இட்லி, தோசைக்கு கும்பகோணம் கடப்பா தொட்டுச் சாப்பிட்டிருக்கீங்களா?!

தமிழகத்தில் தஞ்சை, ஒரத்த நாடு, கும்பகோணம் உள்ளிட்ட ஏரியாக்களில் எல்லாம் கடப்பா என்றொரு ரெசிப்பி படு பேமஸ். அதென்னடா கடப்பா?!
இட்லி, தோசைக்கு கும்பகோணம் கடப்பா தொட்டுச் சாப்பிட்டிருக்கீங்களா?!

தமிழ்நாட்டின் டிரெட் மார்க் உணவுவகைகள் என்றால் அது  பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல், வடை தான். இதில் இட்லி, தோசை, பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள வழக்கமாக சாம்பார் மற்றும் சட்னி வெரட்டிகள் தான் வைப்பார்கள். ஆனால், தமிழகத்தில் தஞ்சை, ஒரத்த நாடு, கும்பகோணம் உள்ளிட்ட ஏரியாக்களில் எல்லாம் கடப்பா என்றொரு ரெசிப்பி படு பேமஸ். அதென்னடா கடப்பா?! ஆந்திராவில் கடப்பா என்ற பெயரில் ஒரு ஊர் இருப்பது தெரியும். ஆனால், இதென்ன சாம்பார் மாதிரியான ஒடு தொடுகறிக்கு கடப்பா என்று பெயர் வைத்திருக்கிறார்களே என்று தேடியதில் அருமையான கடப்பா ரெசிப்பியே கிட்டியது. அதன்படி கும்பகோணத்தில் பாரம்பரிய முறையில் சூப்பர் சுவையில் கடப்பா எப்படிச் செய்வார்கள் என் இன்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்...

  • விளக்கெண்ணெய் - 1 தேக்கரண்டி
  • பட்டை - 3
  • லவங்கம் - 4
  • ஏலக்காய் - 4
  • பிரியாணி இலை - 1
  • கல்பாசிப்பூ - 1
  • கிராம்பு - 3
  • மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • ஊற வைத்த முந்திரிப்பருப்பு - 6
  • ஊற வைத்த கசகசா - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகள் - சிறிதளவு
  • பச்சை மிளகாய் நறுக்கியது - 5
  • எலுமிச்சம்பழம் நறுக்கியது - 1/2 மூடி
  • பாசிப்பருப்பு - 1/2 கப்
  • தேங்காய்த்துருவல் -1/2 கப்
  • பெரிதாக நறுக்கிய வெங்காயம்- 1 கப்
  • தக்காளி பெரியது - 1
  • இஞ்சி நறுக்கியது =- 1 தேக்கரண்டி
  • பூண்டு - 7 பல்
  • உருளைக் கிழங்கு நறுக்கியது - 1 கப்

செய்முறை: 

கடப்பா செய்வதற்கு முதலில் துருவி வைத்த ஒரு கப் தேங்காய்த்துருவல், நறுக்கிய பச்சை மிளகாயில் பாதி, இஞ்ஜி, பூண்டு, ஊற வைத்த கசகசா, ஊற வைத்த முந்திரிப்பருப்பு இவற்றையெல்லாம் ஆட்டுரலில் இட்டு நன்கு பேஸ்ட் பதத்துக்கு ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடப்பா செய்வதற்கு இது தான் முதல்படி. அடுத்ததாக அடுப்பில் வாணலியை வைத்து அடுப்பு மூட்டி பாசிப்பருப்பை அதில் கொட்டி 1 நிமிடம் மட்டுமே கலர் மாறாது மிதமாக வறுக்கவும். 1 நிமிடத்துக்குப் பிறகு வாணலியை இறக்கி பாசிப்பருப்பை ஆற விடவும் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பி ஏற்றி அதில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு சிறிது நீர் விட்டு வறுத்த பாசிப்பருப்பை அதில் கொட்டவும். பின்பு அதனுடனேயே விளக்கெண்ணெய், மஞ்சள் தூள், தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், உருளைக் கிழங்கு, எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வேக விட வேண்டும். பொதுவாக மண் பாண்டத்தில் செய்தால் சுவையாக இருக்கும், ஆனால் மண் பாண்டம் இல்லாதவர்கள் வெறும் ஈயப்பாத்திரம் அல்லது ஸ்டீல் பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். இப்போது வேக விடப்பட்ட கலவையைப் பாருங்கள். கலவை நன்கு நிறம் மாறியிருப்பதோடு மணமும் எட்டூரை இழுக்கும் வண்ணம் மிக அருமையாக மூக்கை நெருடும்.  இப்போது கொதிக்கும் பருப்புக் கலவையில் நாம் முன்பே தயார் செய்து வைத்திருக்கும் மசாலா பேஸ்டை கொட்டவும்.. இப்போது மீண்டும் கலவையால் கிளறும் போது மசாலாவும், தேங்காய்க் கலவையும் ஒன்றாக இணைந்து விடும். அதனுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் கும்பகோணம் கடப்பா தயார். இதை அடுப்பிலிருந்து இறக்கும் முன்பாக கொத்துமல்லி, கறிவேப்பிலை இலை கிள்ளிப்போட்டு அரை மூடி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து முன்னரே எடுத்து வைத்த பட்டை லவங்கம், பிரியாணி இலை, கல்பாசிப்பூ சேர்த்து தாளிதல் செய்து இறக்கினால் சுவை! சும்மா சொல்லக்கூடாது சுவை நாவோடு சேர்த்து மனதையும் மயக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com