அதிக ஓய்வு நேரமும் ஆபத்துதான்!

படிப்பு, அலுவலக வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் பலரும் வார இறுதி நாள்களையும் ஓய்வு நேரத்தையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதிக ஓய்வு நேரமும் ஆபத்துதான்!

படிப்பு, அலுவலக வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் பலரும் வார இறுதி நாள்களையும் ஓய்வு நேரத்தையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தொழிலதிபர்கள், கூடுதல் பொறுப்புகளில் இருப்பவர்கள் நேரம் காலம் பாராது வேலை செய்து கொண்டிருக்கின்றனர். 

நாள் ஒன்றுக்கு குறைந்தது 8 மணி நேர தூக்கம் போக, உங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட ஓய்வு நேரம் தேவை என்பது பெரும்பாலான நிபுணர்களின் கருத்து. இந்நிலையில், அதிக ஓய்வு நேரம் இருப்பதும் ஆபத்து என்று புதிய ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது. 

ஓய்வு நேரம் அதிகரிக்கும்போது, ​​வாழ்வு மேம்படுகிறது என்று கூறுவது ஒருபுறம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீறிய ஓய்வு நேரமும் மோசமான விஷயமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

'ஜர்னல் ஆப் பெர்சோனாலிட்டி அண்ட் சோசியல் சைக்காலஜி' என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். யாராவது போன் செய்யும்போது கூட 'நான் பிசியாக இருக்கிறேன்' என்று அழைப்பை துண்டித்துவிடுவதுண்டு. சிலர் வெட்டியாக இருந்துகொண்டு நண்பர்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்வார்கள். இந்த இரண்டு நிலைகளுமே ஆபத்துதான். அதிக நேரம் ஓய்வில் இருக்கும்போது அதுவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்கிறது இந்த ஆய்வு. 

2012 மற்றும் 2013க்கு இடைப்பட்ட காலத்தில் பங்கேற்ற 21,736 அமெரிக்கர்களின் தரவை பகுப்பாய்வு செய்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஓய்வு நேரம் ஒவ்வொரு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. அவ்வாறு 5 மணி நேரம் அதிகரிக்கப்பட்ட நிலையில் அது அவர்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், 5 மணி நேரத்திற்கு அதிகமான கூடுதல் ஓய்வு நேரம் வழங்கப்படும்போது அது அவர்களின் வாழ்வில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியது. 

இதுபோன்று 1992 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் பணியற்றவர்களின் தரவையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் உங்களுக்காக நீங்கள் செலவிடுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது ஒரு மணி நேரம் செலவழித்தது திருப்தியாகவும், 2 மணி நேரம் ஓரளவு திருப்தியாகவும் 3 மணி நேரம் திருப்தியில்லை என்றும் 4 மணி நேரம் கொஞ்சம்கூட திருப்தியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அதாவது பணியாற்றுவோர் பெரும்பாலும் தங்களுக்காக ஒரு மணி நேரம் மட்டுமே செலவிட விரும்புகிறார்கள். அதிக நேரம் ஓய்வில் இருப்பது அவர்களுக்கு  அசௌகரியத்தை உண்டாக்குவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நிகழ்வை மேலும் ஆராய, 6,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இரண்டு ஆன்லைன் சோதனைகளை ஆய்வாளர்கள் நடத்தினர். முதல் பரிசோதனையில், பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு விருப்பமான நேரம் எவ்வளவு என கேட்கப்பட்டது. 

இதில், மிகவும் குறைவான நேரம் அல்லது அதிகமான நேரம் ஓய்வில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்தை உணர்ந்தனர். மக்கள் தங்களுக்கு தேவையானவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே செலவழிக்க விரும்புவதாகவும் அத்தனையும் ஆக்கபூர்வமாக செயல்படுத்தும்போது மன நிம்மதி அடைவதாகவும்  ஆய்வாளர் ஷெரிப் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com