அவரை அலைக்கழிக்கத் தொடங்குகிறது.நாயுடனான தனது நெடும் பயணத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை சந்திக்க நெருடுகிறது ...அவளுக்கும் பண்டாரத்துக்கும் சம்சார பந்தமும் ஏற்பட்டு அவள் பிள்ளை பெரும் சமயம் பண்டாரம் அவளை நிர்க்கதியாக தவிக்க விட்டு மீண்டும் நீலகண்டத்தை தொடர்ந்தே ஆகா வேண்டிய மனநிலைக்கு வருகிறார்.

  இடையிடையே மனம் கூக்குரல் இடுகிறது. "உனக்குப் பிறந்தது ஆணா...பெண்ணா ? போய்த்தான் பாரேன் ஒருமுறை !!! என்று !? பற்றை அறுத்தவர் செய்யும் காரியம் இதுவல்ல என்று பண்டாரம் நாயைத் தொடர்கிறார் செவ்வனே .இறுதியில் நாயும் பண்டாரமும் பட்டினத்தடிகள் சமாதிக்கு வந்து சேருகிறார்கள் .

  பண்டாரம் திடீரென்று நாயைப் போலவே நடந்து கொள்ளத் தொடங்குகிறார். அவரது அங்க சேஸ்டைகளைக் கண்டு அங்கிருந்த மக்கள் எல்லோரும் பண்டாரத்தை பைத்தியம் என்று நினைக்கிறார்கள் .

  முடிவாக அந்த சமாதியில் இருந்த ஒரு அறையில் பண்டாரம் ஜோதி வடிவாகி மறைகிறது. நாயையும் காணோம். அந்த அறையில் இருந்து "அத்தர் மணம்" கசிந்து பெருகுகிறது .இதைக் கண்டு மக்கள் பொருள் விளங்கா ஆச்சர்யம் அடைகின்றனர்.எல்லா சாதுக்களையும் போல சதாசிவப் பண்டாரத்தின் வாழ்வும் ஒரு கதையாகி முடிந்தது.

  அடுத்து திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாழ்க்கை :-

  திருச் சிற்றம்பலம் ஒரு "கணித விற்பன்னன் " கணிதத்தில் மேலும் ஆராய்ச்சிக் கல்வி பயிலவே அவன் லண்டன் செல்கிறான் .லண்டன் செல்ல கப்பல் பயணத்தில் சற்குணம் என்றொரு நண்பன் கிடைக்கிறான் சிற்றம்பலத்திற்கு ...சற்குணம் ஆடம்பரப் பிரியனாகவும்...சிற்றம்பலம் உயர் கணிதம் கற்க செல்லும் மாணவனாகவும் கப்பலில் அறிமுகமாகிக் கொள்கிறார்கள்.பின் அவர்களது நட்பு லண்டனிலும் தொடர்கிறது.

  முதலில் வாழ்க்கை தரத்தில் தாழ்ந்தவனாகக் காட்டப் படும் சிற்றம்பலம் தனது கல்வியின் மேன்மையாலும் தனது கணித அறிவாலும் இந்தியா திரும்புகையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவனாகிறான்.ஆனால் பெரிய தனவந்தரின் மகனான சற்குணம் முதில் விளையாட்டுப் பிள்ளை போல உள்ளசங்களில் ஆர்வம் மிக்கவனாக அறியப் பட்டாலும் அவனது மணம் எப்படியோ மாறிப் போக லண்டன் வாழ் கறுப்பினப் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுகிறான் ஒரு கட்டத்தில்.

  பெண்களை போகப் பொருட்கள் என்று மட்டுமே நினைத்து சுற்றித் திரிந்த அந்த வாலிபன் புரட்சிகரமாக மாறிப் போன மாயம் கண்டு சிற்றம்பலம் வியந்து அச்சம் கொள்கிறான் .சற்குணம் லண்டன் குளிருக்கு "நீயும் ஒரு பெண்ணின் துணை தேடிக் கொள்" என சிற்றம்பலத்திடம் கூறும் ஒவ்வொரு முறையும் சிற்றம்பலம் தன் மனைவியைத் தவிர தன் யாரையும் தொட விரும்பவில்லை என்று மறுக்கிறான்.நாவலில் இவனது மனப் பக்குவத்தைக் காணும் போது தையல் நாயகி இவனுக்கு ஏற்ற மனைவி இல்லையோ ! என்ற எண்ணம் வருவது இயற்க்கை.இப்பெர்ப் பட்ட கணவனுக்கு அவள் எப்படி அவனது அண்ணனுடன் இணைந்து துரோகம் இழைக்க முடிந்தது என்பது தான் வாழ்வின் மாய முடிச்சு போல!

  தனது கல்வி முடிந்து வெற்றியுடன் அவன் இந்தியா ...மதரா பட்டினம் திரும்புகையில் தான் தன் மனைவியை விட்டுச் சென்ற இடத்தில் அவள் இல்லாத நிலை கண்டு அவன் மணம் நிச்சயம் உடைந்திருக்கும் .இவன் வாழ்வில் விதி தையலின் ரூபத்தில் விளையாட்டுக் காட்டி விலகிச் சென்றது.

  அடுத்து கிருஷ்ணப்பக் கரையாளர் மற்றும் எலிசபெத்தின் மேல்மலை வாழ்க்கை :-

  பரம்பரை சொத்துக்களை எல்லாம் உல்லாச வாழ்வில் குடித்தும் பெண்களுக்கு செலவழித்துமே கரைக்கிறார் என்று புகார் கூறி க்ருஷ்ணப்பக் கரையாலரின் பங்காளி அவரது சொத்துக்களை எல்லாம் தானும் வாரிசு தாரர் என்ற முறையில் தனதாக்கித் தருமாறு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மனுக் கொடுக்கிறார், இதனால் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது . இதற்குள் கிருஷ்ணப்பர் மனம் மாறுகிறார்,
  இதில் இடைச் செருகலாய் எலிசபெத்தின் கதை அந்தக் காலத்தில் ஆங்கிலேயப் பெண் இந்திய ஆணுடன் கலந்தால் பிறக்கும் குழந்தைகளை மறுபடி லண்டன் செல்லும் போது உடன் அழைத்துச் செல்லும் அங்கீகாரம் இல்லை. அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் சட்டைக்காரிகள் என்ற பெயரில் இங்கே கிருஸ்த்தவ மிசன்களில் அனாதைகளாக வளர்க்கப் பட்டு "கம்பெனி உயர் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலைக்கு " அனுப்பப் படுவார்கள் .

  அப்படி அனுபப் பட்ட இளம்பெண்களில் ஒருத்தியே எலிசபெத். அவள் தனது இளம் பருவம் முதலே தனது அழகான தோற்றத்தின் காரணமாக பாலியல் தொந்திரவுக்கு உள்ளாகி முடிவில் அதையே தனது தொழிலாக தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு தனது இளமை எல்லாம் தேய்ந்து ஓய்ந்த பின் க்ருஷ்ணப்பருக்கு அறிமுகம் ஆகிறாள்.

  உடல் தேவை என்பதை மீறி இங்கு இருவருக்குமே மனத் தெளிவும் ...நிம்மதியும் தேவை ஆகி விடவே ...ஒரு கட்டத்தில் கிருஷ்ணப்பர் எலிசபெத்தை மேல்மலைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். தனது பங்காளியிடமும் தனக்கு வேறு எந்த சொத்துக்களும் வேண்டாம் மேல்மலை மட்டும் போதும் அதனால் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என சமாதானம் ஆகிறார்.

  மேல்மலை எலிசபெத்துக்குச் சொந்தமாகிறது. அங்கு அவள் மூலமாக ஒரு கால கட்டத்தில் தேயிலை பயிர் அறிமுகமாகிறது.இதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் எலிசபெத் ஒருமுறை லண்டன் செல்ல ஆசைப் படுகிறாள் .கிருஷ்ணப்பரும் "திரும்பி வந்து விட வேண்டும் " என்ற நிபந்தனையின் கீழ் சம்மதிக்கிறார். இப்படி முடிகிறது இவர்களின் கதை.

  மேலே சொல்லப் பட்ட இவரது வாழ்கை சம்பவங்களை வைத்து ஒப்பிடும் போது எலிசபெத்தின் வாழ்வே கொஞ்சம் சுகப் பட்டதாக சொல்லலாம் ...

  ஆரம்பத்தில் அவள் கஷ்டப் பட்டாலும் கடை நாட்களில் சிறிதே வாழ்க்கையை ரசிக்கும் சூழல் அவளுக்கும் கிருஷ்ணப்பருக்கும் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.

  ஆகா மொத்தத்தில் "யாமம்" அப்துல் கரீமின் அந்தர் தியானத்தோடு கரைந்து போக மற்றேல்லோருடைய வாழ்வும் அதனை ஒட்டியே நடை போட "எலிசபெத் " மட்டுமே ஆறுதல் தருகிறாள் இந்நாவலில் .மனித வாழ்வின் விசித்திரங்களைப் பற்றி மற்றுமொருமுறை அசை போட மிகச் சிறந்த வாசிப்பனுபவம் இந்நாவல் .

  கூடவே அத்தரைப் பற்றி வரும் வர்ணனைகள்... அதன் நறுமணம்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...?!

  விருப்பம் இருப்பவர் "யாமம்" வாங்கி வாசித்துப் பாருங்கள்.

  நூல்: யாமம்

  விலை ரூ 350

  உயிர்மை பதிப்பக வெளியீடு.


   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp