21 வயது இளம்பெண் தன் படிப்பில் சாதித்த பெருமைகளை எல்லாம் தூசாக்கிய ‘ரிலேஷன்ஷிப்’ துரோகம்!

ஒரு உறவில் இருந்து வெளிவருவதென்றால்... இளம்பெண்கள், தாங்களே அதைப் புத்திசாலித்தனமாகக் கையாள முடிந்தால் மட்டுமே அப்படியானவற்றைத் தனியாகச் சமாளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு கொலை வரை
21 வயது இளம்பெண் தன் படிப்பில் சாதித்த பெருமைகளை எல்லாம் தூசாக்கிய ‘ரிலேஷன்ஷிப்’ துரோகம்!

ரிலேஷன்ஷிப் துரோகம் குறித்து கடந்த வாரத்தில் வாசித்த செய்தி ஒன்றின் தாக்கத்திலிருந்து இப்போதும் வெளிவர இயலவில்லை. 21 வயது இளம்பெண்ணொருத்திக்கு மின்சார ரயில் பயணத்தின் வாயிலாக அறிமுகமான இளைஞனின் மேல் காதல். அவனுக்கு வயது 32. இந்தப் பெண் படிப்பில் படுசுட்டி. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் மதிப்பெண்களைப் பெற்று வெற்றி வாகை சூடியவள். அவள் சென்னைக்கு வந்ததன் காரணம் சார்டட் அக்கவுண்டட் படிப்பை தொடரும் பொருட்டு. இங்கே ஏதோ ஒரு நிறுவனத்தில் பகுதி நேரப் பணியாற்றிக் கொண்டு தனது CA படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

அப்போது அவளுக்கு அறிமுகமான அந்த இளைஞனுக்குத் தனியார் நிறுவனமொன்றில் வேலை. இருவரும் மின்சார ரயிலில் சந்தித்து காதல் வயப்பட்டு விஷயம் திருமணம் வரை சென்றிருக்கிறது. அப்போது தான் அந்தப் பெண்ணுக்கு தான் விரும்பும், தன்னை விரும்பும் நபர் ஏற்கனவே திருமணமானவர் என்ற செய்தி தெரிய வருகிறது. இதனால் காதலில் ஏமாற்றமடைந்த அந்தப் பெண் கொஞ்சம் சாமர்த்தியமாக அந்த உறவிலிருந்து வெளியில் வர விரும்பி சம்மந்த்தப்பட்ட இளைஞனை சந்திப்பதை தவிர்க்கிறார். ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் அந்தப் பெண் ஒதுங்கியதைக் கண்டு இளைஞன் புரிந்து கொண்டு தன் சொந்த வாழ்க்கையில் ஐக்கியமாகி இருந்தால் இந்தக் காதல் தோல்வியில் பெரிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் நடந்த விபரீதம் வேறு!

அந்தப் பெண்ணைக் காதலிப்பது போல் ஏமாற்றிய ஆணுக்கு இவளை விட மனமில்லை. திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில் தன் வாழ்வையும் பாழாக்க நினைக்கும் அந்த இளைஞனை இந்தப் பெண் மூர்க்கமாக மறுத்திருக்கிறார். அவளது மறுப்பை ஒப்புக் கொள்ளாத இளைஞன் ஒருமுறை சமாதானம் பேசுவது போல அவளை வரச்சொல்லி சந்திக்கையில் குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து ஆபாசமாகப் புகைப்படமெடுக்கவும் முயன்றிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் சும்மா இருந்தால் தன் வாழ்க்கை மொத்தமாகச் சீரழிந்து விடும். அவன் நிச்சயம் தன்னை நிம்மதியாக வாழ விடமாட்டான் என முடிவெடுத்த அந்தப் பெண் அதற்கப்புறம் அவனைத் தன் வாழ்வில் இருந்து அப்புறப்படுத்த எடுத்த முடிவு தான் கொடூரமானது. 

50,000 ரூபாய் கொடுத்து கூலிப்படையினரை அமர்த்தி, தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்டி வரும் இளைஞனை கொலை செய்யச் சொல்லி உத்தரவிடுகிறார். அவர்களும் சொன்னபடி செய்ய தற்போது காவல்துறை விசாரணையில் மாட்டிக் கொண்ட அந்த இளம்பெண் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். 

காதல் எல்லோருக்குமான ஒரு அடிப்படை உணர்வு. ஆனால் யாரைக் காதலிப்பது? காதலில் விழும்முன் என்னென்ன விஷயங்களை எல்லாம் உறுதிப் படுத்திக் கொண்டு அப்படியான உறவில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது என்பது குறித்த தெளிவெல்லாம் இருந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு இன்று இந்தக் கதி நேர்ந்திராது. அது மட்டுமல்ல, ஒரு உறவில் இருந்து வெளிவருவதென்றால்... இளம்பெண்கள், தாங்களே அதைப் புத்திசாலித்தனமாகக் கையாள முடிந்தால் மட்டுமே அப்படியானவற்றைத் தனியாகச் சமாளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு கொலை வரை சென்றிருக்கக்கூடாது. தன்னை ஏமாற்றிக் காரியம் சாதிக்க நினைக்கும் ஒருவனைப் பற்றி இந்தப் பெண் ஏன் தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்க முயலவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை அவரது காதலைப்பற்றி குடும்பத்தினருக்கு தெரியக் கூடாது என நினைத்திருந்தால்... அந்தப் பெண்ணுக்கு காதலில் மட்டுமல்ல குடும்ப அளவிலும் கூட ரிலேஷன்ஷிப் ஏமாற்றங்கள் உண்டு என்றே கருத வேண்டியதாயிருக்கிறது.

தான் உணரும் விஷயங்களை, தன்னை பாதிக்கும் விஷயங்களை, தன் மனதில் இருக்கும் விஷயங்களைப் பெண்ணோ, பையனோ சொந்தக் குடும்ப உறுப்பினர்களிடம் அது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என எந்த உறவாகவும் இருக்கட்டும், அவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மனத்த்டை கொண்டிருந்தார்கள் எனில் ரிலேஷன்ஷிப் என்று சொல்லப்படக்கூடிய குடும்ப உறவின் ஆரம்ப படியிலேயே சறுக்கியவர்கள் ஆகி விடுகிறார்கள். அந்நியர்களிடம் கணிசமாக ரிலேஷன்ஷிப் விஷயங்களில் ஏமாந்து எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் இப்படிப் பட்டவர்களே!
மேற்கண்ட பெண் விஷயத்தில் மிகவும் துரதிர்ஷ்டத்துக்கு உரியது தனது கல்வியில் அவள் ஈட்டிய வெற்றிகள் மற்றும் பெருமைகள் எல்லாம் அவள் எடுத்த வெறித்தனமான முடிவின் முன் ஒன்றுமில்லாமல் புகையாகி மறைந்தது தான்.

ஆங்கில ஊடகமொன்றில் 10, 12 ஆம் வகுப்பில் மாநில ரேங்க் வாங்கிய பெண்ணொருத்தி காதலனை கூலிப்படை வைத்து கொன்று விட்டாள் என்றே தலைப்பிட்டு இதைச் செய்தியாக்கி இருந்தார்கள்.
பார்த்ததும் துக்கமாக இருந்தது.

படிப்பில் சாதிக்கையில் அவளுக்கென்று என்னென்ன கனவுகள் இருந்தனவோ?

அந்தக் கனவுகளை இந்த  ‘ரிலேஷன்ஷிப் துரோகம்’ ஒன்றுமில்லாமல் செய்து விட்டதே?! யார் செய்தாலும் கொலை, கொலையே!. அதற்கான தண்டனைகள் ஒன்றே!

இதிலிருந்து அவளால் மீள முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Image courtesy:majorpress

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com