கோடைக்கேற்ற ஆடைகளைத் தேர்வு செய்வது எப்படி?

உடல் வறட்சியைத் தடுக்க, நோய்கள் வராமல் பாதுகாக்க, சௌகரியமாக இருக்க கோடையில் எடுத்துக்கொள்ளும் உணவும், உடுத்தும் உடையும் சரியாக இருக்க வேண்டும். 
கோடைக்கேற்ற ஆடைகளைத் தேர்வு செய்வது எப்படி?

கோடை தொடங்கிவிட்டது... வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை வெய்யிலினால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும் அதன் தாக்கத்தில் இருந்து முடிந்தவரை காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

குறிப்பாக உணவு, உடை என உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. 

உடல் வறட்சியைத் தடுக்க, நோய்கள் வராமல் பாதுகாக்க, சௌகரியமாக இருக்க கோடையில் எடுத்துக்கொள்ளும் உணவும், உடுத்தும் உடையும் சரியாக இருக்க வேண்டும். 

கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் நீர் ஆகாரங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காரம், எண்ணெய் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. பழங்கள், பழச்சாறுகள், இளநீர் உள்ளிட்டவை சாப்பிட வேண்டும். உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது அவசியம். 

அதுபோன்று, கோடையில் உடுத்தும் ஆடைகளை எவ்வாறு தேர்வு செய்வது என்று பார்க்கலாம்.. 

♦ முடிந்தவரை பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். அது சேலை, சல்வார் கமீஸ், டாப் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கோடையின் வெப்பம் உடலைத் தாக்காமல் இருக்க பருத்தி ஆடைகள் உதவுகின்றன. ஆண்கள் அதுபோன்று காட்டன் ஷர்ட், பேண்ட் பயன்படுத்தலாம். 

♦ அடுத்ததாக இறுக்கமான ஆடைகளை ஒருபோதும் அணிய வேண்டாம். குறிப்பாக இறுக்கமான ஜீன்ஸ், காட்டன் தவிர்த்து பிற துணியால் ஆன பேண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். 

♦ பெண்கள் லெக்கிங் அணிவதைத் தவிர்த்து பலாஸோ, பட்டியாலா பேண்ட்களை அணியலாம். 

♦  உள்ளாடைகளையும் சற்று தளர்வாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

♦  கிரேப், பாலிஸ்டர், சிந்தடிக், ஷிஃபான் ஆடைகளை தவிர்த்துவிடவும்.

♦ நிறத்தைப் பொருத்தவரையில் கருப்பு நிறத்தை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே பளிச் என்ற நிறங்களைத் தவிர்த்து மென்மையான நிறத்தை தேர்வு செய்யுங்கள். 

♦ கோடைக் காலத்திற்கென்று சில ஆடைகளை வாங்குவதில் தவறு ஒன்றும் இல்லை. பருத்தியால் ஆன கதர் ஆடைகளை அணிவது கோடைக்கு இதமாக இருக்கும். 

♦ அதுதவிர வெளியில் செல்லும்போது பெண்கள் ஸ்கார்ப் கொண்டு முகத்தில் கட்டிக்கொள்ளுங்கள். வேண்டுமெனில் கை, கால்களில் காட்டன் சாக்ஸ் பயன்படுத்துங்கள். கண்ணாடி அணிந்துகொள்வதும் நல்லது. 

♦ முழு கை டாப் அணிந்தால் அவை தளர்வாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அரைக்கை டாப் அணியலாம். 

♦ கோடையில் அதிக வேலைப்பாடு மிக்க கனத்த ஆடைகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். வியர்வையில் அந்த ஆடைகள் உங்களுக்கு அசௌகரியத்தைத் தரும். விழாவுக்கு ஏதேனும் சென்றால் சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு உடனடியாக கழற்றி விடுங்கள். 

♦ கோடையில் ஒருமுறை பயன்படுத்திய ஆடைகளை துவைக்காமல் பயன்படுத்த வேண்டாம். வியர்வை அதிகம் சுரப்பதால் நன்றாக துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்துங்கள். துணிக்கு நறுமணம் தரக்கூடிய சலவை பொடிகளை/திரவங்களை பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com