Enable Javscript for better performance
என் அம்மா பெரிய படிப்பெல்லாம் படித்தவர் இல்லை!- Dinamani

சுடச்சுட

  
  fb

  குழந்தைகளுக்கான மாற்று கல்வி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார் சென்னையைச் சேர்ந்த மோகன லட்சுமி. அவரின் அனுபவங்கள்:

  'அம்மா தான், என்னுடைய மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்காக செயல்படும் சர்வதேச தொண்டு நிறுவனமான யுனிசெப்பில், என் தாயார் விமலா பணிபுரிந்தார். பள்ளியில் நான் இருந்த நாட்களை காட்டிலும், அம்மாவுடன் பயணம் செய்த நாட்களே அதிகம். எல்லாக் குழந்தைகளும் வகுப்பில் இருக்கும்போது, என்னை மட்டும், அடிக்கடி ஸ்கூலுக்கு லீவு போடச் சொல்லி, தன்னுடன் ஏன் அழைத்துப் போகிறார் என்று, வியப்பாக இருக்கும். பலமுறை இதை அவரிடமே கேட்டிருக்கிறேன். அதற்கு, 'பள்ளியில் படிக்கும் பாடம் மட்டும் போதாது. உன்னைச் சுற்றி நடப்பவைகளைப் பற்றிய அனுபவ அறிவு வேண்டும். அது தான் உன் வாழ்க்கைக்கு உதவும் உண்மையான கல்வி,' என்பார்.

  ஐந்து, ஆறு வயதில், அம்மா சொன்னதன் அர்த்தம் முழுமையாகப் புரியாவிட்டாலும், தொடர்ந்து எட்டு மணி நேரம் வகுப்பறையில் அமர்ந்திருப்பதைவிட, அம்மாவுடன் புதிய, புதிய இடங்களுக்குச் செல்வது மிகவும் பிடித்திருந்தது.

  என் அம்மா பெரிய படிப்பெல்லாம் படித்தவர் இல்லை. பள்ளி இறுதி வகுப்பு வரையே படித்திருந்தார். வீட்டில் இருந்தால், எல்லா அம்மாக்களையும் போலவே சமைப்பார். என்னையும் கவனித்துக் கொள்வார். ஆனால், வெளியில் அவரின் செயல்பாடு பிரமிப்பாக இருக்கும். பல தரப்பு குழந்தைகளின் மறுவாழ்விற்கான திட்ட செயல்பாடு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என்று எதுவாக இருந்தாலும், மிக நேர்த்தியாக செய்வார். பல நூறு திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக பணி செய்ததற்காக விருதுகளைப் பெறுவதைப் பார்க்கும் போது, எனக்கு மேலும் பிரமிப்பாக இருக்கும். அப்போதே என்னையும் அறியாமல், பெண் என்றால் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

  என்னுடைய குடும்பம் பழமையான பழக்கங்களைக் கொண்ட கூட்டுக் குடும்பம். வெளியில் சென்று வேலை பார்த்த, முதல் பெண் என் அம்மாதான். பிளஸ் 2 முடிக்கும் வரை, கூட்டுக் குடும்பத்தில், ஒரு மினி ஸ்கூல் போல, 22 குழந்தைகளுடன் வளர்ந்தேன். அனுசரித்துப் போவது, விட்டுக் கொடுப்பது என்று எல்லா நல்ல பழக்கங்களையும், கற்றுக் கொள்வதே தெரியாமல், கற்றுக் கொண்டேன். 22 குழந்தைகளுக்கு மத்தியில், தனித்தன்மையுடன் இருக்க முயற்சி செய்வேன்.

  பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் என் அம்மாவிடம், 'கல்லூரிக்குச் சென்று, தினசரி வகுப்புகளில் தினமும் 8 மணி நேரம் அமர்ந்து கற்க என்னால் முடியாது’ என்று சொல்லி விட்டேன். ஆனாலும், உனக்கு விருப்பமான ஒன்றை சிரத்தையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்மாவும் குடும்பத்தினரும் சொன்னார்கள். ஏர்ஹோஸ்டஸ் படிப்புடன் அஞ்சல் வழிக் கல்வியில் இளங்கலையில் சேர்ந்தேன். அத்துடன், நிகழ்ச்சி தயாரிப்பு, தொகுப்பு என்று, பல வேலைகளையும் சுயமாகச் செய்தேன். 21 வயதில், ஒரு கம்பெனியின் பிராண்ட் மேனேஜர்' ஆனேன். சில லட்சங்களை லாபமாக சம்பாதிக்க முடிந்தது. ஓரளவிற்கு பக்குவம் வந்து விட்டதாகவும் உணர்ந்தேன். இதுவரை செய்த வேலைகளில் இருந்து, சற்று இடைவெளி எடுத்து, முழு நேர வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்று தோன்றியது.

  விண்ணப்பித்த போது, அஞ்சல் வழி கல்வியில் படித்தவர்களுக்கு, இந்தியாவில் எந்த பல்கலைக்கழகத்திலும், மேல் படிப்பிற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தது. நம்முடைய கல்வித் திட்டம் என்னை கவர்ந்ததே இல்லை. பள்ளி, கல்லுôரியில், கற்றுக் கொடுப்பது நடைமுறைக்கு ஒத்து வருகிறதா என்றால் அதுவும் பூஜ்யம் தான்.

  சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில், எம்.பி.ஏ., படிக்க இடம் கிடைத்தது. திருமணம் நிச்சயம் செய்த பிறகே செல்ல வேண்டும் என்று என் வீட்டில் சொன்னார்கள். அதன்பின், சிங்கப்பூர் சென்றேன்.

  அங்கே சென்ற பிறகே, நான் என்ன எதிர்பார்த்தேனோ அதைப் போன்ற கல்வி கிடைத்தது. நம்முடைய கல்வி முறைக்கும் நடைமுறை எதார்த்தத்திற்கும் இருக்கும் மிகப் பெரிய இடைவெளி அங்கு இல்லை. என்ன படிக்கிறார்களோ, அதையே நடைமுறை வாழ்க்கையிலும் செய்கின்றனர்.

  பள்ளி வகுப்புகள் அரை நாள் மட்டும்தான். வகுப்புகள் முடிந்ததும், குழந்தைகள் வீட்டிற்கு செல்வதில்லை. காபி ஷாப் போன்ற பொதுவான இடங்களுக்குச் சென்று, தாங்கள் விரும்பும் அசைன்மென்ட்டைச் செய்வர். மூன்றாவது, நான்காவது படிக்கும் குழந்தைகள்கூட, தனியாக மெட்ரோ ரயில் பிடித்து, பொது இடங்களில் அமர்ந்து, தங்களுக்குப் விருப்பமான திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பர்.

  சிங்கப்பூர் கல்வி முறையில் பயிற்சி பெறும் குழந்தைகளிடம் இருக்கும் தெளிவு, நம் குழந்தைகளிடம் இல்லை. அதனால் அதுபோன்ற கல்வி முறையை இங்கு செயல்படுத்த விரும்பி 2012-ஆம் ஆண்டில் இருந்தே திட்டமிட்டேன். ஆரம்பப் பள்ளியிலேயே, தான் விரும்பிய துறையைத் தேர்வு செய்து, எதிர்காலத்தல் அதை தொழில் ரீதியிலும் செயல்படுத்த, வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுதான் என் எம்.பி.ஏ., படிப்பின் திட்ட அறிக்கை.

  இதை சிங்கப்பூர் அமைச்சகத்தின் மூலம், பல பள்ளிகளில், அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்தேன். 2016-இல் தமிழகம் திரும்பியவுடன், இந்த வாய்ப்பை நம் குழந்தைகளுக்கும் தர விரும்பினேன். செயல்படுத்துவதில் நம்மிடம் உள்ள நடைமுறை சிக்கலை புரிந்து கொள்ள, தமிழகத்தின் குட்டி ஜப்பான் எனப்படும் தொழில் நகரமான சிவகாசியில், ஒன்றரை ஆண்டுகள் தங்கி, குழந்தைகளை கவனித்தேன்.

  சிவகாசி, முழுக்கவே தொழில் நகரம். முறையான தொழிற் கல்வி இல்லாமல், அனுபவ அறிவைக் கொண்டு, மூன்று, நான்கு தலைமுறைகளாக தொழில் செய்பவர்கள். தற்போதைய தலைமுறையினருக்கும் தொழில் ஆர்வம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவே சிவகாசியை தேர்வு செய்தேன். கிட்ஸ் புரோனர் திட்டத்தை அங்கு செயல்படுத்திய போது, ஒரு விஷயம் புரிந்தது. எல்லா குழந்தைகளுக்குள்ளும் நேர்மறை எண்ணம், புதியதை கற்க ஆர்வம், அன்பு, சுற்றுசூழல் மீது அக்கறை ... என்று எல்லா நல்ல விஷயங்களும் இயல்பாகவே உள்ளது.
   - கீதா
   ( அடுத்த இதழில்...)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai