பெண்கள் எப்போதும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அந்த வகையில் முகத்துக்கு அழகு சேர்க்கும் புருவங்கள் பராமரிப்பு என்பது பலருக்கும் தேவையான ஒன்று.
புருவங்கள் சிலருக்கு மிகவும் அடர்த்தியாக இருக்கும். புருவங்கள் அழகாகத் தெரிய அதன் அடர்த்தியைக் குறைக்க வேண்டியிருக்கும். அழகு நிலையங்களில் இதனை சரிபடுத்துகின்றனர்.
சிலருக்கு மிகவும் மெல்லியதாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் அடர்த்தியாக வளர பல வகைகளில் மெனக்கெடுகின்றனர்.
அதற்கான சில இயற்கையான எளிய வழிகள் இதோ...
புருவங்கள் இயற்கையாகவே அடர்த்தியாக வளர்வதற்கு காலம் அதிகம் ஆகலாம். சில பொருள்களை பயன்படுத்துவதன் மூலமாக புருவங்களை அடர்த்தியாக ஆக்கலாம்.
அதிகமாகப் பிடுங்குதல்
சிலர் புருவங்கள் வளர்வதற்கு முன்னரே அதனை அழகுபடுத்த அழகு நிலையங்களுக்குச் சென்று புருவங்களில் உள்ள அதிகப்படியான முடிகளை பிடுங்குவார்கள்('eyebrows threading'). இது முற்றிலும் தவறு. உங்களுக்கு ஏற்கெனவே புருவம் அடர்த்தியாக இல்லையென்றால் அவை முழுமையாக வளரும்வரை நேரம் கொடுத்து பின்னர் சரி செய்யலாம்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சிக்கு உதவும் முதன்மையான பொருள். இதில் உள்ள ரிசினோலிக் அமிலம் புருவ மயிர்க்கால்களைத் தூண்டுகிறது. உறங்கும் முன் சுத்தமான பிரஷ் அல்லது பருத்தி துணியைப் பயன்படுத்தி புருவங்களில் சிறிதளவு விளக்கெண்ணெய் தடவி வர புருவங்கள் விரைவில் அடர்த்தியாக வளரும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய்யை புருவங்களில் மசாஜ் செய்து 20-30 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். இதனைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
கற்றாழை
சருமப் பராமரிப்புக்கு கற்றாழை மிக முக்கியமான பொருள். கற்றாழை, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நொதிகள் இதில் உள்ளன. இது புருவங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுவதுடன் விரைவான வளர்ச்சிக்கும் பயன்படும்.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையில் புரதம் நிறைந்துள்ளது, இது மயிர்க்கால்களை வேகமாக வளரச் செய்கிறது. வாரத்திற்கு ஒரு முறை முட்டையின் மஞ்சள் கருவை, புருவங்களில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்துவர புருவங்கள் அடர்த்தியாக வளரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.