‘தி கிரேட் காளி’ யைக் கேலி செய்கிறதா இந்த நெஸ்லே மஞ்ச் விளம்பரம்!

தி கிரேட் அமெரிக்கன் பாஷ் எனும் நிகழ்ச்சியில் நடத்தப்படவிருந்த பஞ்சாபி ப்ரிஸன் மேட்ச் எனும் போட்டியில் பங்கேற்குமாறு தி அண்டர்டேக்கருக்கு சவால் விட்டார் காளி...
‘தி கிரேட் காளி’ யைக் கேலி செய்கிறதா இந்த நெஸ்லே மஞ்ச் விளம்பரம்!

நெஸ்லே மஞ்ச் சாக்லெட்டின் புதிய விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் தாட்டியான பிரம்மாண்ட மனிதரை நினைவிருக்கிறதா? நம்மூரில் பிரம்மாண்டமாக இருந்தால் உடனே தாராசிங் என்றோ எஸ் வி ரங்காராவ் என்றோ அல்லது கொஞ்சமும் விவஸ்தையே இன்றி உசிலைமணி, குண்டுக்கல்யாணம் என்ற ரீதியில் தான் ஞாபகம் வைத்திருப்போம். இந்த பிரம்மாண்ட மனிதர் அவர்களைப் போன்றவர் இல்லை. சின்ன வயதில் நீங்கள் WWE ப்ரியராக... வெறியராக இருந்திருந்தீர்களெனில் உங்களுக்கு நிச்சயமாகக் காளியைப் பற்றித் தெரிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை.

காளியைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவர் இப்படி நெஸ்லே சாப்பிடும் புத்திசாலி இளைஞனால் முட்டாளாக்கப்படுவதாகக் காண்பிக்கப் படுவதில் ஆட்சேபணை இருக்கக் கூடும்.

நீங்களே அந்தப் புதிய நெஸ்லே மஞ்ச் விளம்பரத்தைப் பாருங்களேன்...

காளியை இந்த விளம்பரத்தில் காணும் போது எனக்கு பி ஆர் சோப்ராவின் பழைய தூர்தர்ஷன் மகாபாரதத்தில் பீமனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரவீண் குமார் சோப்தியின் ஞாபகம் மேலெழுகிறது.

சக்திமிகுந்த பலவான் பீமனாக அவரை மகாபாரதத்தில் கண்டு வியந்து விட்டு பிறகு சில ஆண்டுகளின் பின் நம்மூர் மைக்கேல் மதனகாமராஜன் திரைப்படத்தில் குட்டைக் கமலின் ஆக்ஞைகளுக்கெல்லாம் ஏனென்று கேட்காது கட்டுப்படும் கட்டுமஸ்தான பாடிகார்ட் வேடத்தில் கண்டதும் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்திருந்த மகாபாரத பீமன் கண்களில் கண்ணீர் குளம் கட்ட உறைந்து போனான்.

அப்படித்தான் இருந்தது இந்த கிரேட் காளி நடித்த நெஸ்லே மஞ்ச் விளம்பரம்.

அப்படியென்ன பெரிய அப்பாடக்கரா தி கிரேட் காளி என்று நினைப்பவர்கள் காளியின் மகிமையை கீழே விரியும் கட்டுரையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தி க்ரேட் காளீ என்ற புனைப்பெயருடன் திகழும் இவர் ஒரு இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர் மட்டுமல்ல இவர் ஒரு நடிகரும் கூட. காளி 1995 , 1996 ஆம் வருடங்களில் இந்திய ஆணழகன் பட்டத்தையும் வென்ற முன்னாள் எடை தூக்கும் வீரர் என்றும் கொண்டாடப்படுகிறார். தற்பொழுது உலக மல்யுத்த கேளிக்கை அமைப்பின் (வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட், டபிள்யூ டபிள்யூ ஈ ) ஸ்மேக்டவுன் வர்த்தகச்சின்னத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளார். தொழில்நிலை மல்யுத்த வீரராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் பஞ்சாப் மாநில காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

காளி ஒரு காலத்தில் உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரராக WWE  - ல் இருந்ததோடு மட்டுமல்லாமல், தி லாங்கஸ்ட் யார்ட் (2005) மற்றும் கெட் ஸ்மார்ட் (2008) போன்ற திரைப்படங்கள்லும் தோன்றியுள்ளார்.

காளியின் முதல் போட்டி (2000)!

ஜெயண்ட் சிங் என்ற புனைப் பெயரில் அமெரிக்காவின் ஆல் ப்ரோ ரெஸ்லிங் எனும் மல்யுத்த அபிவிருத்தி முகமையில் முதல் தொழில் முறை மல்யுத்த வீரராக பொறுப்பேற்ற அவர், 2000 ம் ஆண்டு அக்டோபர்-ல் டோனி ஜோன்ஸோடு அணி சேர்ந்து வெஸ்ட்சைட் ப்ளேயஸ் அணிக்கு எதிராக ஆடினார்.

நியு ஜப்பான் புரோ ரெஸ்லிங் அணி (2001–2002)

2001 ஆகஸ்டில், குழு 2000 ன் அணித்தலைவரான மஸாஹிரோ சோனோவால் ஜெயண்ட் சிங்காக நியு ஜப்பான் புரோ ரெஸ்லிங் அணியில் (என் ஜே பி டபிள்யூ) மற்றொரு மாமனிதரான ஜெயண்ட் சில்வாவோடு கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்டார் சிங். தொழில் நிலை மல்யுத்த வரலாற்றில் சராசரி உயரமாக 7 அடி 2½ அங்குலங்களையும் கூட்டு எடையாக 805 பவுண்டுகளையும் கொண்ட உயரமான இணைக் குழு இவர்கள். இவ்விருவரும் முதன் முதலில் அக்டோபர் மாதம் டோக்கியோ டோம் விளையாட்டரங்கத்தில் அணிசேர்ந்தனர். சோனோவால் கிளப் 7 என்று அடையாளங் காணப்பட்ட இவர்கள் யுடாகா யோஷீ, கென்சோ சுசுகி, ஹிரோஷி டனாஷி மற்றும் வெற்றாறு இனோ ஆகியோரை சம பலமற்ற அணிகளின் போட்டி (ஹேன்டிகேப் மேட்ச்) ஒன்றில் தோற்கடித்தனர். இப்போட்டியில் சில்வா டனாஷி மற்றும் இனோ ஆகிய இருவரையும் ஒரே சமயத்தில் வீழ்த்தினார். ஜனவரி 2002 ல் ஹிரோயோஷி டென்சானால் தொட்டில் நுணுக்கம் {கிராடில்}மூலம் வீழ்த்தப்பட்டதின் விளைவாக இணை போட்டிகளில் சிங் தனது முதல் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. மார்ச் மாதத்தில் மனாபு நகானிஷி எனும் வீரரால் ஜெர்மன் சூப்ளக்ஸ் பின் எனும் மல்யுத்த நுணுக்கத்தின் மூலம் வீழ்த்தப்பட்டதால் இணைப் போட்டியின் மற்றொரு பெரிய தோல்வியை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆகஸ்டு மாதம் டோக்கியோவின் நிப்பான் புடோக்கனில் ஒருநபர் போட்டி ஒன்றில் சில்வாவால் வீழ்த்தப்பட்டதின் நிமித்தம் முக்கியத்துவம் வாய்ந்த தோல்வி ஒன்றை தழுவினார் சிங்.

வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (2006 முதல் இன்று வரை)

WWE ல் தி கிரேட் காளீ!

2 ஜனவரி 2006 இல் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) எனப்படும் உலக மல்யுத்த கேளிக்கை அமைப்புடன் ஒப்பந்தமேற்படுத்திக் கொண்ட முதல் இந்திய தொழில் நிலை மல்யுத்த வீரரானார்;[ அவ்வமைப்பின் மேம்பாட்டு சம்மேளனமான டீப் சவுத் ரெஸ்லிங்கை கவனித்து வந்த அவர் தனது பூர்வாங்க பெயரிலேயே ஆடிக் கொண்டிருந்தார்.

தலிப் சிங் தி கிரேட் காளியான கதை...


தலிப் சிங் எனும் இயற்பெயர் கொண்ட காளி 2006 ஆ ஆண்டில் WWE சூப்பர் ஸ்டார் தி அண்டர்டேக்கருடனான சண்டைக்குப் பிறகே கிரேட் காளியானார்.

டைவரி-ஐ தனது மேலாளராகக் கொண்ட, 2006 ம் ஆண்டின் ஏப்ரல் 7 ம் தேதி WWE தொலைகாட்சி நிகழ்ச்சியான ஸ்மாக்டவுனில், தனது பூர்வாங்க பெயரில் தி அண்டர்டேக்கருடனான மார்க் ஹென்றியின் ஆட்டத்தில் அறிமுகமான சிங், அண்டர்டேக்கரைத் தாக்கி போட்டியற்ற நிலையை உருவாக்கினார். அதற்கடுத்த வாரம் தி க்ரேட் காளீ என அறிமுகப்படுத்தப்பட்டார். இவ்வாறு இறுதியில் தி அண்டர்டேக்கரை வீழ்த்த தனக்கொரு வீரர் கிடைத்தார் என்று விவரித்தார் டைவரி (முஹம்மது ஹசன் மற்றும் மார்க் ஹென்றியின் தோற்றுவிட்ட முயற்சிகளுக்குப் பிறகு). ஏப்ரல் 21 ஸ்மாக்டவுனின் அறிமுக மல்யுத்த ஆட்டகள நிகழ்ச்சியில் ஃபுனாகியைத் தோற்கடித்தார் சிங்.

அண்டர்டேக்கரை தோற்கடித்த கதை...

மே 12 ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் உலக முன்னணி குத்துச்சண்டை வீரரான ரே மிஸ்டீரியோவுக்கெதிராக ஜான் பிராட்ஷா லேஃபீல்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட அருந்தேர்வு காளீ ஆவார். மிஸ்டீரியோவை ஒரு ஸ்குவாஷ் போட்டியில் வீழ்த்திய காளீக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்தது அவரது இரண்டடி அதிக உயரமும் 250 பவுண்டுகள் அதிக எடையுமே. ஜட்ஜ்மென்ட் டே என்று பெயரிடப்பட்ட குத்துச்சண்டை நிகழ்ச்சியில் டைவரியின் சட்டத்திற்குப் புறம்பான யோசனைகள் சிலவற்றைப் பெற்ற பின்பு, காளீ தி அண்டர்டேக்கரைத் தலையில் உதைத்து தோற்கடித்தார். பின்வந்த பல வாரங்கள் சம பலமற்ற அணி போட்டிகளை வெல்லுதல், சக்தியைப் பிரகடனம் செய்து கொண்டிருந்த அசகாய சூரர்களையெல்லாம் வீழ்த்துதல்,தி அண்டர்டேக்கரின் வீழ்த்தும் விதம் மற்றும் வெற்றிச் சாடைகளை எள்ளி நகையாடல் என காளீ தனது அட்டகாசத்தைத் தொடர்ந்தார்.

தி கிரேட் அமெரிக்கன் பாஷ் எனும் நிகழ்ச்சியில் நடத்தப்படவிருந்த பஞ்சாபி ப்ரிஸன் மேட்ச் எனும் போட்டியில் பங்கேற்குமாறு தி அண்டர்டேக்கருக்கு சவால் விட்டார் சிங். எனினும் மருத்துவ தகுதியின்மையால் காளீ அப்போட்டியில் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. பிக் ஷோ எனும் மல்யுத்தவீரர் அவருக்குப் பதிலாகக் களமிறங்கி காளீயின் தலையீட்டுக்குப் பின்னும் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. மருத்துவத்தகுதி பெற்றபின் சம்மர்ஸ்லாமில் லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங் மேட்ச் என்றழைக்கப்படும் மயங்க வைக்கும் அடி போட்டியில் கலந்துகொள்ளுமாறு காளீக்கு தி அண்டர்டேக்கரிடமிருந்து சவால் விடப்பட்டது. போட்டி ஸ்மாக்டவுன் நிகழ்ச்சிக்கு மாற்றப்பட்டு சம்மர்ஸ்லாமுக்கு சற்று முன்பே அண்டர்டேக்கரால் வெற்றிவாகை சூடப்பட்டு, காளீக்கு WWE  ன் முதல் தீர்மானமான தோல்வியைக் கொடுத்தது.

தி கிரேட் காளியின் சொந்த வாழ்க்கை!

தலிப் சிங் அலைஸ் காளி... சிங் ஜ்வாலா ராமுக்கும், தன்டி தேவிக்கும் பிறந்தவர்; இந்தர் சிங், மங்கத் சிங் ராணா ஆகியோரை உள்ளடக்கிய ஏழு உடன்பிறந்தவர்களில் ஒருவர். பிப்ரவரி 27, 2002 ஃபிப்ரவரியில்  சிங் ஹர்மீந்தர் கவுரை திருமணம் செய்து கொண்டார். இத்தனை ஆஜானுபாகுவான காளி தனக்கு எச்சூழலிலும் புகையிலை மற்றும் மதுவின் மீது சபலம் தோன்றியதே இல்லை எனவும் அதைத் தான் மிகவும் வெறுப்பதாகவும் கூறுகிறார்.

அவர் தனது புனைப்பெயரான "தி கிரேட் காளி" தெய்வீக சக்தியை உள்ளடக்கிய இந்து பெண் தெய்வமான காளியிடமிருந்தே உருவானது என்று கூறுகிறார். அவரது பெற்றோர் சராசரி உயரமுடையவர்களாகவே இருந்த போதிலும் அவரது தாத்தா 6 அடி 6 அங்குல உயரமுடையவராக இருந்ததால் காளியும் அதீத உயரத்துடனான தோற்றம் கொண்டவராக விளங்கிய போது அது அவரது குடும்பத்தாருக்கு வியப்பேதும் அளிக்கவில்லை என்கிறார்.

சிங்கின் பயிற்சி அட்டவணை நாள்தோறும் காலையும் மாலையும் இரண்டு மணிநேர எடைப்பயிற்சியை உள்ளடக்கியது. அவர் தனது உடல்பருமனைக் கட்டுக்குள் வைக்க கடுமையான தினசரி உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி வருகிறார். காளியின் ரெகுலர் டயட்டில் தினம் ஒரு கேலன் பால், ஐந்து கோழிகள் மற்றும் இரண்டு டஜன் முட்டைகள், இவற்றுடன் சப்பாத்திகள், பழரசம் மற்றும் பழங்கள் ஆகியவை தவறாது இடம்பெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com