'பெற்றோர்களே, உங்களின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பகிருங்கள்'
By DIN | Published On : 10th March 2022 06:02 PM | Last Updated : 10th March 2022 06:02 PM | அ+அ அ- |

'குழந்தை வளர்ப்பு' என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரும் சவாலான காரியம்தான். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தும் பெற்றோர்கள், அவர்களுக்கு கல்வியறிவு அளிப்பதுடன் தனிப்பட்ட பண்புகளை சொல்லிக்கொடுத்து வளர்க்கின்றனர்.
அதே அளவுக்கு பெற்றோர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். மற்றவர்களின் அனுபவங்களைவிட உங்களின் அனுபவங்களை வைத்து வாழ்க்கையை கற்றுக்கொடுக்க வேண்டும்.
நீங்கள் தவறானவராக இருந்தாலும் அதையும் எடுத்துரைத்து 'இவ்வாறு இருக்கக்கூடாது' என்று சொல்லலாம். அவர்களின் எதிர்கால நலனுக்கு உங்களின் வாழ்க்கை அனுபவங்கள் தேவை.
அந்தவகையில், ஒட்டாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்வது என்பது குழந்தைகளின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.
'ஜர்னல் ஆஃப் பர்சனாலிட்டி' என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் நினைவுகள், அனுபவங்களைப் பெறும் குழந்தைகள், இளம் பருவத்தினர் வழக்கத்தைவிட மனச்சோர்வு, பதட்டம் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதை மற்றும் காட்சிகளாக நினைவுகளைப் பகிரும்போது குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கவும் இது உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும் 'குழந்தைகள் மற்றும் பதின் வயதினரிடம் தன்னம்பிக்கையான உரையாடலை ஏற்படுத்தினால் அது அவர்களின் மனதில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில் இக்கால குழந்தைகளுக்கு மனச்சோர்வு என்பது அதிகரித்துக் காணப்படுகிறது. அதனைத் தவிர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் முடிந்தவரை உரையாட வேண்டும். குழந்தைகளின் மனநலன் மிகவும் அவசியம் என்பதால் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்' என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆகவே, பெற்றோர்களே உங்கள் குழந்தைகளும் தினமும் உரையாடுங்கள், மனம்விட்டு பேசுங்கள், உங்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிருங்கள்.