பள்ளி பாடத்திட்டத்தில் புற்றுநோய் கல்வி: பரிந்துரைக்கும் ஆய்வாளர்கள்

நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பாடத்திட்டங்களில் புற்றுநோய் கல்வியைச் சேர்ப்பது மாணவர்களிடையே புற்றுநோய் கல்வியறிவை மேம்படுத்தக்கூடும்
பள்ளி பாடத்திட்டத்தில் புற்றுநோய் கல்வி: பரிந்துரைக்கும் ஆய்வாளர்கள்

நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பாடத்திட்டங்களில் புற்றுநோய் கல்வியைச் சேர்ப்பது மாணவர்களிடையே புற்றுநோய் கல்வியறிவை மேம்படுத்தக்கூடும் என்றும் இதனால் புற்றுநோய் விகிதங்கள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மார்க்கி புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, புற்றுநோய் கல்வியின் அவசியம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், கென்டக்கியில் உள்ள 349 நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் கல்வியறிவு எவ்வளவு இருக்கிறது என்று சோதனை செய்யப்பட்டது. இதன்பின்னர் புற்றுநோய் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அதுகுறித்த விளக்கக்காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. 

பயிற்சிக்குப் பின்னர் மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்த கல்வியறிவு அளவீடு செய்யப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு பிறகு மாணவர்கள் புற்றுநோய் பற்றிய அதிக விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர். சராசரியாக, 30 சதவீதம் அதிகம் பெற்றனர். 

ஆராய்ச்சி உதவி இயக்குநரும், ஆன்காலஜி திட்டத்தின் இயக்குநருமான நாதன் வாண்டர்போர்டு, 'நான் எனது பள்ளிப்பருவ காலத்தில் புற்றுநோய் குறித்த கல்வியைப் பெற்றதாக எனக்கு நினைவு இல்லை. அதுபற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல்தான் இருந்திருக்கிறேன். ஆனால், அன்றைய காலகட்டத்தில் அதன் தேவை குறைவாகவே இருந்தது. 

தற்போது, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, ஆரம்பக்கல்வியிலே குழந்தைகள் அனைத்துவிதமான அடிப்படை அறிவையும் பெறுவது அவசியமாகிறது. 

கென்டக்கி நாட்டில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் அதிகளவில் உள்ளது. இதுகுறித்த போதுமான கல்வியறிவு இல்லாததாலேயே தொடர்ந்து நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அனைத்து மக்களுமே ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை தேர்வு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, முதலில் குழந்தைகளின் பள்ளிக்கல்வி வழியாக இதனை எடுத்துச் செல்ல வேண்டும். நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தற்போதுள்ள பாடத்திட்டத்தில் புற்றுநோய் கல்வியை அமல்படுத்துவது விரைவில் புற்றுநோயின் தாக்கம் குறைவதற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர் வாண்டர்போர்டு குறிப்பிடுகிறார்.

அதே நேரத்தில், புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள், புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்த கல்வியறிவை அனைவரும் பெற முடியும் என்பதனால் புற்றுநோய் இல்லாத உலகத்தைக் கூட உருவாக்க முடியும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com