மன அழுத்தம் ஏற்பட இதுதான் காரணமா? தீர்வுகள் என்னென்ன?

மன அழுத்தம், மனச் சோர்வு என உடல்நலத்தைவிட மனநலம் தொடர்பான பிரச்னைகள் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றன. வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு அடிப்படைக் காரணம். 
மன அழுத்தம் ஏற்பட இதுதான் காரணமா? தீர்வுகள் என்னென்ன?

மன அழுத்தம், மனச் சோர்வு என உடல்நலத்தைவிட மனநலம் தொடர்பான பிரச்னைகள் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றன. வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு அடிப்படைக் காரணம். 

குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்னைகள் என ஒருவருக்கும் மன அழுத்தம் ஏற்பட பலவித காரணிகள் இருக்கின்றன. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காதபோது, எதிர்பார்த்தது கிடைக்காதபோது, வாழ்க்கையில் தோல்வி, ஏமாற்றம் என எதிர்மறை விஷயங்கள் அரங்கேறும்போது மனம் சோர்வடைகிறது அல்லது அழுத்தம் அடைகிறது. 

இதனால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதுடன் உடலும் பல பிரச்னைகளை சந்திக்கும். 

மன அழுத்தம் இன்று அனைவருக்கும் ஏற்படும் ஒரு சாதாரண பிரச்னை. மன அழுத்தம் ஏற்படும்போது அருகில் யாரும் இல்லாமல் இருந்தாலோ உங்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லையென்றாலோதான் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். 

உங்களுக்கு மன அழுத்தம் உள்ளதா?

நமக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் சில அறிகுறிகளைக் கூறுகின்றனர். 

தூக்கமின்மை, அமைதியற்ற உணர்வு, பசியின்மை/ அதிக பசி, மனம் சோர்வடைதல்,  மந்த நிலை, உடல்நல பாதிப்பு, கவனச் சிதறல்/கவனமின்மை, அலட்சியம், அதிகப்படியான எரிச்சல், பிடித்த விஷயத்தில் ஆர்வமின்மை, தனிமை தேவைப்படுதல்... இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை உங்களுக்கும் இருந்தால் கண்டிப்பாக மனச்சோர்வில்தான் இருக்கிறீர்கள். 

தீர்வு என்ன? 

♦மன அழுத்தம் என்பது அவ்வப்போது எல்லோரும் உணரக்கூடியதுதான். ஆனால், நீண்ட நேரம் அது தொடர்ந்தால்தான் பிரச்னை. 'இதுவும் கடந்து போகும்' என்று அந்த சூழ்நிலையைக் கடந்துவிடுங்கள்.

♦உங்கள் மனதை பாதிக்கக்கூடிய அந்த பிரச்னைக்குத் தீர்வு காணுங்கள். இல்லையெனில் அதை ஏற்றுக்கொண்டு அதனை விட்டுவிடுங்கள்.  

♦மன அழுத்தம் ஏற்படக் காரணமான பிரச்னையை உங்களின் நெருங்கிய நண்பர்களில் யாரேனும் ஒருவரிடம் தெரிவியுங்கள். அதுவே உங்களை சற்று சாந்தப்படுத்தும். தெளிவாக முடிவெடுக்க வைக்கும். 

♦உங்கள் மனதைக் காயப்படுத்தும் செயல்களை, நபர்களை விட்டுவிடுங்கள். 

♦மன அழுத்தத்தை சரிசெய்ய உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நாள் முழுவதும் உங்களை பிசியாக வைத்துக்கொள்ளுங்கள்.

♦ உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம். 

♦உங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். பிடித்த நபர்களுடன் நேரம் செலவழிக்கலாம். 

♦அன்றாட வேலைகளில் சுவாரசியமாக அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

♦பழைய நிலைக்குத் திரும்ப நண்பர்கள், குடும்பத்தினரின் உதவியை நாடலாம். அதன்மேலும், மன அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. உடல்நலத்தில் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவதுபோலவே மனநலத்திற்கும் நிபுணர்களை அணுக யோசிக்கக்கூடாது. 

♦மனம் பாதிக்கப்பட்டால் உடல்நலமும் பாதிக்கப்படும். எனவே, இரண்டும் ஆரோக்கியமாக இருக்க மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com