உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

நுகர்வோர் நலன் பற்றிய அக்கறை துளியுமின்றி லாபத்தில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்ட இந்த ஏமாற்று வித்தைக்கு அவர்களிட்டுள்ள சாகஸப் பெயர் தான் வியாபார தந்திரம், தொழில் ரகசியம் இத்யாதி, இத்யாதி.
உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

கடையில் நீங்கள் வாங்கிய உருளை சிப்ஸில் கொடுத்த காசுக்குப் பெறுமானமுள்ள அளவுக்கு சிப்ஸ் இல்லை என்று அடிக்கடி கவலைப்படும் நாம் அந்த சிப்ஸுக்குள் இருக்கும் உள்ளரசியலை எப்போதாவது கவனித்திருக்கிறோமா? சிப்ஸ் பாக்கெட்டில் பெயருக்கு பத்தே பத்து உருளை சிப்ஸ் ஃப்ளேக்குகளைப் பேக் செய்து விட்டு மிச்சத்திற்கு காற்றடைத்து விற்பனை செய்கிறார்கள் என்று நம்மில் பெரும்பாலானோர் பலமுறை வருத்தப்பட்டிருப்போம். ஆனால் அவர்களது ஏமாற்றுத்திறன் அதில் மட்டுமில்லை. உருளை சிப்ஸை டிசைன் செய்வது முதலே தொடங்கி விடுகிறது என்கிறது இந்த காணொளிக் காட்சி.

இதையெல்லாம் 10 ரூபாய் கொடுத்து சிப்ஸ் பாக்கெட் வாங்கி உண்பவர்கள் யாரும் கனவிலும் யோசித்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு வாய்க்கு ருசியாக மொறு, மொறுப்பாக உண்பதற்கு சிப்ஸ் கிடைத்தால் போதும். அதிலும் அந்த சிப்ஸ் சாதாரண பாலீதீன் பேக்கில் இல்லாமல் பிரபலமான சிப்ஸ் கம்பெனியின் பெயர் அச்சிடப்பட்ட கவர்ச்சியான ராப்பருடன் கூடிய பேக்காக இருந்தால் இன்னும் அந்தஸ்தாக உணர்வோம். இப்படித்தானே இத்தனை நாட்களும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எத்தனை முட்டாள் தனமானது என்று நுகர்வோர் யோசிக்க வேண்டிய தருணம் கடந்து கொண்டிருக்கிறது.

இது ஹோம்மேட் உருளை சிப்ஸ்...

இது பன்னாட்டு வணிக நிறுவன பேக்கிங்கில் கிடைக்கும் உருளை சிப்ஸ்...

வீட்டில் சிப்ஸ் வறுக்கும் போது கவனித்திருப்பீர்கள். நம் வீட்டு சிப்ஸ்கள் வகைக்கொன்றான பொரிந்து வந்திருக்கும். அவற்றை நாம் ஆற வைத்து பிளாஸ்டிக் ஜாரில் எடுத்து வைக்கையில் சில சிப்ஸ்கள் உடைந்து விடும். சில வடிவமிழந்து எளிதில் உடையும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். மொத்தத்தில் சிப்ஸின் வடிவத்தில் நாம் பெரிதாக கவனம் செலுத்தியிருக்க மாட்டோம். ஆனால், அதே கடையில் வாங்கும் சிப்ஸ்களை நம் வீட்டு சிப்ஸ்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உற்றுக் கவனித்தீர்களெனில் சிப்ஸ்களின் சுவை முதல் அவற்றின் வடிவம், அவை ஸ்லைஸ் செய்யப்பட்டு பொறித்தெடுக்கப்பட்ட விதம், பேக்கிங் நுணுக்கம் முதல் அத்தனையிலுமே நாம் மாபெரும் வித்யாசங்களைக் காண முடியும்.

மேலோட்டமாகப் பார்த்தால் அவற்றில் பெரிதாக எந்தத் தவறும் இல்லை என்றே தோன்றலாம். ஆனால் அவை ஒவ்வொன்றின் பின்னாலும் மாபெரும் வியாபார தந்திரம் இருக்கிறதென்கிறது மேலுள்ள காணொளி. இவர்கள் சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

சிப்ஸ்களை இரண்டு கர்வ் அதாவது வளைவுகளுடன் டிசைன் செய்வதால் அவை எளிதில் உடைந்து போகாமலிருப்பதோடு, கையில் பிடித்து உண்பதற்கும் வசதியாக இருக்கிறது. அது மட்டுமல்ல, பாக்கெட்டில் பேக் செய்யும் போது உள்ளே நிறைய சிப்ஸ் இருப்பதான தோற்றத்தையும் அது ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் இந்த சிப்ஸ்களை பல லட்சக் கணக்கான ரூபாய்கள் செலவு செய்து சூப்பர் கம்ப்யூட்டர்களை வைத்து இப்படி இரண்டு கர்வ் வருமாறு டிசைன் செய்து விற்பனை செய்கின்றன பன்னாட்டு வணிக நிறுவனங்கள். இதனால் 10 ரூபாய் கொடுத்து சிப்ஸ் வாங்கி உண்பவர்களுக்கு பாக்கெட்டின் வடிவத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பம் அதனுள்ளிருக்கும் சிப்ஸை உண்ணும் போது கிடைப்பதில்லை. ஏனென்றால் உள்ளே சிப்ஸ் இருந்தால் தானே?! அவர்கள் பெயருக்கு சிப்ஸ் என்று பெயரிட்டு காற்றடைத்த பாக்கெட்டுகளைத் தானே விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்றால். குறைவான உற்பத்தியில் நிறைவான... இல்லையில்லை கொள்ளை, கொள்ளையாய் லாபம். அவ்வளவு தான். அது போதாதா?!

நுகர்வோர் நலன் பற்றிய அக்கறை துளியுமின்றி லாபத்தில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்ட இந்த ஏமாற்று வித்தைக்கு அவர்களிட்டுள்ள சாகஸப் பெயர் தான் வியாபார தந்திரம், தொழில் ரகசியம் இத்யாதி, இத்யாதி.

 Video & Concept Courtesy: LMES 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com