
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... சாமானியன் முதல் பிரபலங்கள் வரை மொபைல்போன் பயன்படுத்துகிறோம். அலுவலகத்தில் வேலை செய்வோர் நாள் முழுவதும் கணினித் திரையின் முன்புதான் அமர்ந்திருக்கிறார்கள். போதாததற்கு வீட்டில் டிவி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள்... திரைப்படம் பார்ப்பது, சமூக வலைத்தளங்கள், ஆன்லைன் விளையாட்டுகள்... என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதில் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு இருட்டில்தான் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள்.
அந்தவகையில், உடலின் மற்ற உறுப்புகளைவிட கண்களுக்கு இன்று அதிகம் வேலை கொடுக்கிறோம். உடல் ஓய்வு நேரத்தில்கூட கண்களுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கிறது.
இந்த கண்களுக்கு எப்போதுதான் ஓய்வளிப்பது?
இயற்கையையும் சக மனிதர்களையும் அணுகுவதற்காக இருக்கும் அழகான உறுப்பு கண்கள். தொடர்ந்து நாள் முழுவதும் கணினி, மொபைல் போன் என பார்த்தால் கண்டிப்பாக கண்களுக்கு பிரச்னைதான். எனவே, அவ்வப்போது அவற்றுக்கு ஓய்வளிக்க வேண்டும். இரவு குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும்.
வேலைக்கு இடையே சில நொடிகளாவது கண்களை புத்துணர்ச்சி அடையச் செய்ய வேண்டும். கண்களை அவ்வப்போது கழுவுவது மற்றும் கண்களை மூடித் திறப்பது உள்ளிட்ட லேசான பயிற்சிகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். கண்கள் சோர்வடையும்போது கண்டிப்பாக ஓய்வோ புத்துணர்வோ தேவை.
இதையும் படிக்க | ஏபிசி ஜூஸ் தெரியும்! அதென்ன 'க்ரீன் ஜூஸ்'?
எதையெல்லாம் செய்யக் கூடாது?
கண்களைப் பொருத்தவரை நம்மை அறியாமலே தன்னிச்சையாக சில விஷயங்களைச் செய்கிறோம். அன்றாட நிகழ்வுகளில் கண்களைப் பாதுகாப்பதற்கு நாம் கீழ்க்குறிப்பிட்ட விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்...
1. வெந்நீர் வேண்டாம்!
சோர்வடைந்த கண்களை புத்துணர்ச்சி அடைய வைக்க சிலர் கண்களை லேசான சூடுடைய நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறு. அறை வெப்பநிலை நீர் அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கண்களைக் கழுவுவதற்கு வெந்நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. கண் சிமிட்டாமல் இருப்பது
டிஜிட்டல் திரைக்கு முன் இருந்தால் சிலர் கண்களை அடிக்கடி சிமிட்டுவதில்லை. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கண்களை அவ்வப்போது புத்துணர்வு அடைய வைக்கவே கண் சிமிட்டுகிறோம். எனவே, கண்களை அடிக்கடி சிமிட்டுதல் அவசியம்.
3. செயற்கை கண் திரவங்கள்
கண்கள் வறண்டிருந்தால் சில நேரங்களில் செயற்கையான கண் திரவங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நாளைடைவில் கண்கள் மேலும் வறண்டுதான் போகும். மருத்துவரின் அறிவுரையின்றி கண் திரவங்களைப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, கண்களைச் சுற்றி ஏதேனும் இயற்கையான எண்ணெய் பயன்படுத்தலாம்.
4. கண் மாஸ்க், ஹாட் பேக்
சிலர் தூங்குவதற்கு கண் மாஸ்க்குகளையும் கண் தொற்று ஏற்படாமல் இருக்க ஹாட் பேக்குகளையும் பயன்படுத்துகிறார்கள். இரவு நேரத்தில் கண்களுக்கு அழுத்தம் தரக்கூடாது. இவற்றையெல்லாம் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.
5. கண்ணைத் தேய்த்தல்
கண்களைத் தேய்ப்பது பெரும்பாலானோர் தன்னிச்சையாக செய்யும் ஒரு செயல். உணர்ச்சிமிக்க மென்மையான பகுதி என்பதால் கண்களைத் தேய்ப்பது கண்களை நிச்சயம் பாதிக்கும். கண்களில் உறுத்தல் இருந்தால் கண்களை கழுவ வேண்டுமே தவிர தேய்க்க வேண்டாம்.
இதையும் படிக்க | தலைமுடி உதிர்கிறதா? இதெல்லாம்தான் காரணங்கள்! தெரிந்துகொள்ளுங்கள்!