தனக்குக் கீழே ஒருவன் இருக்க வேண்டும், அவனை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும்! இது எப்போது உடையும்?!

ஆணால் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் சுதந்திரம், ஆதிக்க ஜாதியினரால் ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்குக் கிடைக்க வேண்டும் சுதந்திரம்.. ஆனால் அது கிடைக்காது.
தனக்குக் கீழே ஒருவன் இருக்க வேண்டும், அவனை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும்! இது எப்போது உடையும்?!

சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் இயக்குனர் மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ மிகச்சிறந்த கவனிக்கப்பட வேண்டிய திரைப்படமாக திரைவிமர்சகர்களாலும், ரசிகர்களாலும் கருதப்படுகிறது. பரியேறும் பெருமாள் எதைப் பற்றிப் பேசுகிறது என்றால்? தமிழகத்தில் நிலவும் ஏன் மொத்த இந்தியாவிலுமே நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான கணிசமான காட்சிகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் மதிப்பாய்வில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரது பேச்சும் இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்து பின்பற்றத்தக்க வகையில் அமைந்திருந்தன. மதிப்பாய்வில் மேடையேறிப் பேசிய பலருள் ‘பூ’ திரைப்படத்தில் பேனாக்காரராக நடித்த ராமுவின் பேச்சு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

பிறநாடுகளில் ஜாதி என்பது கிடையாது. அங்கெல்லாம் கருப்பு, வெள்ளை பேதம் மட்டும் தான். நம் நாடு, பக்கத்தில் இருக்கும் இலங்கை உள்ளிட்ட சில சிறு சிறு நாடுகளில் மட்டும் தான் ஜாதி. ஒரு அறிஞர் சொல்கிறார்... 

'Dont walk in front of me, I am not a follower. Dont walk behind me, I am not a lead. walk beside me, and be friends.'
- Albert comes

அங்கே இந்த இரண்டு தான். ஆனால், இங்கே நான்கு இருக்கிறது. மேலே, கீழே, நடுவில் ஒன்று, அதற்கு கீழே ஒன்று என நான்கு இருக்கிறது.

இதை வெகு சுருக்கமாகச் சொல்கிறார் அம்பேத்கார்;

‘எனக்கு ஒரு அடிமை தேவையில்லை, நான் அடிமை இல்லை‘

- என்று;

பெரியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்வார். அவரிருந்த காலகட்டங்கள் வேறு. இன்றைய காலகட்டங்களில் நாம் எல்லோரும் ஓரிடத்தில் சமமாக உட்காரவாவது முடிகிறது. அப்போது அதெல்லாம் கிடையாது. அதை வெகு நுணுக்கமாகச் சொல்கிறார் பெரியார்... எப்படியென்றால்;

‘ஜாதியின் ஆணிவேர் மதம், மதத்தின் ஆணிவேர் வர்ணாசிரமம்,  வர்ணாசிரமத்தின் ஆணிவேர் மநு, மநுவின் ஆணிவேர் கடவுள்!’

என்கிறார். இப்படி எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கிறது. கடவுள்களில் ஜாதி இருக்கிறது, கோயில்களில் ஜாதி இருக்கிறது. குடிக்கும் தண்ணீரில் ஜாதி இருக்கிறது. குளத்தில் ஜாதி இருக்கிறது. எங்கே இல்லை ஜாதி?!

‘கடவுளை நம்புகிறவர்கள் சொல்வார்கள். எங்கும் நிரந்தரமானவன் கடவுள் என்பது மாதிரி கடவுள் மறுப்பாளர்கள் சொல்கிறார்கள் ‘எங்கும் இருக்கிறது ஜாதி’

- என்று. அந்த மாதிரி தான்.

இந்தப் படத்தில் ஆரம்பத்தில் எனக்கு வாய்ப்பு வந்தது பி.கே ராஜா கதாபாத்திரத்துக்கு, அப்போது நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தபடியால் அந்த வாய்ப்பு தவறியது. அடுத்ததாக கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்துக்கு வாய்ப்பு வந்தது. அப்போதும் நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. கடைசியாக கிடைத்தது தான் அந்த பிரின்ஸிபால் கதாபாத்திரம்.  இன்று நிறைய பேர் சொல்வது என்னவென்றால், யூ டியூபில் அது தான் அதிகமாகப் பார்க்கப்படுகிறது என்று, அந்தக் கதையினுடைய மையம் அது தான். அந்தக் கதாபாத்திரம் மூலமாக இயக்குனர் மாரி சொல்லிவிட்டார், எனக்கு முன் பேசியவர்கள் எல்லோரும் சொன்னார்கள். ஜாதி ஒழியாது, ஒழியாது... ஒழியாது என்று சரி தான் அது கரெக்ட் தான். ஆனால், உரையாடல் தொடங்கலையே, அது தானே பிரச்னை! க்ளைமாக்ஸில் அதைத்தான் வைத்திருப்பார் மாரி. ‘ நீ நீயாக இருக்கும் வரைக்கும், என்னை நீ நாயாகப் பார்க்கிற வரைக்கும் ஒன்றும் நடக்காது. விவாதத்தைத் தொடர வேண்டும். அதனால் தான் பெரியார் சொல்கிறார்.

‘ஆணால் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் சுதந்திரம், ஆதிக்க ஜாதியினரால் ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்குக் கிடைக்க வேண்டும் சுதந்திரம்’

ஆனால் அது கிடைக்காது. அப்படியென்றால் இது ஒன்றிணைந்து போராட வேண்டிய விஷயம். பெண்ணடிமை தீர வேண்டுமென்றால், அந்தப் போராட்டத்தில் ஆணும் சேர்ந்து இணைய வேண்டும் அந்தப் போராட்டத்தில்  இடைநிலை ஜாதிகள், தனக்குக் கீழே ஒரு ஜாதி இருக்கிறதே என்று திமிராக இருக்கிறார்கள் வேறு ஒன்றுமில்லை. அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பார்ப்பானுக்கு கீழே மூன்று ஜாதி. பார்ப்பானுக்குக் கீழே வைஸ்யனும், சத்ரியனும் தன்னைத் தானே பார்ப்பானைப் போல நினைத்துக் கொள்கிறான். அதைத்தான் பார்ப்பனீயம் என்று பெரியார் சொல்கிறார். வேறு ஒன்றுமில்லை. தனக்குக் கீழே ஒருவன் இருக்க வேண்டும், அவனை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது எப்போது உடையும்? இந்த விவாதத்தை இதற்கு முன் வந்த பல திரைப்படங்கள் முன்னெடுத்திருந்தாலும் இந்த திரைப்படம் அதை மிகச்சரியாகவும், தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறது. அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஏனென்றால், இந்தத் திரைப்படம் பார்த்து விட்டு எனக்கு மூன்று திரைப் பிரபலங்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அவர்கள் பேசும் போதே எப்படித் தொடங்கினார்கள் என்றால், ‘தோழர் நான் எந்த சமுதாயம் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால், இந்தப் படம் பார்த்த உடனே தான், நான் உணர்ந்தேன் உண்மையிலேயே நாங்கள் யாரையோ மிதித்துக் கொண்டிருக்கிறோம் என’ - என்று அவர்களே சொல்லி விட்டார்கள். அந்தக் குற்ற உணர்வை ஏற்படுத்தியதற்கான மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com