'தினமும் தயிர் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது' - ஆய்வில் உறுதி
By DIN | Published On : 09th December 2021 01:25 PM | Last Updated : 09th December 2021 01:25 PM | அ+அ அ- |

தினமும் தயிர் உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'இன்டர்நேஷனல் டெய்ரி ஜர்னல்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தயிர் உட்கொள்வதற்கும் ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆபத்து காரணிகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
அதில், தினமும் தயிர் உட்கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் (உயர் ரத்த அழுத்தம்) பாதிக்கப்படுகின்றனர். உயர் ரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவையும் ஏற்படுகின்றன.
இதையும் படிக்க | செயற்கை குளிர்பானங்கள் அருந்தக்கூடாது! ஏன்? நுகர்வுக்கான காரணங்கள் என்ன?
உலக அளவில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இதய நோய்கள் முக்கிய ஒரு காரணம். அமெரிக்காவில், ஒவ்வொரு 36 வினாடிகளுக்கும் ஒருவர் இதய நோயால் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே ஆஸ்திரேலியாவில் 12 வினாடிகளுக்கு ஒரு உயிரிழப்பு நிகழ்கிறது.
'உயர் ரத்த அழுத்தம் இதய நோய்க்கான முதன்மையான ஆபத்துக் காரணியாகும், எனவே ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.
பால் உணவுகள், குறிப்பாக தயிர், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம். இதற்குக் காரணம், பால் உணவுகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
இதற்காக அதிகமாக தயிர் சாப்பிட வேண்டிய அவசியமில்லை, மாறாக சிறிதளவு உட்கொண்டாலே போதுமானது' என்று ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் வேட் கூறினார்.
எனினும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க | மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?