நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த சிவப்பு நிறப்பையின் சுவாரஸ்யப் பின்னணி!

பட்ஜெட் உரை கொண்டு வரப்பட்ட அந்த சிவப்பு நிறப்பையை நிர்மலா சீதாராமனுக்கு தன் கையால் தைத்து தயாரித்து அளித்தது வேறு யாரும் அல்ல, அவருடைய மாமியே தான்.
நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த சிவப்பு நிறப்பையின் சுவாரஸ்யப் பின்னணி!

2019 - 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் சென்ற வாரம் முடிவடைந்தது. இந்திஅ நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது இதுவரையிலும் நிதி அமைச்சர்களானவர்கள் பட்ஜெட் ஃபைல்களை ஒரு சிறிய சூட்கேஸில் வைத்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது தான் வழக்கம். ஆனால், இம்முறை நிர்மலா சீதாராமன் அந்த வழக்கத்தை உடைத்தெறிந்தார். பழசைப் பின்பற்றக் கூடாது என்பதில்லை, ஆனால் அதென்னவோ காலனி ஆதிக்கத்தின் நீட்சியில் ஒன்றாகத் தென்பட்டதால் தான் அம்முறையை மாற்ற நினைத்ததாகப் பிற்பாடு தெரிவித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். எனவே அவர் சிறு சூட்கேஸ் முறையைப் புறக்கணித்து விட்டு அழகான சிறு சிவப்பு நிறப்பை ஒன்றில் சிங்க முத்திரை அதாவது நம்முடைய தேசியச் சின்னமான மூன்று முக சிங்க முத்திரை பதித்து அதன் கீழ் ‘சத்ய மேவ ஜெயதே’ எனும் வாக்கியத்தைப் பொறித்து தமது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தார். நிர்மலாவின் இப்புதிய அணுகுமுறை ஊடகத்தினரால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது. சமீபத்தில் தமிழ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அந்த சிவப்பு நிறப்பை குறித்த மேலும் சில தகவல்களை நிர்மலா சீதாராமன் பகிர்ந்து கொண்டார்.

பட்ஜெட் உரை கொண்டு வரப்பட்ட அந்த சிவப்பு நிறப்பையை நிர்மலா சீதாராமனுக்கு தன் கையால் தைத்து தயாரித்து அளித்தது வேறு யாரும் அல்ல, அவருடைய மாமியே தான். மாமி என்றால் தாய்மாமன் மனைவி. நிர்மலா சீதாராமனின் பெற்றோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பின்னர் பெற்றோருக்குப் பெற்றோராக இருந்து அவரை வளர்த்து, அவரது கல்விக்கு உதவி, திருமணம் செய்து வைத்து இன்று அவரது அரசியல் பணியையும் செம்மையாக வழிநடத்த உதவிக் கொண்டிருப்பது அவரது தாய்மாமனும் அவரது மனைவியும் தான் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பெற்றோர் இல்லாத காலகட்டங்களில் பெற்றொருக்குப் பெற்றோராக இருந்து தம்மை வழிநடத்தும் தாய்மாமன் தம்பதியினரை நிர்மலா பெரிதும் மதிக்கிறார். அதனால் தான், தனது பட்ஜெட் உரையைக் கேட்க நாடாளுமன்றத்தின் பார்வையாளர் அரங்கில் அவர்களை அமர வைத்து அழகு பார்த்தார். 

அப்படி நிர்மலா சீதாராமனின் வாழ்வில் முக்கியமான நபரான அந்த மாமி தன் கையால் தைத்துக் கொடுத்த அந்த சிவப்பு நிறப்பை நாடாளுமன்ற பட்ஜெட் உரையைத் தாங்கும் முன் மும்பை அஷ்டலஷ்மி ஆலயம் மற்றும் விநாயகர் ஆலயங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்யப்பட்ட பின்னரே அதில் பட்ஜெட் உரையை வைத்து மூடி சீலிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம், சிவப்பும், மஞ்சளும் மங்களகரமான நிறங்கள்.. அதில் வட இந்தியாவில் சிவப்பை சுபம் தரும் நிறமாக மக்கள் கருதுவதால் தான் சிவப்பு நிறப்பட்டுத் துணியைத் தேர்வு செய்ததாகக் கூறினார் நிர்மலா.

சிவப்பு நிறப் பை மட்டுமல்ல, பட்ஜெட் உரையின் போது நிர்மலா, மேற்கோள் காட்டிய ‘புறநானூற்றுப் பாடல்’ வரிகள் குறித்தும் இந்திய மீடியாக்கள் சிலாகித்தது நிஜம். அதற்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு என்கிறார் நிர்மலா சீதாராமன். 

நிர்மலா சீதாராமனின் தாய்மாமனாருக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுந்த பற்று உண்டு. எனவே அவர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரைக்கு மேற்கோள் தேடிய போது; 

திருக்குறளில் இல்லாத மேற்கோள்கள் இல்லை, ஆயினும் நமது சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றிலும் அரசு நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய பல அருமையான செய்யுள்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன். அதில் சிறந்த ஒன்றை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்’ என்று கூற அப்படி கிடைத்த 10 செய்யுள்களில் சிறந்த ஒன்றாகத் தேர்வாகி சபை ஏறியது தான் பிசிராந்தையார்.. பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்குச் சொன்ன, ‘யானை புகுந்த நிலம்’ செய்யுள். 
- என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com