ஆபத்து, நெருக்கடின்னா இனி இது தான்... புதிய எமர்ஜென்சி ஹெல்ப்லைன் எண் 112 குறித்து சில தகவல்கள்...
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 20th February 2019 03:15 PM | Last Updated : 21st February 2019 10:57 AM | அ+அ அ- |

அமெரிக்காவின் 911 ஐப் போல இந்தியாவிலும் சிங்கிள் எமர்ஜென்சி ஹெல்ப் லைன் நம்பர் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் நாடு முழுவதும் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த எண்ணை ஆப் மூலம் ஸ்மார்ட் ஃபோன்களில் தரவிறக்கி வைத்துக் கொண்டால் ஆம்புலன்ஸ்கான எமர்ஜென்சி எண் 108, போலீஸ் கண்ட்ரோல் ரூம் சர்வீஸுக்கான எமர்ஜென்சி எண் 100, தீயணைப்புப் படைக்கான எமர்ஜென்சி எண் 101, தனித்திருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு எமர்ஜென்சி எண் 1090, ஹெல்த் ஹெல்ப் லைன் எண் 108 இவற்றையெல்லாம் தனித்தனியாக கஷ்டப்பட்டு ஞாபகம் வைத்துக் கொண்டு அவசரம் நேர்ந்தால் தனித்தனியாக அழைக்கத் தேவையில்லை என்கிறார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 112 சேவை எண். மேற்கண்ட அனைத்து எமர்ஜென்சி எண்களையும் ஒரே எண்ணின் கீழ் இணைத்து ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். ஆபத்து காலங்களிலோ அல்லது நெருக்கடி நேரங்களிலோ இந்த எண்ணை அழைத்தால் போதும் மற்றெல்லா சேவைகளையும் இயக்க முடியும் என்கிறார்கள்.
இந்தப் புதிய சேவை எண் தற்போது இந்தியாவில் ஆந்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா நகர்ஹவேலி, டாமன், டையூ மற்றும் ஜம்மு கஷ்மீர் என மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பயன்படுத்த நேர்பவர்கள் 3 முறை இந்த எண்ணை தங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலமாக அழைத்தால் போதும். சம்மந்தப்பட்ட சேவை அமைப்புகளுக்கு அந்த அழைப்பு அவசர அழைப்பாகப் பதிவு செய்யப்பட்டு கடத்தப்பட்டு உடனடி உதவி கிடைக்கும் என்கிறார்கள்.