பலா இலையில் வேக வைக்கப்படும் ஆந்திர ஸ்பெஷல் ‘பொட்டிகலு’ @ ரவா இட்லி!

இந்த ‘பொட்டிகலு’வுக்கு மணக்க மணக்க வெங்காய சாம்பார், தக்காளிச் சட்னி, கார சாரமாகத் தேங்காய்ச் சட்னி, புதினாச்சட்னி என்று வகைக்கொன்றாகச் செய்து வைத்துக் கொண்டு பொட்டிகலுவை இவற்றிலெல்லாம் இதம், பதமாகப்
பலா இலையில் வேக வைக்கப்படும் ஆந்திர ஸ்பெஷல் ‘பொட்டிகலு’ @ ரவா இட்லி!
Published on
Updated on
2 min read

நம்மூர் ரவா இட்லி போலத்தான் இருக்கிறது. ஆனால் ஆந்திராவில் இதை ‘பொட்டிகலு’ என்கிறார்கள். காரணம் பலா இலைகளை மடக்கிச் சிறு ஓலைப்பெட்டி தினுசில் மடித்து அதற்குள் ஒரு கரண்டி ரவா இட்லி மாவை விட்டு அவித்தெடுப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். மற்றபடி செய்முறை எல்லாம் நம்மூர் ரவா இட்லி அவித்தெடுப்பதைப் போல இட்லிப் பானையில் ஊற்றி வேக வைப்பது தான். இதற்கு எண்ணெய் தேவையில்லை என்பதோடு இட்லி வெந்து வரும் போது பலா இலையும், கருப்பு உளுந்தும், அரசியும் கலந்த ஒரு மணம் நாசியை நிரப்புகிறது... அடடா அந்த மணம் உடனடியாகப் பசியைத் தூண்டி உண்ணும் ஆவலை அடக்க முடியாததாக்கி விடுகிறது.

இந்த ‘பொட்டிகலு’வுக்கு மணக்க மணக்க வெங்காய சாம்பார், தக்காளிச் சட்னி, கார சாரமாகத் தேங்காய்ச் சட்னி, புதினாச்சட்னி என்று வகைக்கொன்றாகச் செய்து வைத்துக் கொண்டு பொட்டிகலுவை இவற்றிலெல்லாம் இதம், பதமாகப் புரட்டி எடுத்து திவ்யமாக உண்டு முடிக்கலாம். 

விரும்புபவர்கள் கும்மோணம் கடப்பாவைத் தொட்டுக் கொண்டு உண்ணலாம். 

அசைவைப் பிரியர்கள் மீன் குழம்பு, மட்டன்  கிரேவி, சிக்கன் கிரேவி, நண்டு மசாலா என்று கூட சமைத்து இதற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். 

மொத்தத்தில் ‘பொட்டிகலு’ சற்று அதிகமாக உண்டாலும் கூட உங்களது உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாத உணவு வகைகளில் ஒன்று.

கைக்குழந்தைகளுக்கு துளி நெய்யும், சர்க்கரையும் தொட்டுப் பிசிறி ஊட்டி விடலாம். வயதானவர்கள் தாளித்த தயிர் சேர்த்து சாப்பிடலாம். அபார ருசியுடன் மயக்கும்.

தேவையான பொருட்கள்:

அரிசி ரவை - 4 கப்
கருப்பு உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
பலா இலைகள் - தேவைக்கேற்ப

உப்பு - சிறிதளவு

செய்முறை:

கருப்பு உளுந்தை நன்கு ஊற வைத்து தோல் நீக்கி கிரண்டரில் இட்டு ஆட்டி எழுத்துக் கொள்ளவும், அதே போல அரிசியுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் கலந்து ஊறவைத்து அதையும் கிரைண்டரில் இட்டு நன்கு ஆட்டி எடுக்கவும். பிறகு இந்த இரண்டு மாவுக்கலவையையும் ஒன்றாக்கி மொத்தமாகக் கலக்கி உப்பிட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். குறைந்த பட்சம் 6 மணி நேரம் பமாவைப் புளிக்க வைத்த பின்னர் பலா இலைகளை சிறு ஓலைப்பெட்டிகல் போல மடக்கி அதில் மாவுக்கலவையை ஊற்றி இட்லிப் பானையில் வேக வைத்து எடுத்தால் பொட்டிகலு தயார்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இந்த பொட்டிகலு வெகு பிரபலமானது. நீங்களும் இதைச் செய்து பார்த்து ருசித்து விட்டுச் சுவை எப்படி இருக்கிறது என்று எங்களுக்கு எழுதுங்கள்.
 

Image courtesy: you tube

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com