மாவட்ட ஆட்சியரை அழ வைத்த ராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவின் ‘ஆரு பேபி’!

மாவட்ட ஆட்சியரை குழந்தை ஆருவின் மீதான நினைவுகள் சஞ்சலப் படுத்திக் கொண்டே இருக்க ’மீனாவின் ஆரூ’ என்று தலைப்பிட்டு அவளைக் குறித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
மாவட்ட ஆட்சியரை அழ வைத்த ராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவின் ‘ஆரு பேபி’!

ராஜஸ்தான் மாநிலம் குப்வாரா கிராமத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடக்கச் சென்றது இந்தியக் ராணுவக் குழு. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனா... தாக்குதலில் குண்டடி பட்டு உயிரிழந்தார். இறுதிச் சடங்குக்காக அவரது உடல் கடந்த சனிக்கிழமை சகல ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. 

சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுத் பிஹாரிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருந்தது. ஜனனமும், மரணமும் அறியாப் பருவத்தினளாக 5 மாதக் குழந்தை ஆரு தன் தகப்பனது உடல் கொண்டுவரப்பட்ட சவப்பெட்டியின் மீது அமர்ந்திருந்த காட்சி கல் நெஞ்சையும் கரையச் செய்வதாக இருந்தது. ஆரு தன் தகப்பனது இறுதிச் சடங்கு முடியும் வரை அவரது சவப்பெட்டியின் மீதே அமர வைக்கப்பட்டிருந்தாள், அது மட்டுமல்ல இறந்த ராணுவ வீரரது உடலில் போர்த்திக் கொண்டு வரப்பட்ட இந்திய தேசியக் கொடியை ராணுவ மரியாதையின் பின் முறைப்படி மடித்து அதைக் கெளரவச் சின்னமாக முகுத் பிஹாரி மீனாவின் தந்தையிடம் ராணுவத்தினர் அளித்தனர். அப்போதும் தன் தாத்தாவின் தோளில் இருந்த குழந்தை ஆரு ஆர்வத்துடன் தேசியக் கொடியை வாங்கப் பிஞ்சுக் கையை நீட்டிய காட்சி அங்கே குழுமியிருந்த அத்தனை பேரையும் கண்கலங்கச் செய்வதாக இருந்தது. 

அந்தக் கூட்டத்தில்... தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பலியான ராணுவ வீரர் முகுத் பிஹாரிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்த ஜலவார் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சோனியும் ஒருவர். மற்றெல்லோரும் மனம் கலங்கி நின்றதோடு நிறுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மட்டும் குழந்தை ஆருவின் மீதான நினைவுகள் மனதை சஞ்சலப் படுத்திக் கொண்டே இருக்க ’மீனாவின் ஆரூ’ என்று தலைப்பிட்டு அவளைக் குறித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தின் சாராம்சம் இது தான்...

‘ஆரு நீ உன் தகப்பனின் சவப்பெட்டியின் மீது அமர்ந்திருந்தாய்... அதற்கு முந்தைய கணத்தில் தான் உயிரோடிருக்கையில் எப்போதும் உன்னைக் கொஞ்சி மகிழத் துடித்துக் கொண்டிருந்த உன் தகப்பனின் முகத்தை நீ கண்டிருந்தாய்.  உன்னைக் இத்தனை அருகில் கண்ட பின்னும் தூக்கிக் கொஞ்சாது கண் மூடிப் படுத்துறங்கும் தகப்பனைக் கண்டு நீ அழக்கூடுமோ? என்று நானும் பிற ராணுவ அதிகாரிகளும் உன் முகத்தையும், உன் தந்தையின் முகத்தையும் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணப்போக்கில் உன்னையும், உன் தந்தையையும் பற்றித்தான் அந்த நொடியில் எண்ணிக் கொண்டிருந்தோம்... எந்த நேரமும் நீ அழக்கூடும் என நாங்கள் காத்திருந்தோம். ஆனால், நீ அழவில்லை. உனது பரிசுத்தமான குற்றமற்ற கண்களிலிருந்து கண்ணீர் வரவில்லை. அந்த நொடி மிக உருக்கமானதாக இருந்தது. எங்கள் ஒவ்வொருவர் மனமும், கண்களும் உனக்காகக் கரைந்தது ஆரு. இந்தியாவின் பொறுப்புமிக்க, விவேகமிக்க அத்தனை குடிமக்களின் ஆசிர்வாதமும், வாழ்த்துக்களும் உனக்கு எப்போதும் உண்டு. நன்றாக வளர்ந்து உன் அப்பாவின் தியாக மரணத்துக்கு நீயும் பெருமை சேர்ப்பாயாக!’ 

-என்று தான் கண்டு மனமுருகிய அந்த 5 மாதக் குழந்தைக்கு மனமிளகி கடிதம் எழுதியிருந்தார் ராஜஸ்தான் ஜல்வாரா மாவட்ட ஆட்சியரான ஜிதேந்திர சோனி.

இறந்த ராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவின் உடலுக்கு தன் தாத்தாவுடன் இணைந்து எரிதழல் இட்டு இறுதிச் சடங்கை நிறைவு செய்தார் அவர் மகள் ஆரு...

ஆம்.. மீனாவின் ஆரு!

இறந்த ராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவுக்கு 25 வயது தான் நிறைவடைந்துள்ளது. அதற்குள் 5 மாதக் கைக்குழந்தை ஆருவையும், அவளது அம்மாவையும் விட்டுவிட்டு தீவிரவாதிகளை அடக்கச் சென்று நாட்டுக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்.

ஒரு தியாகத் தந்தைக்குப் பிறந்த ஆருவின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com