புட்டிப்பால் விஷயத்தில் ரொம்பவும் பிடிவாதமாக இருக்காதீர்கள் அம்மாக்களே!

இயற்கையில்; பிரசவமான எல்லாத் தாய்மார்களிடத்தும் தங்களது குழந்தையின் பசியைப் போக்கிடத் தேவையான பாலைச் சுரக்கும் தகுதி உண்டு.
புட்டிப்பால் விஷயத்தில் ரொம்பவும் பிடிவாதமாக இருக்காதீர்கள் அம்மாக்களே!

தமிழகத்தில் 18.8 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள் என்று ‘யுனிசெப்’ நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. சிலர் வேலைப்பளு காரணமாகவும், சிலர் தங்களது குழந்தைக்குத் தாய்ப்பால் போதவில்லை என்ற காரணத்தாலும், மேலும் சிலர் தாய்ப்பாலூட்டுவதால் அழகு கெட்டு விடும் என்ற காரணத்தாலும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து புட்டிப்பாலைப் பழக்கத் தொடங்குகின்றனர். புட்டிப்பால் குழந்தையின் அந்த நேரத்து வயிற்றுப் பசியைத் தீர்க்க உதவுமே தவிர அதில் குழந்தையின் பிற்கால ஆரோக்ய வாழ்வைக் கட்டமைப்பதற்கான எந்த ஒரு சிறப்பு அம்சங்களும் இல்லை என்பதை அந்தந்த புட்டிப்பால் நிறுவனங்களே அவரவர் பால் டப்பாக்களில் அச்சிட்டு விற்பனை செய்கின்றன என்பது நாமறிந்த உண்மை. ஏனெனில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதோடு மட்டுமல்ல, குழந்தையின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும் சக்தியும் கூடத் தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு. எனவே தாய்ப்பாலுக்கு ஈடாக புட்டிப்பாலை எப்போதுமே மதிப்பிடவே முடியாது.

பெண்களிடையே இந்த எண்ணத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் பெண்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே இனியும், பக்கத்து வீட்டுக் குழந்தை புட்டிப்பால் குடித்து கொழு,கொழுவென்று இருக்கிறதே என்று உங்கள் குழந்தைக்கும் தாய்ப்பால் போதவில்லை எனப் புட்டிப்பால் கொடுத்துப் பழக்க நினைக்க வேண்டாம். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் போதவில்லை என்ற நினைப்பெல்லாம் இன்றைய நாகரீக அம்மாக்களின் வீணான மனப்பிராந்தி, அப்படி நினைத்துத்தான் பெரும்பாலான இளம்அம்மாக்கள் தங்களது குழந்தைகளை தாய்ப்பாலில் இருந்து புட்டிப் பாலுக்கு பழக்கி விடுகிறார்கள். மனிதர்கள் மட்டும் தான் இப்படி புட்டிப்பால் குடித்துப் பழகி இருக்கிறார்களே தவிர குட்டி போட்டுப் பால் கொடுக்கும் மரபைச் சார்ந்த பிற விலங்குகளைப் பாருங்கள், அவற்றில் எந்த ஒரு தாய்க்கும், தன் குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்ற பிரச்னையே இருப்பதில்லை. இயற்கையில்; பிரசவமான எல்லாத் தாய்மார்களிடத்தும் தங்களது குழந்தையின் பசியைப் போக்கிடத் தேவையான பாலைச் சுரக்கும் தகுதி உண்டு. ஆனால் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக நம்முள் காலம், காலமாக நிலவி வரும் சில மாறுபட்ட கருத்துகள், மற்றும் முரண்பாடுகளால் தற்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது எனும் அத்யாவசியமே அறுகி வருகிறது.

  • சிசேரியன் டெலிவரியா அப்போ குழந்தைக்கு குறைந்தபட்சம் 5 நாட்களாவது புட்டிப்பால் தான்...
  • தாய்ப்பால் குடித்துப் பழகிய குழந்தை மணிக்கொரு தரம் பசிக்கு அழுகிறதா? உடனே தாய்ப்பால் போதவில்லை என புட்டிப்பாலையும் அதனுடன் சேர்த்துக் கொடுத்துப் பழக்கி.. நாளடைவில் குழந்தை தாயிடம் பாலருந்தும் பழக்கத்தையே மறக்கடித்து விடுவது.
  • வேலைக்குப் போகும் அம்மாவா.. அப்போ புட்டிப்பால் கொடுத்துப் பழக்குவது தான் குழந்தைக்கும், அம்மாவுக்கும் நல்லது.
  • ஷிஃப்ட் முறையில் வேலை பார்க்கும் அம்மாவா? அப்போதும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு புட்டிப்பால் தான் சரியாக இருக்கும்.
  • அப்படியெல்லாம் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் அம்மாக்கள் என்றாலும் கூட தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் போஷாக்கு, புட்டிப்பால் குழந்தையுடன் ஒப்பிடுகையில் சோனியாகத் தெரிந்தால் அப்போதும் கூட உடனடி சாய்ஸாக கண் முன்னே வந்து நிற்பது லாக்டோஜனும், Non மில்க் பவுடரும் தான்.

இந்த புட்டிப்பால் வகைகள், குழந்தைகளின் போஷாக்கிலும், தோற்றப்பொலிவிலும் அம்மாக்களின் மனதுக்குத் திருப்தி தருகிற வகையிலான சில உடனடி மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் கூட அவற்றின் பிற்கால எதிர்மறைப் பயன்களை நோக்கும் போது அவை விரும்பத்தக்கவையாக இல்லை. இதைப்பற்றிப் பேசும்போது மகப்பேறு மருத்துவரான டாக்டர் ரமாதேவி கூறுவதைக் கேளுங்கள்;

  1. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது இளம் அம்மாக்களுக்கு முதலில் தேவைப்படுவது விடாப்பிடியான பொறுமை. குழந்தை எத்தனைக்கெத்தனை வலிந்து தனது தாயிடம் தாய்ப்பால் அருந்த முயற்சிக்கிறதோ, அத்தனைக்கத்தனை அதன் பசி தீர்வதோடு மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக அந்தக் குழந்தைக்கு முயன்றால் வெற்றி கிடைக்கும் என்ற அடிப்படை நம்பிக்கையும் வளரத் தொடங்கும்.
  2. தாய்ப்பால் ஊட்டுவது என்பது குழந்தையின் பசி தீர்க்கும் செயல் மட்டுமல்ல, அது அம்மாவுக்கும், குழந்தைக்குமான அன்பை மேலும் வலுவடையச் செய்யும் ஒரு விதமான உளவியல் பிணைப்பூக்கி! குழந்தைக்குப் பாலூட்டுவதை வெறும் கடமையெனச் செய்யாமல் எத்தனையோ தாய்மார்கள் குழந்தையின் தலைமுடியைக் கோதியவாறோ, அல்லது முழு உடலையும் மென்மையாகத் தழுவியவாறோ, அல்லது குழந்தையின் மிருதுவான பாதங்களையும், பட்டுப் போன்ற உள்ளங்கைகளையும் மசாஜ் செய்தவாறோ பாலூட்டிக் கொண்டிருப்பதை அவரவர் வீடுகளில் நாம் கண்டிருக்கலாம். இதுவே சரியான முறை.
  3. மணிக்கொரு தரம் குழந்தை பசியால் அழுதால் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம் கற்பித்துக் கொள்ளக் கூடாது. இளம் அம்மாக்கள் குறைந்த பட்சம் 6 மாத காலம் வரையிலாவது அதையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டு மணிக்கொரு தரம் குழந்தைக்குப் பாலூட்டுவதை தொடர வேண்டும். முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் 10 மாதம் வரையிலாவது குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம் என்பார்கள். இப்போது அதையும் 6 மாதங்களுக்கு மட்டுமேனும் எனக் குறைத்து விட்டார்கள். 6 மாதங்களின் பின் குழந்தைக்கு திட உணவுகளைக் கொஞ்சம், கொஞ்சமாகப் பழக்கி விடலாம். ஆகவே அம்மாக்கள் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது வெறும் 6 மாதங்களுக்கு மட்டும் தான் எனும்போது அதை மிக, மிகப் பொறுமையுடனும், சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும்.
  4. குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை எனக்கருதி உடனே புட்டிப்பாலையும் அவ்வப்போது தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கத் தொடங்கினால் பிறகு குழந்தை ஓரிரு நாட்களிலேயே புட்டிப்பாலுக்கு நன்கு பழகி விடும். பிறகு குழந்தையே தாய்ப்பாலைப் புறக்கணித்து விட்டு புட்டிப் பாலை விரும்பத் தொடங்கி விடும். ஏனெனில் தாய்ப்பால் என்பது குழந்தை தன் முயற்சியால் அருந்த வேண்டிய உணவு, ஆனால் புட்டிப்பால் அப்படியல்ல பால் புட்டிகளின் ரப்பர் மூடிகள் இப்போதெல்லாம் குழந்தைகள் வெகு எளிதாகப் பாலை உறிஞ்சிக் குடிக்கும் வண்ணம் மிக செளகரியமான முறையில் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் குழந்தை கஷ்டப்பட்டு தாய்ப்பாலை உறிஞ்சுவதை விட புட்டிப்பாலில் எளிதாக பாலருந்தலாமே என்று குழம்பிப் போய் முடிவெடுத்து விடுகிறது. இத்தகைய மாற்றங்கள் உளவியல் ரீதியாகவும் குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் மகப்பேறியல் வல்லுனர்கள்.
  5. அதுமட்டுமல்ல, புட்டிப்பாலுக்கு பழகி விட்ட குழந்தை, பால் புட்டியின் ரப்பர் மூடி சரியாக மூடப்படாத சமயங்களில் எல்லாம் அடிக்கடி காற்றையும் சேர்த்துக் குடித்து வயிற்று உபாதையால் அவஸ்தைக்குள்ளாகும் நிலையும் ஏற்படுவது வழக்கமாகி விடுகிறது. அதோடு குழந்தை பாலருந்திய பின் ஒவ்வொருமுறையும் பால்புட்டிகளை சரியான முறையில் கொதிக்கும் நீரிலிட்டு கழுவ மறந்தால் பின்னர் குழந்தைக்கு அதன் மூலமாகப் பாக்டீரியா தொல்லை ஏற்படும் வாய்ப்பும் உண்டாகி விடுகிறது. இதனால் அடிக்கடி வயிற்று வலியால் குழந்தை அவஸ்தைப்பட நேரலாம்.
  6. அதுமட்டுமல்ல தாய்ப்பாலில் இருந்து புட்டிப்பாலுக்கு மாறும் குழந்தை வெகு எளிதாக அதற்குப் பழகி விடுவதோடு, மேலும் மேலும் அதையே அருந்தத் தொடங்கும் போது அந்தக் குழந்தையின் தாடைப்பகுதி மற்றும் பால் பற்கள் முளைக்கும் முறையிலும் மாறுதல் ஏற்படத் தொடங்குகிறது. இது குழந்தையின் வளரிளம் பருவத்தின் போது அம்மாக்களை பல் மருத்துவர்களின் பின்னே அழைய வைக்கும் அளவுக்கு பின்னாட்களில் சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விடுகிறது.
  7. தாய்ப்பாலில் இருக்கும் சர்க்கரையின் அளவு இயல்பானது. ஆனால் புட்டிப்பாலில் குழந்தையின் சுவைக்காக நாம் சேர்க்கும் சர்க்கரையால் நாளடைவில் குழந்தையின் மூளை மிக விரைவான வளர்ச்சியடையத் துவங்குகிறது. இது இயற்கையான குழந்தை வளர்ச்சி முறைக்கு முரணானது.
  8. அதோடு கூட புட்டிப்பால் அருந்திப் பழகிய குழந்தைகளே பெரும்பாலும் டயபடீஸ், ஹைப்பர் லிப்பிடீமியா, ஒபிஸிட்டி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளுக்கும் உள்ளாக நேரிடும் அபாயகரமான வாய்ப்புகள் அதிகம்.
  9. இந்தத் துயரங்களிலிருந்தெல்லாம் நமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமெனில் அம்மாக்களே தயவு செய்து குழந்தைகளுக்கு புட்டிப்பாலூட்டும் விஷயத்தில் ரொம்பவும் பிடிவாதாமாக இருக்காதீர்கள். ” தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல அம்மாக்களுக்குமே கூட கடவுள் தந்த வரமே!”

Image courtesy: babycenter.ca

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com