அதிக நேரம் உட்கார்ந்தால் ஆயுள் குறையும்! எவ்வளவு நேரம் உட்காரலாம்?

சற்றும் வியர்க்காத ஏசி ரூமில், எழுந்திருக்க அவசியமில்லாத வீல் சேரில் அமர்ந்து மணிக்கணக்கில் கணினி முன்பாக வேலை செய்வோர் அதிகம்.
அதிக நேரம் உட்கார்ந்தால் ஆயுள் குறையும்! எவ்வளவு நேரம் உட்காரலாம்?

ஓடியாடி வேலை செய்த காலம் எல்லாம் சென்று, தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று உட்கார்ந்து வேலை செய்யும் நடைமுறை பெருகிவிட்டது. சற்றும் வியர்க்காத ஏசி ரூமில், எழுந்திருக்க அவசியமில்லாத வீல் சேரில் அமர்ந்து மணிக்கணக்கில் கணினி முன்பாக வேலை செய்வோர் அதிகம். ஏன், வெளியில் செல்வதற்கு லிப்ட் வசதி, அதன்பின் குறைந்த தொலைவு என்றாலும் வாகனம் என உடல் இயக்கம் குறைந்துவிட்டது. 

உடல் இயக்கமின்மையால் உடல்நலக்கோளாறுகளும் அதிகம் ஏற்படுகின்றன. ஆனால், ஓரிடத்தில் அமர்ந்தே இருப்பதால் உங்களின் ஆயுள் காலம் குறையும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

ஆம், இது தொடர்பான ஆய்வுகளில் இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின், வயதான பெண்களைக் கொண்டு மேற்கொண்ட ஓர் ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அகால மரணத்துடன் தொடர்புடையது எனக் கண்டறிந்துள்ளது. 

ஆய்வில் பங்கேற்ற பெண்கள், அதிக மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்தனர். வாகனம் ஓட்டுவது, கணினியில் வேலை செய்வது, படுத்துக்கொண்டே மணிக்கணக்கில் டிவி பார்ப்பது என இருந்தனர். இவர்களுக்கு இதய நோய், புற்றுநோய் என ஏற்பட்டு முன்கூட்டியே இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பெண்கள்கூட, ஒரு நாளில் சில மணி நேரங்கள் உட்கார்ந்தே இருந்தால் ஆயுள் காலம் குறையும் என்கிறது இந்த ஆய்வு. 

காலையில் நன்றாக உடற்பயிற்சி செய்துவிட்டு சத்தான உணவுகளை சாப்பிட்டு, இப்படி பல மணி நேரம் உட்கார்ந்தே இருந்தால் உங்களின் ஆயுள் குறைந்துவிடும். எனவே, அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.

குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையைவிட்டு ஒருமுறை எழுந்தாவது பின்னர் உட்கார வேண்டும். 

பிரேசில் நாட்டு ஆய்வாளர்களும் இதுகுறித்து மேற்கொண்ட ஓர் ஆய்வில், நாள் ஒன்றுக்கு 3 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தால் இறப்பின் அபாயம் அதிகரிப்பதாகவும் 58 நாடுகளில் 3.8% இறப்பு இதனால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

நாள் ஒன்றுக்கு 3 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்தே இருந்தால், ஒருவர் தன் ஆயுளில் ஒட்டுமொத்தமாக இரண்டு ஆண்டுகளை இழப்பதாகவும் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து டிவி பார்ப்பதால் 1.4 ஆண்டுகள் ஆயுள் காலத்தில் இழப்பதாகவும் 'பிஎம்ஜே ஓப்பன்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஒரு மணி நேரம் அமர்ந்தே இருப்பது ஒரு சிகரெட்டை புகைப்பதற்குச் சமம் என்றும் இது உங்கள் ஆயுளில் 2.18 நிமிடங்களைக் குறைப்பதாகவும் மற்றொரு ஆய்வு கூறுகிறது. 

ஒருநாளில் 3 மணி நேரத்திற்கும் குறைவாக அமர்ந்தால், அதாவது 3 மணி நேரத்திற்குள்ளாக இருக்கையில் இருந்து எழுந்துவிட்டால் ஆயுள்காலம் சராசரியாக 2 மாதங்கள் கூடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, நீங்கள் ஒருநாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டேன், சத்தான உணவுகளைச் சாப்பிடுகிறேன் என்று பல மணி நேரம் இருக்கையில் உட்கார வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலை கொஞ்சமாவது அசைக்க எழுந்து ஓரிரு நிமிடங்கள் நடக்கலாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com