டயட் இருப்பவர்களுக்கு... விழா நாள்களில் செய்ய வேண்டியது என்ன?

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், டயட் இருப்பவர்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?
டயட் இருப்பவர்களுக்கு... விழா நாள்களில் செய்ய வேண்டியது என்ன?
Published on
Updated on
2 min read

உடல் பருமன் அல்லது உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு உடலியல் சார்ந்த பிரச்னை. மாறிவரும் வாழ்க்கை முறை, குறிப்பாக உணவுப் பழக்கவழக்கங்களாலும் உடல் இயக்கமின்றி இருப்பதாலும் மரபுவழிப் பிரச்னைகளாலும் உடல் பருமன் ஏற்படுகிறது. 

ஆனால், உடல் பருமன் என்பது சரிசெய்யக்கூடிய ஒன்று தான். உணவுப் பழக்கத்தில் மாற்றம், போதிய உடற்பயிற்சி இருந்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.

அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க இன்று பலரும் டயட் இருக்கிறார்கள். கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து, புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுத்து, இனிப்புகளைத் தவிர்ப்பதே அடிப்படை டயட். டயட்டிலும் இன்று கீட்டோ, பேலியோ டயட் என்று பல வகைகள் வந்துவிட்டன. 

சரி, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், டயட் இருப்பவர்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

தற்போது சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நாள்களில் விதவிதமான பலகாரங்கள், இனிப்புகள் என உணவு வகைகளுக்கு பஞ்சமிருக்காது. இந்நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? பார்க்கலாம். 

பொரித்த உணவுகள் 

விழா நாள்களில் அதிகம் செய்யப்படும் உணவுகள் எண்ணெய்யில் பொரித்தவை அல்லது எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்டதாக இருக்கும். டயட்டில் இருப்பவர்கள் இந்த எண்ணெய் உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதிலும் பயன்படுத்திய எண்ணெய்களையே மீண்டும் பயன்படுத்தும் நடைமுறை இன்றும் பல வீடுகளில் இருப்பதால் முடிந்தவரை எண்ணெய்களை மறு பயன்பாட்டுக்கு வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஆரோக்கியமற்ற உணவுகள் 

விழா நாள்களில் கொஞ்சமும் ஆரோக்கியமற்ற உணவுகளும் இடம்பெறும்.  இந்நாள்களில் உங்களுக்கென ஒரு உணவுப் பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து எழுதிவிட்டால் உங்கள் மனமும் அதற்கு செட் ஆகிவிடும். முடிந்தவரை ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம். காய்கறிகள், நட்ஸ், பழங்கள் கண்டிப்பாக பட்டியலில் இருக்க வேண்டும். 

குளிர்பானங்கள் 

விழா நாள்களில் குளிர்பானங்களும் அதிகம் புழக்கத்தில் இருக்கும். குளிர்பானங்களில் அதிக கலோரி இருப்பதால் அவற்றைக் குடிப்பதை அறவே தவிர்த்திடுங்கள். உடல்நலத்திற்கு அது நல்லதும் அல்ல. 

தண்ணீர்

விழா நாள்களில் மற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்கலாம். அதிகம் தண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது மட்டுமின்றி மற்ற உணவுகள் எடுத்துக்கொள்வதைக் குறைக்கும். குளிர்பானங்களுக்குப் பதிலாகவும் தண்ணீருக்கு மாற்றாகவும் இளநீர், பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்களையும் அருந்தலாம். 

வெள்ளை சர்க்கரை 

வெள்ளை சர்க்கரை மற்றும் வெள்ளை மாவு உணவுகளை டயட் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவாக இனிப்புகளில் கூடுதல் சுவைக்காக வெள்ளை சர்க்கரையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை சர்க்கரை மற்றும் மாவு பதார்த்தங்களை உட்கொள்ளக்கூடாது என்று முன்னரே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com