பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 15 விஷயங்கள்

பிள்ளைகள் வளர்ப்பு என்பது மிகவும் சவாலானதாக மாறிவிட்டது. முன்பெல்லாம் பெற்றோர் இப்படியா பிள்ளைகளை வளர்த்தார்கள்.
பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 15 விஷயங்கள்
பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 15 விஷயங்கள்


திருமணத்தை செய்து பார், வீட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி. தற்போதெல்லாம் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துப்பார், அவர்களை வளர்த்துப்பார் என்று தற்போதைய தலைமுறையினரின் புதுமொழியாகிவிட்டது.

பிள்ளைகள் வளர்ப்பு என்பது மிகவும் சவாலானதாக மாறிவிட்டது. முன்பெல்லாம் பெற்றோர் இப்படியா பிள்ளைகளை வளர்த்தார்கள். மிகப்பெரிய குடும்பத்தில் பல விஷயங்களை பார்த்தும், சில விஷயங்களை பார்க்காமலும் அவர்களாகவே வளர்ந்துவிட்டிருப்பார்கள்.

ஆனால், இப்போதோ பிள்ளைகள் வீடு, பள்ளி என நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பதால் அவர்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அப்படி நாம் சரியான முறையில் பிள்ளைகளை வளர்த்திருக்கிறோமா? என்று கேட்டால் பல பெற்றோருக்கும் குழப்பம் ஏற்படும்.

சரி பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான 15 விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா? அல்லது கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறீர்களா என்பதை இங்கே பார்க்கலாம்.

அவர்கள் தங்களது சின்ன சின்ன வேலைகளை அவர்களாகவே செய்து கொள்ள பழக்கப்படுத்த வேண்டும்.

ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி எந்த வித்தியாசமும் இல்லாமல் வீட்டு வேலைகளை தாயுடன் பகிர்ந்து செய்ய அறிவுறுத்த வேண்டும்.

குழுவுடன் இணைந்து விளையாட பழக்க வேண்டும். தற்போதைய பிள்ளைகளுக்கு நண்பர்களுடன் சேர்ந்து விளையாடத் தெரிவதில்லை. தாங்கள் தோற்கவே கூடாது என்ற மனநிலைதான் அதற்குக் காரணமாக இருக்கிறது. அதை மாற்ற வேண்டும்.

எப்போதும் தம்மை சுத்தமாக வைத்துக் கொள்ள பழக்க வேண்டும். இது எப்போதும் முக்கியமான விஷயமாக இருக்கும்.

தங்களுக்கு ஏற்படும் உணர்வை வெளிப்படுத்த சொல்லிக் கொடுங்கள். அன்பு, காதல் நன்றி என எல்லா உணர்வையும் வார்த்தைகளால் வெளிப்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்தில் புத்தகம் படிக்க, கதைகள் கேட்க பிள்ளைகள் விரும்புவார்கள். அதனை பெற்றோர் ஊக்குவத்து பிள்ளைகளுக்கு படிக்கும், கேட்கும் வழக்கத்தை உருவாக்கிட வேண்டும்.

மன்னிப்புக் கேட்கும் தைரியத்தை வளர்க்க வேண்டும். மன்னிப்புக் கேட்க எதற்கு தைரியம் என்கிறீர்களா? நிச்சயம் ஒரு தவறை தான் செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க தைரியம் வேண்டும். மன்னிப்புக் கேட்பது நல்ல குணம், தவறு செய்திருப்பது தெரிந்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற குணத்தை வளர்த்தெடுங்கள்.

நல்லது எது? கெட்டது எது? என்று அவர்களாகவே கற்றறியும் நிலைக்குக் கொண்டு வாருங்கள். எப்போதும் அவர்களை நீங்களே வழி நடத்தாமல், அவர்கள் தவறு செய்யும் போது அதை எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்கள் போக்கில் விட்டுப் பாருங்கள். ஆனால் அவர்களை கவனியுங்கள்.

எங்கே விழுந்தாலும் ஓடிச் சென்று தூக்கி விடும் பெற்றோராக இருக்காதீர்கள். விழுந்தால் அவர்களாகவே எழும் திறன் அங்கிருந்துதான் வளரும். எனவே, எந்த தோல்வி வந்தாலும் உடனே எழும் பக்குவம் கிடைக்கும்.

முதல் அடியை எடுத்து வைக்க பழக்குங்கள். எங்கு இருந்தாலும் யாராவது? என்று ஒரு கேள்வி வரும் போது நான் என்று கையை தூக்கும் முதல் ஆளாக நம் பிள்ளை இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்.

மற்றவர்களிடம் பேசுவதற்கு பயிற்சி கொடுங்கள். யாரிடமும் எந்த கூச்சமும் இன்றி மிக எளிதாக பழக, பேச பழக்கப்படுத்துங்கள். 

வாக்குவாதம் செய்ய அனுமதியுங்கள். அவர்களது கருத்துகள் விமர்சனங்களை காது கொடுத்து கேளுங்கள். மற்றவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று புரிய வையுங்கள். 

எப்போதும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை புரிய வைக்கவும். என்ன நடந்தாலும் அதில் ஒரு நல்லது இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட உங்கள் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த சுற்றுச்சூழலுக்கு சிறந்த மனிதனாக இருந்து, உலகைக் காக்க வேண்டும் என்பதை சொல்லி வளர்க்கலாம். இன்றைய குழந்தைகளே நாளைய தலைமுறை.

சிக்கனம், சேமிப்பு, செலவு போன்றவற்றை மிக எளிதாகக் கற்றுக் கொடுக்கலாம். சின்ன சின்ன செலவுகளை அவர்களே செய்ய வைத்து அது குறித்த அனுபவத்தை அவர்களுக்குக் கொடுக்கலாம்.

எனவே பிள்ளைகள்தானே இப்போது என்ன தெரியும்?என்றில்லாமல், அவர்களை சிறந்த மனிதனாக உருவாக்க நிச்சயம் இதை பெற்றோர் கடைபிடிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com