சுடச்சுட

  

  தாமஸ் குக் VS எமிலி: பெண்களின் உடை விஷயத்தில் கடைசியில் கட்டுப்பெட்டி இந்திய சிந்தனை வென்றது!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 16th March 2019 03:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  emili

   

  எமிலி ஒ கனோர் எனும் இளம்பெண் சமீபத்தில் தாமஸ் குக் விமானத்தில் பயணம் செய்யக் காத்திருந்தார். பயண நேரம் வந்ததும் விமானத்தில் ஏற வந்த எமிலியை குறிப்பிட்ட அந்த விமான நிர்வாகத்தினர் விமானத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அதற்கு காரணமாக அவர்கள் தெரிவித்தது எமிலியின் உடையை. அன்று எமிலி அணிந்திருந்தது கிரப் டாப் என்று சொல்லப்படக் கூடிய மேலாடையும் கீழே நம்மூரில் பல்லாஸோ என்ற பெயரில் அகல, அகலமாகப் பெண்கள் அணிந்து கொண்டு நடமாடுகிறார்களே அப்படிப்பட்ட லூஸான பேண்ட் ஒன்றையும் தான். இந்த உடைக்கென்ன? இதைப் போய் காரணம் காட்டி தன்னை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கிறார்களே என்று கோபம் கொண்டார் எமிலி.

  ஆனால் தாமஸ் குக் விமான நிறுவனம் எமிலியிடம் திட்டவட்டமாகக் கூறியது என்னவென்றால்; உடையை மாற்றுங்கள் அல்லது எங்கள் விமானத்தில் இருந்து இறங்குங்கள். இந்த உடையுடன் உங்களை விமானத்தில் ஏற்றிக் கொண்டு பறக்கமுடியாது. ஏனென்றால் உங்களது உடை வேலியில் போகிற ஓணானை இழுத்து காதுக்குள் விட்டுக் கொண்டாற் போல... தேடிப் போய் பிரச்னைக்குள் சிக்க வைக்கத் தக்கவிதமாக இருக்கிறது. இது நிச்சயம் ஆபத்தை உண்டாக்கும். எனவே இந்த உடையுடன் நீங்கள் எங்கள் விமானத்தில் பறக்க முடியாது’ என்று மிகுந்த கண்டிப்புடன் கூறு விட்டது.

  21 எமிலி பிர்மிங்ஹாம் நகரத்தைச் சார்ந்தவர். ஏதோ வேலை காரணமாக சொந்த ஊர் சென்று விட்டு டெனிரிஃப் திரும்புவதற்காகத் தான் மார்ச் 12 ஆம் தேதி ஸ்பெயினிலிருந்து தாமஸ் குக் ஏர்லைன்ஸில் தனது விமான டிக்கெட்டைப் புக் செய்து வைத்திருந்தார் எமிலி. ஆனால், விமான நிறுவனம் தன்னிடம் உடையைக் காரணமாக வைத்து இப்படி ஒரு பிரச்னையைக் கிளப்பவே அதிர்ந்து போன எமிலி நடந்த அத்தனை விவரங்களையும் முழுமையாகத் தனது டிவிட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

  அதுமட்டுமல்ல விமானத்தின் உள்ளே மற்றொரு சக பயணியால் எமிலி இதே உடை விஷயத்துக்காக கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறார். அந்த சமயத்தில் விமான ஊழியர்கள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் அருகிலேயே இருந்தும் கூட எமிலியைப் பாதுகாக்கவோ அல்லது அவர் சார்பாக பரிந்து பேசவோ எந்த நடவடிக்கையும் எடுக்க முயற்சிக்கவில்லை என்றும் எமிலி தெரிவித்திருக்கிறார்.

  அத்துடன் தன்னை இத்தனை பிரச்னையில் மாட்டி வைத்த இதே உடையுடன் தான் பாஸ்போர்ட் செக்கிங் மற்றும் செக்யூரிட்டி செக்கிங்கை முடித்து விட்டு விமானத்துக்குள் நுழைந்திருப்பதாகவும். உடை தான் பிரச்னை எனில் அப்போதே தெரிவித்திருக்கலாமே. ஏன் விமானத்துக்குள் ஏறும் வரை வேடிக்கை பார்த்து விட்டு ஏறிய பின் பயணியை அவமதிக்க வேண்டும். அதோடு சகபயணி தன்னை விமர்சிக்கும் போதும் கூட அருகிலேயே நின்று கொண்டிருந்தும் விமான அதிகாரிகளோ அல்லது பணிப்பெண்களோ தன்னைக் காக்கும் விதத்தில் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் அமைதி காத்தார்களே. இந்த நிகழ்வு தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. என்றும் எமிலி தனது ட்விட்டர் தளத்தில் மிகுந்த மனவருத்தத்துடன் பகிர்ந்திருந்தார்.

  அதுமட்டுமல்ல விமான நிர்வாகம் தன்னிடம் இப்படி ஒரு கடுமையான கோரிக்கையை வைத்ததுமே எமிலி, விமானத்துக்குள் அமர்ந்திருந்த தனது சக பயணிகளை நோக்கி, ‘நான் இந்த உடையுடன் பயணிப்பதில் உங்களில் யாருக்கேனும் ஆட்சேபணை இருக்கிறதா? இந்த உடை உங்களைத் தொந்தரவு செய்யும் விதத்திலா இருக்கிறது? யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் சொல்லுங்களேன்’ என்றும் கேட்டிருக்கிறார். ஆனால் எமிலியின் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை யாரும். கனத்த அமைதி காத்திருக்கிறார்கள். எது எப்படியிருந்த போதும் விமான நிர்வாகம் மட்டும் எமிலியின் ஆட்சேபணையையோ அல்லது எமிலியிஜ்ன் விளக்கத்தையோ கேட்கவே விரும்பவில்லை. அவர்கள் எமிலி வேறொரு ஜாக்கெட் அணிந்து தனது திறந்திருந்த தோள் பகுதி மற்றும் முதுகுப்புறத்தை மறைத்த பின்னரே அவரை நிம்மதியாக விமானத்தில் அமர அனுமதித்திருக்கிறார்கள்.

  இந்தச் சம்பவம் தன்னைப் பாலின ரீதியாக மட்டம் தட்டி கேலி செய்வதாக எமிலி உணர்ந்திருக்கிறார். இப்போதும் அந்த சம்பவம் தன்னுள் எழுப்பிய அதிர்வலைகள் தன்னை விட்டுப் போய்விடவில்லை என்கிறார் எமிலி.

  எமிலியின் டிவிட்டர் பகிர்வுகளுக்கு ஆதரவாகச் சிலர் பதில் அளித்திருந்த போதும். விமான நிர்வாகம் கண்டிப்பு காட்டியது தான் சரி என்ற ரீதியிலும் சிலர் பதில் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  உடை விஷயத்தில் தாராளம் காட்டும் மேலை நாட்டினரிடையே கூட உடையைக் காரணம் காட்டி நிகழ்ந்து விட்ட இந்த சம்பவத்தில் விமான நிர்வாகத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் எனில். நம் நாட்டில் அதைப் பற்றி விதண்டாவாதம் செய்ய என்ன இருக்கிறது. ஆடை என்பது பிறரது பார்வையை உறுத்தாத வண்ணம் அணிவது அனைவருக்குமான பாதுகாப்பு. இதில் பெண்ணுரிமை, பாலின ஏற்றத்தாழ்வு எங்கிருந்து வந்தது? எமிலி அணிந்திருக்கும் உடையைப் பாருங்கள். இப்படி ஒரு உடையுடன் நம் நாட்டு விமானங்களில் பறக்க முடியுமா? இந்திய விமான நிர்வாகங்கள் இதை அனுமதிக்கின்றனவோ இல்லையோ இங்கிலாந்தில் இயங்கும் விமான நிர்வாகம் இதை அனுமதிக்கவில்லை என்பது தான் இதில் மிக முக்கியமான விஷயம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai