மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? அதைத் தீர்ப்பதற்கான எளிய உற்சாக மந்திரம் இதோ!
By பரணி | Published On : 10th September 2018 01:07 PM | Last Updated : 10th September 2018 01:07 PM | அ+அ அ- |

நம்மைப் போன்ற சாமானிய மனிதர்களுக்கு ஒருநாளைத் துவக்கும் போது தான் எத்தனை எத்தனை இடைஞ்சல்கள்?!
தெனாலி கமல் போல... மனிதர்களுக்கு எல்லாவற்றுக்குமே ஒரே பயமயம்!
மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?
அவர்களது பயத்தைப் போக்குவதற்கான உற்சாக மந்திரம் என்ன? அப்படி ஏதாவது இருக்கிறதா? என்று அடிக்கடி தேடிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் தனி வாழ்க்கை முதல் பொது வாழ்க்கை வரையிலும் அனைத்திலும் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த வல்ல சக்தி இந்த பய உணர்வுக்கு உண்டு என்பதால் தான். அதைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை ஒருமுறை அறிந்தோமெனில் நிச்சயம் இம்மாதிரியான உணர்வுகளைக் கைவிட்டு நாம் எல்லோருமே பராக்ரமசாலிகள் ஆகி விடலாம்.
இனி விவேகானந்தரின் சொற்பொழிவில் இருந்து சில துளிகள்...
மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?
அவர்களே தங்களை பலவீனர்களாகவும் பிறர் துணையை நாடுபவர்களாகவும் ஆக்கிக் கொண்டது தான் இந்த பயத்திற்கு காரணம். நாம் சோம்பேறிகள், நாமாக எதையும் செய்ய விரும்புவதில்லை, ஒரு கடவுளோ, மகானோ, ஒரு அவதார புருஷரோ வந்து தான் நமக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பெரிய பணக்காரன் நடப்பதே இல்லை. எப்போதும் வண்டியிலேயே போகிறான். பல ஆண்டுகள் கடக்கின்றன. திடீரென்று ஒருநாள் அவனை வாதநோய் தாக்குகிறது. அவன் விழிக்கிறான். தான் வாழ்ந்த முறை சரியில்லை என்று அப்போது தான் அவனுக்கு உரைக்கிறது. எனக்காக வேறு யாரும் நடக்க முடியாது. எனக்காக இன்னொருவர் நடந்த ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக கேட்டையே நான் தேடிக் கொண்டிருந்தேன். ஒருவருடைய வேலையை எல்லாம் அவருக்காக இன்னொருவர் செய்து வந்தால் முன்னவருடைய அங்கங்கள் எல்லாம் இயற்கைத் திறனை இழந்து விடும். நமக்கு நாமே செய்யும் செயல்கள் மட்டுமே நம் செயல்கள். நமக்காக வேறொருவர் செய்கின்ற எதுவும் நம் செயல் ஆகாது. எனது சொற்பொழிவுகளால் நீங்கள் ஆன்மீக உண்மைகளை அறிந்து கொள்ள முடியாது. அப்படி ஏதாவது உங்களால் அறிந்து கொள்ள முடிந்தால், நான் அதை வெளிப்படுத்த உதவிய ஒரு சிறு கருவி. அவ்வளவு தான். மகான்களும், ஆச்சார்யர்களும் இதைத்தான் செய்ய முடியும். உதவிக்காக பிறரைத் தேடி ஓடுவது முட்டாள் தனம். இந்தியாவில் மாட்டு வண்டிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். பொதுவாக இரண்டு மாடுகளை வண்டியில் கட்டி இழுப்பார்கள். ஒரு கற்றை வைக்கோலை மாடுகளின் கண்களுக்கு முன்னால் அவற்றின் வாய்க்கு எட்டாத அளவில் கட்டித் தொங்க விடுவார்கள். மாடுகள் அந்த வைக்கோலைத் தின்ன முயன்று கொண்டே நடக்கும். ஆனால், அவை எட்டாது. நமக்குப் பிறரால் கிடைக்கும் உதவியும் இது போன்றது தான். பாதுகாப்பு, அறிவு, வலிமை, இன்பம் இவையெல்லாம் வெளியிலிருந்து கிடைக்குமென்று நாம் நினைக்கிறோம். என்றுமே எதிர்பார்க்கிறோம். ஆனால், அது கிடைப்பதில்லை. ஒரு உதவியும்.. .ஒரு போதும் வெளியிலிருந்து வருவதில்லை. மனிதனுக்கு உதவ யாரும் இல்லை. யாரும் இதுவரை இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் மனிதர்கள் இல்லையா? உலக நாயகர்களான உங்களுக்கு பிறரது உதவியா? வெட்கமாக இல்லை. நீங்கள் மண்ணாக மட்கிப் போகும் நிலை வரும் போதே உதவி வரும். ஆனால், நீங்கள் ஆன்மா! நீங்களே முயன்று துன்பங்களில் இருந்து விடுபடுங்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ யாருமில்லை. முன்பு இருந்ததுமில்லை., இருப்பதாக நினைப்பது ஒரு இனிய மயக்கம்! அதனால் எந்த லாபமும் இல்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...