கல்லூரி மாணவனின் உயிருக்கு எமனாக மாறிய டேட்டிங் செயலி (Dating app)!

இணையத்தில் புதிது, புதிதாக அறிமுகமாகும் டேட்டிங் செயலிகள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வம் ஆயுஷுக்கு இருந்திருக்கிறது. இதை அவர் தனது குடும்பத்தினர் அறியாத வண்ணம் ரகசியம் காத்திருக்கிறார்.
கல்லூரி மாணவனின் உயிருக்கு எமனாக மாறிய டேட்டிங் செயலி (Dating app)!

கடந்த வியாழனன்று டெல்லி, துவாரகாவில் ஆயூஷ் நாட்டியால் என்ற கல்லூரி மாணவர் காணாமல் போனார். கல்லூரிக்குச் சென்ற மகன் வீடு திரும்பாததால் அவரைத் தேடிப் பார்த்து கிடைக்காமல் காவல்துறையை நாடியது ஆயுஷின் குடும்பம். காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஆயுஷ் நாட்டியாலுக்கு வயது 21. டெல்லி ராம் லால் ஆனந்த் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் பயின்று வந்த நிலையில் திடீரென ஒரு வாரத்துக்கு முன்பு கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த புதனன்று அவரது  உடல் சடலமாக ஒரு டிராவல் பேகில் கண்டெடுக்கப்பட்ட செய்தி ஆயுஷின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆயுஷ் காணாமல் போன தினத்தன்று அவரது செல்பேசியில் இருந்து அவரது பெற்றோர்களுக்குத் தொடர்ந்து வாட்ஸ் அப் மெசேஜுகள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. அப்படி வந்த மெசேஜுகள் அனைத்துமே ஆயூஷ் கடத்தப்பட்டிருப்பதாகவும், அவரை மீட்க வேண்டுமெனில் 50 லட்சம் ரூபாய் பணமாகத் தர வேண்டும் எனவும் மிரட்டும் விதமாக இருந்திருக்கின்றன. 

ஆயுஷின் பெற்றோரும் தங்களுக்கு வந்த வாட்ஸ் அப் மெசெஜுகளின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் சொன்ன இடங்களுக்கெல்லாம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் அலைந்திருக்கிறார்கள். ஆனால், வாட்ஸ் அப் மிரட்டுலுக்கு ஏற்ப எவரொருவரும் பணத்தை எடுக்க வராத நிலையில் ஆயூஷின் குடும்பத்தினருக்கும், காவல்துறையினருக்கும் குழப்பமே மிஞ்சியது. இந்நிலையில் ஆயுஷ் கடத்தப்படவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என காவல்துறை ஆயுஷின் செல்பேசி இணைப்பு எண்ணின் அடிப்படையில் ஆராய்ந்து துப்பு துலக்கியதில். ஆயுஷைக் கொன்றது அவரது டேட்டிங் நண்பனான இஷ்தியாக் அலி என்பது தெரிய வந்திருக்கிறது. 

25 வயது இஷ்தியாக் அலி டெல்லி, உத்தம் நகரில் இயங்கி வரும் எக்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் டிசைனராகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்மார்ட் ஃபோனின் டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் ஆயூஷுக்கும், இஷ்தியாக் அலிக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவருக்குள்ளும் நட்புறவில் ஏற்பட்ட தகராறில் சம்பவ தினத்தன்று இஷ்தியாக் அலி ஆயுஷை சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்றிருக்கிறார். கொன்ற பின் சடலத்தை மறைக்கத் தான் பணம் கேட்டு மிரட்டி நாடகமாடியிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆயுஷுக்கும், இஷ்தியாக் அலிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொலை வரை செல்லத் தூண்டிய காரணங்கள் எவையென தற்போது காவல்துறை விசாரித்து வருகிறது. கொலையான ஆயூஷுக்கு தொடர்ந்து டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. இணையத்தில் புதிது, புதிதாக அறிமுகமாகும் டேட்டிங் செயலிகள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வம் ஆயுஷுக்கு இருந்திருக்கிறது. இதை அவர் தனது குடும்பத்தினர் அறியாத வண்ணம் ரகசியம் காத்திருக்கிறார்.

இஷ்தியாக் அலி தனது டேட்டிங் இணையான ஆயூஷைக் கொலை செய்து விட்டு அவரது சடலத்தை மறைக்க போதுமான நேரம் தேவைப்பட்டதால், சாமர்த்தியமாகச் செயல்படுவதாக நினைத்து ஆயுஷின் செல்பேசியில் இருந்தே வாட்ஸ் அப் மெசேஜ் மிரட்டல்களை அவரது பெற்றோருக்கு விடுத்திருக்கிறார். அதில் தான் தற்போது காவல்துறையினரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டு கைது  செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆயுஷ் கொலைச்சம்பவம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் மத்தியில் பரவலாகப் பெருகி வரும் டேட்டிங் மோகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.

டேட்டிங் என்பது இந்தியக் கலாச்சாரம் இல்லை. அதிலும், ஒரு ஆண், சமூக ஊடகங்களில் பெருகி வரும் டேட்டிங் செயலி மூலம் மற்றொரு ஆணை டேட்டிங் இணையாகத் தேர்ந்தெடுப்பது எல்லாம் இந்தியாவில் இப்போதும் அதிர்ச்சிக்குரிய விஷயங்களில் ஒன்றாகத் தான் அணுகப்படுகிறது. அப்படியிருக்க கல்லூரி மாணவர் ஒருவர் டேட்டிங் செயலிகளுக்கு அடிமையாகி அதில் கிடைத்த தொடர்பால் விஷ்யம் கொலை வரைக்கும் சென்றிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்குரிய விஷயம் மட்டுமல்ல உடனடியாக சைபர் கிரைம் தலையிட்டு டேட்டிங் செயலிகளின் இயக்கத்தை முறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர வேண்டிய காலமிது. காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு இதற்குரிய நடவடிக்கைகளை முடுக்கி விடுமா? எனத் தெரியவில்லை. இதெல்லாம் ஒருபுறமிருக்க கொலையான ஆயூஷின் பெற்றோர் தங்களது மகன் கொலை விவகாரத்தில் புகார் அளித்த உடனே துரிதமாக காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் மகனைப் பறிகொடுக்க நேர்ந்து விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com