Enable Javscript for better performance
இன்று சர்வதேச மகளிர் தினம்... அடடா அந்த வெள்ளரிப் பிஞ்சு, கொய்யாப்பழக் கூடைக்காரிகளை மறந்து போனோமே?!- Dinamani

சுடச்சுட

  

  இன்று சர்வதேச மகளிர் தினம்... அடடா அந்த வெள்ளரிப் பிஞ்சு, கொய்யாப்பழக் கூடைக்காரிகளை மறந்து போனோமே?!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 08th March 2019 01:23 PM  |   அ+அ அ-   |    |  

  basket_vendors

   

  முன்பெல்லாம் பள்ளிக்கூட வாசல்கள் தோறும் நாவல்பழம், கொய்யாப்பழம், வெள்ளரிப் பிஞ்சு, மாம்பழக்கீற்றுகள், பனங்கிழங்கு, பனம்பழம், பலாச்சுளைகள், பலாக்கொட்டைகள் விற்றுக் கொண்டு நடுத்தர வயதுப் பெண்கள் சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.

  ஆண்கள் யாரும் அப்படி உட்கார்ந்து பார்த்ததில்லை. அவர்களுக்கு எப்போதும் பெட்டிக்கடைகள் கை கொடுத்து விடும். பள்ளிக்கூட மதிற்சுவரை ஒட்டி உட்கார்ந்து கொண்டு கூடையிலோ அல்லது கூறு கட்டியோ பழங்களும், கிழங்குகளும் விற்றுக் கொண்டிருந்தது பெரும்பாலும் பெண்களே! அந்தப் பெண்களை எல்லாம் இப்போது இழந்து விட்டோம். சென்னையில் தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்களில் தான் விழ வேண்டியிருக்கும் ஆயினும் மதிற்சுவரை ஒட்டி இப்படிப் பட்ட சிறு பெண் வியாபாரிகளை பள்ளி நிர்வாகங்கள் அண்டவிடுவதில்லை. மாணவர்களின் பாதுகாப்பு காரணமாக என்று சிலர் சால்ஜாப்பு சொன்னாலும் முக்கியமான காரணம் அவர்கள் தான் உள்ளேயே கேண்டீன் வைத்துக் கொண்டிருக்கிறார்களே! சரி அவற்றிலாவது மேலே குறிப்பிட்ட கொய்யாப்பழங்களும், பனங்கிழங்குகளும், கொடிக்காப்புளியும், பலாக்கொட்டைகளும், சீனிக்கிழங்கும் கிடைக்கிறதா? என்று பார்த்தால்.... மூச்! அங்கு அதற்கெல்லாம் இடமே இல்லை. பப்ஸ்கள், மில்க் ஷேக்குகள், ரெடிமேட் மாம்பழ, ஆரஞ்சு ஜுஸ்கள், விதம் விதமான சாக்லேட்டுகள், கேக்குகள், சாக்கோ ஸ்டிக்குகள், சமோஸாக்கள் தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

  சரி மீண்டும் கொய்யாப்பழக்காரிகளுக்கு வருவோம்.

  இன்றைக்கு அற்றுப் போய்விட்ட அந்த கொய்யாப்பழக்காரிகளை நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் தெரியுமா? அவர்களுக்கு பள்ளிக்கூட வாசல்கள் மறுக்கப்பட்டு விட்டதால் பத்துப்பாத்திரம் தேய்த்துப் பிழைக்கும் வீட்டு வேலைக்காரிகள் ஆகிவிட்டார்கள். சென்னையில் பத்துப்பாத்திரம் தேய்க்க ஆள் வைக்காத வீடு என்ற ஒன்று இருக்கிறதா என்ன? அப்படி இருந்து விட்டால் இந்தக் காலத்தில் அது மிகப்பெரிய அதிசயம்! சர்வதேச மகளிர் தினமான இன்று சுயமாய் சின்னஞ்சிறு தொழில் செய்து பிழைத்து வந்த பெண்களை இந்த நகரமயமாக்கலும் மக்களின் மாறி வரும் சிற்றுண்டித் தேர்வுகளும், பள்ளிக்கூட நிர்வாக முடிவுகளும் எவ்விதமாக வீட்டு வேலைக்காரிகளாக ஆகும் நிலைக்குத் தள்ளி விட்டன எனும் கதையை இன்று நினைவு கூராமல் வேறு எப்போது நினைவு கூர்வது?

  உழைக்கும் மகளிருக்கு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும், பிழைத்தலுக்கான கெளரவமான வழிமுறைகளும் பறிக்கப்படுதலும் கூட ஒருவிதமான சமூக பாரபட்சமின்றி வேறென்ன?

  கையில் 100 ரூபாய் இருந்தால் போதும் அன்றெல்லாம் ஒரு பெண் கொய்யாப்பழம் விற்றோ, நெல்லிக்காய்கள் விற்றோ தன் குடும்பத்தைக் காப்பாற்றி விடமுடியும் எனும் நம்பிக்கைக்கு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மதிற்சுவரை ஒட்டிய இடங்கள் உத்தரவாதமளித்த காலம் அது. நான் படித்த பள்ளியின் வாசலை நம்பி ரத்னா, கோட்டையம்மா, செல்லி, வீரம்மா என நான்கு பெண்கள் பிழைத்தனர். காலையில் பள்ளி துவக்கப்பட்டு சற்று நேரத்திற்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார்கள். ஒருத்தி கூடை நிறைய அன்று பறித்த கொய்யாப்பழங்களுடன் உட்கார்ந்திருப்பாள். இன்னொருத்தி மலைநெல்லி, சிறுநெல்லியென நெல்லிக்காய் மூட்டையும், சறுகுப் பையில் மிளகாய்ப்பொடியுமாக உட்கார்ந்திருப்பாள், இன்னொருத்தி கொடிக்காப்புளியும், பனம்பழமும், நீளவாக்கில் கீறி வைத்த கிளிமூக்கு மாம்பழக் கீற்றுமாக உட்கார்ந்திருப்பாள் ஈக்களோ, கொசுக்களோ வந்தால் முந்தானை தான் விசிறி. 50 பைசா இருந்தால் போதும் நிச்சயம் ஒரு கொய்யாப்பழமும், ஒரு கைப்பிடி நெல்லிக்காய்களும் நிச்சயம் கிடைக்கும். உப்பும் உறைப்புமாக மிளகாய்ப்பொடியில் தொட்டுத் தொட்டுக் கடித்து மென்று விழுங்கலாம். சாப்பிட்டு விட்டுக் கை அலம்பித் தண்ணீர் குடித்தால் தொண்டைக்குள் இனிக்கும்.

  அந்தப் பெண்கள் அத்தனை பேருக்கும் சொல்வதற்குத் தனித்தனியே வாழ்க்கைக் கதைகள் உண்டு.

  கோட்டையம்மாளின் புருஷன் விவசாயக் கூலி. ஒருநாள் வயலில் அரணை கடித்து விஷம் ஏறி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் முன் அவர் உயிரை விட குடும்ப பாரம் முழுதும் கோட்டையம்மாள் தலையில். கோட்டையம்மாளுக்கு ஆண் ஒன்றும் பெண்கள் மூவருமாக 4 குழந்தைகள். நான்கு பேருமே படித்ததும், உண்டதும், உடுத்தியதும் கோட்டையம்மா கொய்யாப்பழம் விற்ற காசில் தான். இன்றைக்கு கோட்டையம்மாளின் பிள்ளைகள் கோடீஸ்வரர்களாகி விடாவிட்டாலும் கூட தன்மானத்துடன் எப்படிப் பிழைப்பது என்பதை தங்கள் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்வதைக் கேட்கும் போது கோட்டையம்மாளை எனக்கும் தெரியும் என்ற உணர்வில் மனம் நிறைந்து உதடுகள் புன்னகைக்கத் தவறுவதில்லை.

  ரத்னாவின் கதை வேறு தினுசு. ரத்னாவின் புருஷனுக்கு சாராயப் பழக்கம் இருந்தது. அத்துடன் மலையாளத்துப் பெண்ணொருத்தியுடன் தொடுப்பும் இருந்து வந்ததை ரத்னா அறிய நேர்ந்த பொழுதில் நீதிமன்றப்படிகளெல்லாம் ஏறாமலே தன் புருஷனை விவாகரத்து செய்து விட்டாள் ரத்னா. அந்த நொடி முதல் வயதான மாமியார், வாழாவெட்டி நாத்தனாருடன் சேர்த்து தன் இரண்டு மகன்களின் பொறுப்பும் ரத்னாவுக்கு மட்டுமே என ஆகிப்போனது. புருஷன் மலையாளத்துப் பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து பிறகு அவளையும் ஏமாற்றி விட்டு எங்கோ பரதேசம் போனான் என்று சொல்லிக் கொள்வார்கள். அவன் கதை என்னவானதோ கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், ரத்னா தன் பிள்ளைகளைக் காப்பாற்ற கொடுக்காப்புளி மூட்டையைத் தூக்கினாளோ இல்லையோ இன்று மகன்கள் இருவருமே ஊரறிந்த வியாபார காந்தங்கள் ஆகி விட்டனர். (அட அதாங்க பிஸினெஸ் மேக்னட்) சிறு வயதில் அம்மா கற்றுக் கொடுத்த உழைப்பு இன்று அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மகன்களைப் பெரிதாகப் படிக்க வைக்க முடியவில்லை என்றால் இருவரையுமே தொழில் பழக்கி இன்று அவர்களின் வெற்றிக்கு தானும் ஒரு காரணமாகிப் போனாள் ரத்னா.

  செல்லிக்கு நடுத்தர வயது தாண்டியும் கல்யாணம் குதிர்ந்திருக்கவில்லை. காலம் செல்லச் செல்ல அவளுக்கு கல்யாணம் என்றாலே வேப்பங்காயாகிப் போக திருமணமற்றுத் தனியொரு பெண்ணாக வாழ விரும்பினாள். அப்பா இல்லாத குடும்பம்... பாதுகாப்புக்கு அண்ணனின் தயவு வேண்டியிருந்தது. அண்ணனோ, அண்ணிக்கு ஒரு வேலை வெட்டி இல்லாத ஒரு விருதா தம்பி இருந்தான். அவனை எப்படியாவது செல்லியின் தலையில் கட்டி விட்டால் போதும் தன் சகோதரக் கடமை முடிந்தது என்றொரு மனக்கிலேசம். செல்லியோ கல்யாணமே இல்லாமலிருந்தாலும் இருப்பேனே தவிர இப்படி ஒரு முட்டாளை மணந்து கொள்ளவே மாட்டேன் என்ற மன உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அப்படியென்றால் வீட்டை விட்டு வெளியோ போ... அனாதையா இருந்தா தெருநாயெல்லாம் வீட்டுக்குள்ள வரும் அப்போ இந்த மாப்பிள்ளைக்கு நீ சரி சொல்வே பார்’ என்று அண்ணனும் அண்ணியும் உறும. ச்சீ ச்சீ போங்கடா உங்க பாசமும், பந்தமும் என்று உதறி விட்டு வெள்ளரிப் பிஞ்சு விற்கத் தொடங்கினாள் செல்லி. இன்று செல்லிக்குச் சொந்தமாக ஊரில் வெள்ளரித் தோட்டமே இருக்கிறது. தனியாகத்தான் வாழ்ந்தாள். தன்னை பழிவாங்கிய அண்ணியும், அண்ணனும் பெற்றுப் போட்ட பிள்ளைகளுக்கெல்லாம் செல்லி தான் பின்னாட்களில் திருமணம் செய்து வைக்க வேண்டியதாயிற்று. ஆயினும் அவள் அலுத்துக் கொள்ளவில்லை. வெயிலோ, மழையோ, குளிரோ, பனியோ வெள்ளரிப் பிஞ்சும், மாம்பழங்களுமாக சீசனுக்குத் தக்கவாறு பள்ளிக்கூட மதிற்சுவரை ஆக்ரமித்து தனது தன்மானத் தொழிலை தொடங்கி விடுவாள். சரியாக 20 வருடங்களேனும் இருக்கும்.

  ஆம்... அந்தப் பெண்களை அந்த இடங்களில் பார்த்து... சரியாக 20 வருடங்கள் கடந்திருக்கலாம்.

  இன்றும் அந்தப் பெண்களை எல்லாம் என்னால் மறக்க முடியவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அவர்களது உழைப்பு அவர்களுக்கொரு தன்னம்பிக்கையை, சுயமரியாதையைத் தேடித் தந்திருந்தது என்பதால் தான் அவர்கள் பிற பெண்களில் இருந்து எனக்கு தனித்துத் தெரிந்தார்கள். பெண்கள் சுயதொழில் தொடங்குவதை நமது அரசுகள் பல்வேறுவிதமாக ஊக்குவிப்பதாக அரசு விளம்பரங்கள் வெளிவருகின்றன. அவர்களிடம் சொல்லிக் கொள்ள ஒன்றுண்டு. அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் கேண்டீன் வைப்பதெல்லாம் சரி தான். ஆனால், அந்தக் கேண்டீன்களுக்கான ஒப்பந்தங்களை இப்படி வாழ்வில் போராடி வெல்ல நினைக்கும் உழைக்கும் மகளிர் வசம் ஒப்படைத்தால் என்ன? குறைந்த பட்சம் குழந்தைகளின் ஆரோக்யமாவது கெடாமல் இருக்கும்... அத்துடன் நாம் சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடுவதிலும் ஒரு அர்த்தம் கிடைக்கும்!

  உழைக்கும் மகளிர் அத்துணை பேருக்கும் தினமணி.காம் குழுவினரின் மகளிர் தின வாழ்த்துக்கள்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai