தொப்பை வேணுமா? வேலை வேணுமா? தொப்பை போலீஸுக்கு அதிரடி செக் வைத்த காவல் உயரதிகாரி!

ஆரோக்யம் குறித்த சிந்தனையற்றதும், கட்டுப்பாடற்றதும் லைஃப்ஸ்டைல் முறைகளைப் பின்பற்றுவதால் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட போலீஸ்காரர்கள் வருடத்திற்கு 150 பேர் இறக்கிறார்கள்.
தொப்பை வேணுமா? வேலை வேணுமா? தொப்பை போலீஸுக்கு அதிரடி செக் வைத்த காவல் உயரதிகாரி!

ஆரோக்யம் குறித்த சிந்தனையற்றதும், கட்டுப்பாடற்றதும் லைஃப்ஸ்டைல் முறைகளைப் பின்பற்றுவதால் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட போலீஸ்காரர்கள் வருடத்திற்கு 150 பேர் இறக்கிறார்கள். அவர்களது ஒரே பிரச்னையாக இருப்பது ஒபிஸிட்டி என்று சொல்லப்படக்கூடிய அதீத உடல் எடை மாத்திரமே! ஒபிஸிட்டி இருப்பதால் அவர்களுக்கு இயல்பிலேயே உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரழிவு நோய் உள்ளிட்டவை இலவச இணைப்பாக ஒட்டிக் கொள்கின்றன. பல போலீஸ்காரர்களுக்கு குடிப்பழக்கமும், இடைவிடாத புகைப்பழக்கமும் கூட ஒட்டுவாரொட்டியாக ஒட்டிக் கொள்கின்றது. இதற்கு காரணமாக அவர்கள் பணிச்சுமையையும் அதிலிருக்கும் அழுத்தத்தையும் குறிப்பிடலாம். ஆனால், எந்த வேலையில் தான் பணிச்சுமையும், அழுத்தமும் இல்லாமலிருந்து விட முடியும்?! அவற்றைத் தவிர்க்க முடியாதென்கிற போது ஆரோக்யமான வாழ்க்கை வாழ என்ன செய்யலாம் என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர, எதையோ காரணமாக வைத்துக் கொண்டு ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே புகைப்பழக்கம், குடிப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் என்று வாழ்க்கையைத் தொடரக்கூடாது. 

காவலர்கள் தங்களது வாழ்வைச் சீரழித்துக் கொள்ளும் விதமாக இத்தகைய மரணங்களைத் தாங்களே வலிந்து திணித்துக் கொள்ளக்கூடாது. வாழ்க்கை முறையில் சில ஸ்ட்ரிக்டான கட்டுப்பாடுகள் மற்றும் ஆரோக்யமான உணவுப் பழக்கம் மூலமாக இதை நிச்சயமாகக் கட்டுப்படுத்த முடியும்.

அதனால் தான் கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ்காரர்களுக்கு தொப்பை வேண்டுமா? வேலை வேணுமா? என்று இப்படியொரு வினோதமான புது கட்டுப்பாட்டை விதித்திருக்கிறோம் என்கிறார் KSRP அடிஷனல் டைரக்டர் ஜெனரலான பாஸ்கர் ராவ். ஜுலை மூன்றாம் தேதி அவர் வெளியிட்டுள்ள சர்குலர் ஒன்றில் இந்தக் கட்டுப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12 தொப்பையற்ற காவலர்கள்(பிளாட்டூன்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆரோக்யமான லைஃப்ஸ்டைலைப் பின்பற்றாத காவலர்களைக் கண்காணிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த 12 காவலர்களும் தொப்பையுடன் உலாவரக்கூடிய பிற காவலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் காவல்துறை நடைமுறைப் பணிகளை அளித்து குறிப்பிட்ட டெட்லைனுக்குள் உடல் எடையைக் குறைத்து ஆரோக்யமான உடல் எடைக்குத் திரும்பச் செய்தே ஆக வேண்டும். இந்த ஆணையை பின்பற்றி உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் காவலர்கள் பணியைத் தொடரலாம். அப்படியல்லாது இப்போதும் டேக்கா கொடுக்க நினைக்கும் காவலர்கள் மீது துறை சார்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கர்நாடக காவல்துறை  அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆரோக்ய ஒழுங்கு நடவடிக்கையின் முதல் படியாக சுமக்க முடியாத தொப்பையுடன் நடமாடும் காவலர்களின் உணவு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இனி அவர்களுக்கு வெள்ளை அரிசி சாதத்துக்கு பதிலாக சிறுதானிய உணவு வகையில் ஒன்றான கேழ்வரகு கஞ்சி தான் வழங்கப்படுமாம். அதுமட்டுமல்ல காவலர்களுக்கான வழக்கமான பயிற்சிகளோடு சேர்ந்து தொப்பை காவலர்களுக்கு மட்டும் அவர்களுக்கான பரேடுகள் மற்றும் விளையாட்டு நேரங்கள் அதிகரிக்கப்படுமாம். தொப்பை காவலர்களைக் கண்காணிக்க நியமிக்கபடவுள்ள ஃபிட்டான காவலர்களின் ஒரே வேலை இனி இவர்களை மேய்ப்பது மட்டும் தான் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கர்நாடக ரிசர்வ் காவல்துறை... இதற்காக பிசிக்கல், எமோஷனல், மெண்ட்டல், மற்றும் ஸ்ப்ரிச்சுவல் ஃபிட்னஸ் முறைகளை எல்லாம் புகுத்தி ஒவ்வொரு தொப்பை போலீஸையும் ஃபிட்டான போலீஸாக மாற்றவிருக்கிறதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com