Enable Javscript for better performance
dog locked in balc|நாய் வளர்ப்பது தவறில்லை, ஆனால் அதை இப்படித் தவிக்க விட்டது தான் அந்தோ பரிதாபம்!- Dinamani

சுடச்சுட

  

  நாய் வளர்ப்பது தவறில்லை, ஆனால் அதை இப்படித் தவிக்க விட்டது தான் அந்தோ பரிதாபம்!

  By RKV  |   Published on : 22nd May 2018 02:50 PM  |   அ+அ அ-   |  

  000000_dogs_locked_in_bolcany

   

  அயனம்பாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றிn மூன்றாம் மாடியில் தனது உரிமையாளர்களுடன் வசித்து வந்த வளர்ப்பு நாய் ஸ்வீட்டிக்கு நேர்ந்த கதி மற்ற நாய் வளர்ப்பாளர்களுக்கு ஒரு பாடம்.

  ஸ்வீட்டியின் உரிமையாளர்கள் அவசர வேலையாக வெளியூர் செல்ல நேர்ந்த காரணத்தால் ஸ்வீட்டியை உடன் அழைத்துச் செல்ல இயலவில்லை. அவர்கள் மட்டுமே வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்புவது என்று முடிவு செய்தபின் ஸ்வீட்டியை என்ன செய்வது? அது தான் இருக்கவே இருக்கிறதே பால்கனி ஏரியா! அங்கே ஸ்வீட்டியைப் பாதுகாப்பாகக் கட்டிப் போட்டு போதுமான உணவையும், தண்ணீரையும் வைத்தார்கள். பிறகென்ன... பால்கனியையும் பூட்டி, வீட்டுக்கதவையும் பூட்டி டபிள் பாதுகாப்பு ஏற்பாடு செய்த திருப்தியில் ஊருக்குக் கிளம்பிப் போய் விட்டார்கள். 

  ஸ்வீட்டிக்கு வைத்த உணவு தேவைக்கு மேலேயே இருந்தாலும் தண்ணீர் போதவில்லை. கடும் கோடையில் நாய் மட்டும் விதிவிலக்கா?! சரி போனவர்கள் ஓரிரு நாட்களில் வீடு திரும்பியிருந்தார்களென்றால் ஒரு பிரச்னையும் இருந்திருக்காது. அவர்களது பயணம் 5 நாட்களாக நீண்டதில் இங்கே பாவம் ஸ்வீட்டி தாகத்தால் நா வறண்டு இரவும், பகலுமாகக் கதறிக் குரைக்கத் தொடங்கி விட்டது. அதை கட்டியிருந்த பால்கனி ஏரியா வெயில் நன்றாக உறைக்கக் கூடிய பகுதி. அங்கே தண்ணீர் இல்லாமல் அது பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இடையில் இயற்கைக் கடன் வேறு. அதையும் அங்கேயே கழித்து அதன் மேலேயே படுத்துறங்கி என்று ஒரு நரக வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறது அந்த நாய். மற்றதெல்லாம் சரி தான், ஆனால் தண்ணீர் தாகத்தை எந்த உயிரால் தான் தாங்கிக் கொள்ள முடியும்? ஸ்வீட்டியாலும் முடியாமல் தான் கடந்த 4 நாட்களாக இரவெல்லாம் அழுது தீர்த்திருக்கிறது. 

  விளைவு அக்கம் பக்கத்து அபார்ட்மெண்ட் வாசிகள் ஒருவராலும் பொட்டுத் தூக்கம் தூங்க முடியவில்லை. கடைசியில் ஸ்வீட்டியின் அண்டை வீட்டுக்காரரான சித்ரா, எப்படியாவது வீட்டைத் திறந்து ஸ்வீட்டியை மீட்க வேண்டும் என்று முனைந்திருக்கிறார். அவர் புளூ கிராஸுக்கு அழைக்க. ஒரு பயனும் இல்லை. அவரது அழைப்பை புளூ கிராஸ்காரர்கள் எடுக்கவேயில்லை என்கிறார் சித்ரா. இதைப் பற்றிப் பேசும் போது புளூ கிராஸ் பிராணிகள் நல அமைப்பைச் சேர்ந்த டான் வில்லியம்ஸ் கூறியது; ‘இம்மாதிரியான சூழலில் புளூ கிராஸால் தன்னிச்சையாக பிறரது வீட்டை உடைத்து விலங்குகளைக் காப்பாற்ற முடியாது. காவல்துறை தான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்படுவோம்.’ என்றார்.

  சரிதான். ஆனால், இப்போது கடந்த 4 நாட்களாக அழுது அரற்றிக் கொண்டிருக்கும் அந்த நாயைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டுமே? இல்லாவிட்டால் அது குரைத்துக் குரைத்தே உயிரை விட்டு விடும் போலிருக்கிறதே. என்று சித்ராவின் கணவர் ராபின் ஸ்டீஃபன் அருகிலிருக்கும் மற்றொரு அண்டை வீட்டுக்காரரிடம் மாற்றுச்சாவி இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே ஓடினார். நல்ல வேளை அந்த மனிதரிடம் அபார்ட்மெண்ட் வீடுகளின் மாற்றுச்சாவிகள் இருந்தன. அதிலிருந்து குறிப்பிட்ட அந்த வீட்டின் சாவி தனித்து எடுக்கப்பட்டு விரைந்து சென்று கதவைத் திறந்து பார்த்தால், ஸ்வீட்டி இயற்கைக் கடன் கழித்து, கழித்து வேறு வழியின்றி அதன் மீதே சோர்ந்து போய் முனகிக் கொண்டு படுத்துக் கிடந்திருக்கிறது.

  இங்கே இத்தனை களேபரம் ஆகிக் கொண்டிருக்க நாயின் உரிமையாளர்களோ, செம கூலாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முனைப்பில், ஐயோ, என்ன செய்வது? திடீரென்று ஒரு மரணச் செய்தி வந்தது. வேறு வழியின்றி போட்டது போட்டபடி கிடக்க, ஸ்வீட்டிக்கு மட்டும் நிறைய உணவும், தண்ணீரும் வைத்து விட்டு ஊருக்குக் கிளம்பி விட்டோம். எங்கள் நிலை அப்படி என்கிறார்களாம்.

  ஐயா நாய் வளர்ப்பாளர்களே!

  நாய் வளர்க்க ஆசைப்படுவது தவறில்லை.

  ஆனால், அந்த நாயை, நீங்கள் ஊரிலில்லா விட்டால் கவனித்துக் கொள்ள ஒரு ஆளையும் சேர்த்து இனிமேல் வளர்க்கத் தொடங்குங்கள். குறைந்த பட்சம் அக்கம் பக்கத்தில் அப்படி யாரிடமாவது நட்புடனாவது பழகி வைத்துக் கொண்டு நீங்கள் ஊரை விட்டு எங்கேனும் செல்வதாக இருந்தால் அவர்கள் பொறுப்பில் நாயை ஒப்படைத்து விட்டுச் செல்லப் பாருங்கள். ஆறறிவுடைய மனிதனுக்குத் தனது கஷ்ட நஷ்டங்களை வாய்விட்டு அரற்றிச் சொல்லத் தெரியும். ஆனால் நாய்கள் வாயில்லா ஜீவன்கள். அவற்றை எக்காரணம் கொண்டும் இப்படித் துன்புறுத்தி விடாதீர்கள். பல சந்தர்பங்களில் மனிதனைக் காட்டிலும் நாய் நன்றியுள்ளது.

  Image courtesy: Google

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai