வாணி, ராணி தொடரில் நேற்று பூமிநாதன் குறிப்பிட்ட ‘உத்தம வடை’ ரெஸிப்பி!

அதென்ன பாதாம் வடை?! அதெப்படி உத்தம வடையாகும் என்கிறீர்களா? அதாவது எண்ணெயில் முழுக்காட்டிப் பொறிக்கப்படும் வடைகள் எல்லாம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கக் கூடிய பொல்லாத வடைகளாம்.
வாணி, ராணி தொடரில் நேற்று பூமிநாதன் குறிப்பிட்ட ‘உத்தம வடை’ ரெஸிப்பி!

நேற்று வாணி, ராணி மெகாத்தொடரில் ‘பாதாம் வடை’ என்ற புது ரெஸிப்பி ஒன்றைப் பற்றி அதில் வரும் பூமிநாதன் கதாபாத்திரம் கூறியது. இம்மாதிரி ரெஸிப்பிகளைக் கண்டுபிடிக்க அந்த வசனத்தை எழுதியவருக்குக் கடுமையான உழைப்பு தேவைப்பட்டிருக்கலாம். அது அத்தொடரின் வசனகர்த்தா பா.ராகவனின் கைவண்ணமாகவே இருக்கக் கூடுமென அவரது எழுத்துக்களை அறிந்தவர்களுக்கு எளிதில் தெரிந்திருக்கக் கூடும். பா.ரா தனது ‘ருசியியல்’ என்ற தொடரில் இந்த பாதாம் வடை எனும் உத்தம வடையைப் பற்றி முன்பே பகிர்ந்திருக்கிறார். அதென்ன பாதாம் வடை?! அதெப்படி உத்தம வடையாகும் என்கிறீர்களா? அதாவது எண்ணெயில் முழுக்காட்டிப் பொறிக்கப்படும் வடைகள் எல்லாம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கக் கூடிய பொல்லாத வடைகளாம். ஆனால் இந்தப் பாதாம் வடை அப்படியல்ல, இதனோடு மாவு சேர்க்கப் படுவதில்லை என்பதால் இதில் கொலஸ்ட்ராலின் சதவிகிதம் குறைவு எனும் அர்த்தத்தில் இதை உத்தம வடை என்கிறார் பா.ரா.

சரி மெகாத்தொடரில் பார்ப்பதோடு நிறுத்தி விட முடியுமா என்ன? அப்படி ஒரு வடைக்கான ரெஸிப்பி எங்கிருக்கிறது என்று இணையத்தில் தேடியதில் கடைசியில் கிடைத்தே விட்டது.

இதோ அதற்கான ரெஸிப்பி இது தான். உத்தம வடை சாப்பிட ஆர்வமிருப்பவர்கள் பேஷாக இதை முயற்சித்துப் பாருங்கள். சத்துக்குச் சத்து, ருசிக்கு ருசி!

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு: ஒரு பிடி
முட்டைக்கோஸ்: கொஞ்சம்
வெங்காயம்: நான்கைந்து சிறு வெங்காயங்கள்
பூண்டு: 3 பல்
உப்பு: தேவையான அளவு
மிளகு: 1 டீஸ்பூன்

செய்முறை:

பாதாம் பருப்பு மற்றும் பூண்டை அரைத்துப் பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கோஸ் மற்றும் வெங்காயத்தைக் கலந்து தேவையான அளவு உப்பும், மிளகும் சேர்க்கவும். பிறகு இந்த மாவுக் கலவையை நன்றாகக் பிசிறி விட்டு மைக்ரோ மசால் வடைகள் போல குட்டிக் குட்டியாக கைகளில் தட்டி எடுத்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கலாம். அல்லது மைக்ரோ வேவிலும் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கலாம். அதை அப்படியே சாப்பிட்டாலும் ருசியாகத் தான் இருக்கும் அல்லது பா.ரா விவரித்திருப்பது போல சுடச்சுட உருக்கிய நெய்யில் இரண்டு நிமிடங்கள் போட்டுப் புரட்டி ஊறவைத்து எடுத்துச் சாப்பிட்டாலும் சுவையாகத் தான் இருக்கும். ஆனால், நெய்யில் போட்டுப் புரட்டிய பின் அந்த வடையை உத்தம வடை என்று என்னால் சொல்ல இயலாது. அது அந்த வடையை ருசிப்பவர்களின் ஆரோக்யத்தைப் பொறுத்தது.
 

Thanks to writer PaRa.

Image : Representional purpose only

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com