கரோனாவுக்குப் பிறகு 3ல் ஒருவர் அலுவலகம் செல்ல விரும்பவில்லை: ஆய்வில் தகவல்
By DIN | Published On : 17th November 2021 06:11 PM | Last Updated : 17th November 2021 06:12 PM | அ+அ அ- |

கரோனாவுக்குப் பிறகு இந்தியர்களில் 3ல் ஒருவருக்கு அலுவலகம் திரும்பும் எண்ணமில்லை என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அனைவருக்கும் புதிதாக அறிமுகமானது. இது, நிறுவனங்கள் பலருக்கும் வசதியாக இருந்தது. குழுவாக கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் உரையாடவும் ஸூம், கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளும் பிரபலமாகின.
தற்போது கரோனா பரவல் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஐடி நிறுவனங்கள் தவிர பெரும்பாலான நிறுவனங்கள் நேரடியாக செயல்படத் தொடங்கிவிட்டன.
வீட்டிலிருந்து வேலை செய்வதும் பெரும்பாலானோருக்கு பழகிவிட்டநிலையில், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு திரும்புவது குறித்து சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியர்களில் மூன்றில் ஒருவர் அலுவலகத்திற்கு திரும்ப விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு 32% பேர் அலுவலகம் செல்ல விருப்பமில்லை என்றும் இந்தியத் தொழிலாளர்களில் 12% பேர் மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்வதை நிறுத்திவிட்டு பணியிடத்திற்குத் திரும்புவதை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
'டிங் குளோபல் ப்ரீபெய்ட் இண்டெக்ஸ் (ஜிபிஐ)' என பெயரிடப்பட்ட கணக்கெடுப்பில் உலகளவில் 6,250 பதிலளித்தனர். சுவாரசியமாக, பதிலளித்தவர்களில் 39% பேர், வாரத்திற்கு ஒரு சில நாள்கள் மட்டும் அலுவலகத்திற்குச் சென்றால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளனர்.
52% இந்தியர்கள் பொருளாதாரம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது உலக சராசரியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் குடும்ப வருமானம் மற்றும் வேலை நிலைமை குறித்து நேர்மறையாக உணர்வதாக இந்தியர்கள் அதிகம் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, அதிக தடுப்பூசிக்கும் பொருளாதாரம் பற்றிய நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது மூளைக்கு பாதிப்பா?