பஃபே உணவகங்களில் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?
By DIN | Published On : 04th August 2021 12:35 PM | Last Updated : 04th August 2021 01:13 PM | அ+அ அ- |

உணவுப்பழக்க முறைகளால் இன்று உடல் பருமனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் உடல் செயல்பாடுகள் குறைந்ததும் இதற்கு முக்கிய காரணம்.
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பலருக்கு இயலாத காரியமாகவே மாறிவிட்டது. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சிக் கூடங்கள் முதல் நவீன செயற்கை சிகிச்சை முறைகள் வரை பல வழிகள் இருக்கின்றன. எனினும் உடல் எடையை அதிகரிக்கும் சில பழக்கங்களை கைவிடுவது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதையும் படிக்க | ஆஸ்திரேலியாவில் தொடரும் கரோனா அபாயம்: இளைஞர் பலி
அந்த வகையில், உடல் எடை அதிகரிப்புக்கும் பஃபே(Buffet) உணவகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆய்வினை மேற்கொண்டனர்.
அதன்படி, பஃபே உணவகங்களில் தொடர்ந்து சாப்பிடுபவர்களின் உடல் எடை வேகமாக அதிகரிப்பதைக் கண்டறிந்தனர்.
'அப்படைடு' என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பஃபே உணவு முறையில் மக்கள் தேர்வு செய்யும் உணவு அதிக எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமனுக்கு காரணமானதாக இருக்கின்றன என்றும் இவ்வகையான உணவுகளை தொடர்ந்து சாப்பிடும்போது உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிக கொழுப்பு கொண்ட உணவுகள் சுவையாக இருக்கும் என்பதாலும் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவுகள் என்பதாலும் அவற்றை அதிகமாக சாப்பிடுவதுண்டு. மேலும், பஃபே உணவு முறையில் அனைத்து உணவுகளும் கண்முன்னே இருப்பதாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதாலும் பிடித்த உணவை அதிகம் சாப்பிட வாய்ப்புண்டு. இம்மாதிரியான உணவகங்களில் உணவின் சுவையை அதிகப்படுத்த ரசாயனப் பொருள்களை உணவில் சேர்ப்பதுண்டு. அனைத்தையும் சுவைத்துப் பார்த்து எது அதீத சுவையாக இருக்கிறதோ அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடலில் அதிக ரசாயனத்தை சேர்த்துக்கொள்வதற்குச் சமம்.
பொதுவான சாக்லேட்டுகள், ஹாட் டாக்ஸ், ப்ரீட்ஸல்கள் அல்லது பிரவுனிகள் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் என்று கூறுகிறார் ஆய்வாளர் டெரா ஃபாசினோ.
உடல் பருமன் கொண்டிராத இளைஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து பஃபே உணவகத்தில் சாப்பிட, ஒரு வருடத்தில் அவர்களின் எடை அதிகரித்து உடல் பருமன் பிரச்னை ஏற்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணையும் தனுஷ் - அனிருத்: கைகோர்க்கும் பிரபல இயக்குநர்
அதி அடர்த்தி கொண்ட உணவுகள், அதிபதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதி சுவையான உணவுகள், அதாவது கார்போஹைடிரேட் மற்றும் சோடியம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டவர்களின் உடல் எடை வேகமாக அதிகரித்தது.
மேலும், இந்த உணவுகளில் சுவைக்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து மேலும் ஒரு ஆய்வு தேவைப்படுகிறது என்று கூறுகிறார் ஆய்வாளர் பாசினோ.
இதுபோன்று குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்விலும் குழந்தைப் பருவத்திலேயே பல குழந்தைகள் சுவையான உணவுகளையே எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் அதீத சுவைக்கு மட்டுமே பழக்கப்படும் குழந்தைகள், வளரும்போது அந்த வகையான உணவுகளை அதிகமாக உட்கொள்ள விரும்புவார்கள். இறுதியில், அதுவே அவர்களின் உடல் பருமன் அபாயத்திற்கான ஆரம்ப காரணியாக மாறலாம்.
பஃபே உணவகங்களில் வரைமுறையின்றி அனைத்து உணவுகளையும் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் அனைத்து உணவுகளையும் சாப்பிடும் இந்த பஃபே உணவுமுறையை விட்டுவிடுங்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...