நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடலின் பொருள்!

அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும்.
நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடலின் பொருள்!

2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அரசின் முறையான வரி வசூல் கொள்கையைப் பற்றிப் பேசும்போது புறநானூற்று வரிகளை முன்னுதாரணமாக எடுத்துக்கூறி நிர்மலா சீதாராமன் பேசினார்.

நிர்மலா சீதாராமன் உதாரணமாகக் குறிப்பிட்ட அந்தப் புறநானூற்றுப் பாடல் இது தான். 

பாண்டிய மன்னன் அறிவுடை நம்பியைக் காணச்  சென்ற புலவர் பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.
    
"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! "

—(புறம்-184)

இப்பாடல் வரிகள் மூலம் பிசிராந்தையார் "அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்துப் போட்டால் அது பலநாட்களுக்கு உணவாகும். அதுவே, யானையே சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று யானையை நெல்வயலில் விட்டால் அது பசியாற உண்பதைக் காட்டிலும் அதன் காலால் மிதித்துச் சிதைப்பது மிகையாகும். அதுபோல அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்" என விளக்குகின்றார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் பிறந்தவராக இருந்த போதும் கடந்த மக்களவைத் தேர்தலின் போது அவர் தமிழகத் தொகுதிகளின் சார்பில் வேட்பாளராகமல் கர்நாடகாவில் மக்களவை வேட்பாளராக நின்று ஜெயித்து நிதி அமைச்சர் ஆனார் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த விமர்சனத்தை முறியடிக்கும் விதத்தில் நிர்மலா சீதாராமன் தமிழின் பெருமைக்குரிய புறநானூற்றுப் பாடல்களில் ஒன்றை சமயமறிந்து தனது உரையில் சேர்த்திருப்பது பாராட்டுதலுக்குரியதாகக் கருதப்படுகிறது. தமிழில் இலக்கியங்களில் இல்லாத சிறப்புகள் இல்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் மக்கள் வாழ்வின் அத்தனை நுட்பங்களுக்கும் பொருத்தமான பாடல்கள் உண்டு. அவற்றை உணர்ந்து படித்திருந்தாலே போதும் முறையான அரசாட்சி நடத்தும் ஆர்வமும், முனைப்பும் ஆட்சியாளர்களிடம் வந்து விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com