தமிழகத்தின் முதல் பெண் வில்லுப்பாட்டுக் கலைஞர்!

மதுரைக்குத் தெற்கே நான் பாடாத கோயில்கள் இல்லை. பூங்கனியின் வில்லுப்பாட்டு என்றால் அதனைக் கேட்க கூடும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். நான் பாட ஆரம்பித்தால் பாட்டு முடியும் வரை
தமிழகத்தின் முதல் பெண் வில்லுப்பாட்டுக் கலைஞர்!
Published on
Updated on
2 min read

'தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட வந்தருள்வாய் கலைமகளே...' எனத் தொடங்கும் வில்லுப்பாட்டு தென்தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலைகளுள் ஒன்று. கோயில் திருவிழாவில் இன்றளவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது இந்த வில்லிசை. ஆடாத சாமியையும் ஆட்டுவிக்கும் கலையாக திகழ்கிறது வில்லுப்பாட்டு. இக்கலையை தென்தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் கொண்டு சென்று கலையையும் பிரபலப்படுத்தி தானும் பிரபலமானவர் பூங்கனி. 84 வயதைத் தொட்டுவிட்ட இவா் தமிழகத்தின் முதல் பெண் வில்லுப்பாட்டுக் கலைஞா் என்ற சிறப்பைப் பெறுகிறார். வசதி வாய்ப்புகளுடன் வாழந்திருக்க வேண்டிய பூங்கனி இன்று வாரிசுகள் இல்லாததாலும், உறவுகள் கைவிட்ட காரணத்தாலும் சொந்த ஊரையும் மறந்து வறுமையான சூழலில் ‘கொட்டாரம்’ என்ற ஊரில் தன்னந்தனியாக ஒரு ஓலைக்குடிசையில் வசித்து வருகிறார்.

அவரை தினமணி மகளிர் மணிக்காக சந்தித்தோம்... கன்னியாகுமரி மாவட்டம் ‘சரவணந்தேரி’ என்ற சாதாரண கிராமத்தில் 1934 இல் பிறந்த நான் எனது 10 வயதில் பக்கத்து ஊரான முகிலன்குடியிருப்பைச் சோ்ந்த வேதமாணிக்கம் என்ற வில்லிசைக் கலைஞரிடம் வில்லுப்பாட்டை முறைப்படி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரே நேரத்தில் என்னோடு சோ்த்து 18 பெண்களுக்கு வில்லுப்பாட்டைக் கற்றுத்தந்தார் வேதமாணிக்கம். ஆனால் அதனை விருப்பத்துடன் கற்றுத் தோ்ந்த இருவரில் நானும் ஒருத்தி. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்த நான் சிறுவயதிலேயே ராமாயணம், மகாபாரத்துடன், இந்துக் கடவுள்களின் வரலாற்றையும் சேர்த்து 60 க்கும் மேற்பட்ட கதைகளை வில்லுப்பாட்டாக பாடுவதற்குக் கற்றுக் கொண்டேன். (84 வயதாகி விட்டாலும் அந்தக் கதையின் தலைப்புகளை இப்போதும் மூச்சுவிடாமல் அடுக்கி ஆச்சரியப்படுத்துகிறார் பூங்கனி). 

மதுரைக்குத் தெற்கே நான் பாடாத கோயில்கள் இல்லை. பூங்கனியின் வில்லுப்பாட்டு என்றால் அதனைக் கேட்க கூடும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். நான் பாட ஆரம்பித்தால் பாட்டு முடியும் வரை ரசிகா் பட்டாளம் அங்கேயே கண்கொட்டாமல் விழித்திருப்பார்கள் என்கிறார் பொக்கை வாய் சிரிப்புடன். தென்தமிழகம் முழுவதும் கோயில், கோயிலாக வில்லுப்பாட்டு பாடியதால் கைநிறைய பணம் வந்தது. வாரிசுகள் இல்லாத நிலையில் எனது கணவா் அந்தப் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்து விட்டார். இதனால் எதையும் சோ்த்து வைக்க முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் ஒரே துணையாக இருந்த கணவரும் இறந்து விட்டார். என்னால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. இந்த தொலைக்காட்சிப் பெட்டிதான் துணை. என்னைப் பற்றி கேள்விப்பட்டு வரும் சிலா் செய்யும் உதவியும், அரசு மாதம்தோறும் வழங்கும் ரூ. 1,000 உதவித்தொகையும் மட்டுமே தனது அன்றாட செலவுகளுக்கு போதுமானதாக உள்ளது என்கிறார் பூங்கனி. 

தள்ளாத வயதில் பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்களின் உதவியுடன் வாழ்க்கையை நகா்த்தி வருகிறார் அவா். 

அரசு கௌரவம்: கிராமியக் கலையான வில்லுப்பாட்டில் சாதனை படைத்த பெண்ணான அவரை சமூக ஆா்வலா்கள் பலா் பாராட்டினாலும், மத்திய, மாநில அரசுகள் தனக்கு விருது எதுவும் வழங்கி கௌரவப்படுத்தவில்லையே என்ற ஏக்கம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதனை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்கிறார். கடந்த 2016 ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடா்பியல் துறையைச் சோ்ந்த சிலா் பூங்கனியை சென்னைக்கு அழைத்துச் சென்று கௌரவப்படுத்தியுள்ளனா். அப்போது வில்லுப்பாட்டில் மிகவும் பிரபலமான கதையாகக் கருதப்படும் வெங்கலராஜன் கதையை மாணவா்களுக்காக தொடா்ந்து 4 நாள்கள் வில்லுப்பாட்டாக பாடவைத்து அதனை ஒளிப்பதிவு செய்துள்ளனா். இதனைத் தனது வாழ்நாள் பெருமையாகக் குறிப்பிடுகிறார். தமிழகத்தின் பாரம்பரிய கிராமியக்கலையான வில்லுப்பாட்டை பிரபலமாக்கிய பூங்கனிக்கு அரசு மரியாதை செய்ய வேண்டுமென்பது அனைத்து வில்லிசைக் கலைஞா்களின் விருப்பமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com