சுஜாதா பட்டீல்: மகாராஷ்டிரத்தில் அதல பாதாளத்துக்குச் செல்லவிருந்த போலீஸ் இமேஜைத் தனியாளாக தூக்கி நிறுத்திய பெண் போலீஸ் அதிகாரி!

விரைவில் சட்டரீதியாக  தத்தெடுப்புக்கான வேலைகளை முடித்து விட்டால் அவள் எனது நான்காவது குழந்தையாவாள். தத்தெடுத்த பின்பு குழந்தை என்னுடன் வசிப்பதும், அவளது சொந்தத் தாயுடன் வசிப்பதும் அவளது குடும்பத்தாரின
சுஜாதா பட்டீல்: மகாராஷ்டிரத்தில் அதல பாதாளத்துக்குச் செல்லவிருந்த போலீஸ் இமேஜைத் தனியாளாக தூக்கி நிறுத்திய பெண் போலீஸ் அதிகாரி!

மகாராஷ்டிர மாநிலம் அம்பலிகாட்டில் 26 வயது அனிகெட் கொதல்லி எனும் இளைஞர் சமீபத்தில் போலீஸ் கஸ்டடி விசாரணையின் போது சட்டத்திற்குப் புறம்பாக போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நிகழ்ந்த இந்தப் படுகொலையைக் கண்டித்து 5 போலீஸ்காரர்களும் உதவியாளர் ஒருவரும் அச்சமயத்தில் கைது செய்யப்பட்டனர். அனிகெட்டை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் போது போலீஸாரின் முரட்டுத்தனமான தாக்குதலால் அவன் இறந்து விட அதை வெளியுலகத்துக்குத் தெரியாமல் மறைக்க இந்த 5 போலீஸாரும் முயன்றுள்ளனர். அதற்காக உதவியாளர் மூலமாக அனிகெட்டின் சடலத்தை அடையாளம் தெரியாதவாறு எரிக்க முயன்றுள்ளனர். மேற்கண்ட குற்றங்களுக்காக உதவியாளர் உட்பட அந்த 5 காவலர்களும் ஐபிசி செக்சன் 302( கொலை), செக்சன் 201 ( தவறான தகவல் அளித்து விசாரணைக் குற்றவாளியை மறைக்கும் செயலுக்கு காரணமாதம்), செக்சன் 303 (வேண்டுமென்றே திட்டமிட்டு காயமுண்டாக்குதல், செக்சன் 34 ( ஒரே நோக்கம்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

படுகொலையான அனிகெட் கொதல்லிக்கு வயதான தாயும், மனைவியும், மூன்று வயது மகளும் இருக்கிறார்கள். இவர்களை நிர்கதியாக விட்டுவிட்டு அனிகெட் பரிதாபமாக இறந்து விட்டார்.

இந்தக் கொலை வழக்கு பரபரப்பான கட்டத்தை அடைந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பேசுபொருளாகவும் ஆனதும் சுதாரித்துக் கொண்ட மகாராஷ்டிர அரசு போலீஸ்காரர்கள் மேல் பொதுமக்களுக்கு வெறுப்பும், அவநம்பிக்கையும் வந்து விடக்கூடத் எனக்கருதி, அனிகெட்டின் இறப்புக்கு இழப்பீடாக ரூ 10 லட்சம் இழப்பீடாக வழங்க முன்வந்தது. அதுமட்டுமல்ல அரசே தன் செலவில் பப்ளிக் ப்ராஸிக்கியூட்டர் ஒருவரை நியமித்து அவரது கொலைக்கான நீதியைப் பெற்றுத் தர வழக்கை விரைவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அதே மாநிலத்தைச் சேர்ந்த சுஜாதா பட்டீல் எனும் பெண் டி.எஸ்.பி ஒருவர் தாமாக முன் வந்து அனிகெட்டின் மூன்று வயது மகளுக்கு வளர்ப்புத் தாயாக விரும்புவதாக தெரிவித்துள்ளார். தெரிவித்ததோடு நில்லாமல் தனது உயரதிகாரியான விஸ்வாஸ் நங்ரி பட்டீலிடம் கடிதம் மூலமாக அதற்கான அனுமதியையும் கோரியுள்ளாராம். அவரும் சுஜாதாவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு அனிகெட் குடும்பத்தாரிடம் சென்று சுஜாதாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறித்தியிருக்கிறார். ஏனெனில் போலீஸ் கஸ்டடியில் இருக்கையில் தான் குடும்பத் தலைவனான அனிகெட் கொலை செய்யப்பட்டார் என்பதை அந்தக் குடும்பத்தாரால் அத்தனை எளிதில் மறந்து விட முடியாதே! அவர்களால் மற்றொரு போலீஸ் அதிகாரியை அத்தனை எளிதில் நம்ப முடியுமா? எனவே விஸ்வாஸ் பட்டீல், தனது சக அதிகாரியான சுஜாதாவின் விண்ணப்பத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் பரிந்துரைத்திருக்கிறார்.

டி.எஸ்.பி சுஜாதா பட்டீலுக்கு இரு மகன்கள் ஒரு மகள் என முன்னதாக 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது இரு மகன்களும் சர்வதேச அளவிலான கால்பந்து ஆட்டக்காரர்கள். 18 வயது மகள் சமர்த்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டில் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்ட்டராக தனது பணியைத் துவக்கிய சுஜாதா கடந்த 29 வருடங்களாக நியாயமான போலீஸாக நடந்து கொண்டவராக அவர் பணியிலிருந்த வட்டாரங்களில் அறியப்படுகிறார். 

சுஜாதாவின் கணவர் ஆர்டிவோ இன்ஸ்பெக்டராகப் பணியிலிருக்கிறார். தத்தெடுப்பு விஷயத்தில் சுஜாதாவின் குடும்பத்தாரைப் பொருத்தவரை அனைவருக்கும் அவரது கனிவான நோக்கத்தின் மீது பெருமதிப்பு இருப்பதாகத் தெரிகிறது.

தன்னுடைய உதவும் முயற்சியைப் பற்றிப் பேசும் போது, சுஜாதா கூறுவது, என்னால், மகனை இழந்த அனிகெட் கொதல்லியின் அம்மாவுக்கு ஒரு மகனைத் தேடித்தர முடியாமல் போகலாம், கணவனை இழந்த அந்த அப்பாவி மனைவிக்கு மீண்டும் கணவனைத் தர இயலாமல் போகலாம், ஆனால் தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையே அறியாதிருக்கும் அந்த மூன்றுவயதுக் குழந்தைக்கு வெகு நிச்சயமாக ஒரு தாயாக இருக்க முடியும். அவளது எதிர்கால கல்வித்தேவை, வாழ்க்கைத் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். விரைவில் சட்டரீதியாக  தத்தெடுப்புக்கான வேலைகளை முடித்து விட்டால் அவள் எனது நான்காவது குழந்தையாவாள். தத்தெடுத்த பின்பு குழந்தை என்னுடன் வசிப்பதும், அவளது சொந்தத் தாயுடன் வசிப்பதும் அவளது குடும்பத்தாரின் விருப்பத்தைப் பொருத்தது.

சுஜாதாவின் இந்த முடிவைப் பாராட்டிப் பேசுகையில், ஹிங்கோலி எஸ்பி அரவிந்த் சாவ்ரியா குறிப்பிடுவது; சுஜாதா தனது நல்லெண்ணத்தால் மிகுந்த மரியாதைக்குரியவராகி விட்டார். போலீஸாரில் நலவர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். சக போலீஸ் அதிகாரியாக அவர் எங்கள் அனைவருக்கும் பெருமை தேடித் தந்தவராகி விட்டார். சமூகத்தின் முன்னிலையில் இது ஒரு முன்னுதாரண சம்பவம். மக்களிடையே போலீஸ்காரர்களின் இமேஜைத் தூக்கி நிறுத்த இது போன்ற இன்னும் பல நல்ல முயற்சிகள் தொடர வேண்டும். என்றார்.

Image courtesy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com