30 வயதை அடையப் போகிறீர்களா? மாற்ற வேண்டிய 7 விஷயங்கள்!

சிலர் இந்த வயதில் நல்ல நிலைமையை அடைந்திருக்கலாம். சிலருக்கு இந்த வயதில்தான் வளர்ச்சி ஆரம்பித்திருக்கலாம்; ஏன் 30 வயதில் எந்த வளர்ச்சியையும் எட்டாதவர் கூட இருக்கலாம். 
30 வயதை அடையப் போகிறீர்களா? மாற்ற வேண்டிய 7 விஷயங்கள்!

இந்தியாவில் மனிதனின் சராசரி வாழ்நாள் காலம் 69-70 ஆக இருக்கிறது. இதில் ஓரளவு 'ஆக்டிவ்' ஆன காலம் என்று 60 ஆண்டுகளை வைத்துக்கொள்ளலாம். 

இதில் ஒருவர் 30 வயதை எட்டினால் கிட்டத்தட்ட பாதி வாழ்க்கையை கடக்கிறார். 30 வயதைத் தாண்டும்போது ஒரு புதிய மைல்கல்லை எட்டுகிறார் என்றேகொள்ள வேண்டும். 

சிலர் இந்த வயதில் நல்ல நிலைமையை அடைந்திருக்கலாம். சிலருக்கு இந்த வயதில்தான் வளர்ச்சி ஆரம்பித்திருக்கலாம்; ஏன் 30 வயதில் எந்த வளர்ச்சியையும் எட்டாதவர் கூட இருக்கலாம். 

ஆனால், பெரும்பாலானோருக்கு... பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் முடிந்து வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் நேரம் என்று கூறலாம். பெண்கள் பெரும்பாலானோருக்கு இந்நேரம் திருமணம் ஆகியிருக்கும். மற்றொரு புது வாழ்க்கையை அவர்கள் எதிர்நோக்கிக்கொண்டு இருப்பார்கள்.

அதுவே, பெரும்பாலான ஆண்களுக்கு.. 'கமிட்மென்ட்' என்ற ஒற்றை விஷயத்தினால் குடும்பத்தின் சுமை தன்மேல் வந்து விழும் நேரம் இது. 

இந்த வயதில் உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். உடலையும் மனதையும் சரியாக வைத்திருந்தால் மட்டுமே வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும்; நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கவும் முடியும். 

அதிலும் முதலில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி காண முடியும். அந்தவகையில் 30 வயதை எட்டியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள்...

காலை உணவு

வேலைப்பளு காரணமாக, காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமற்றது. காலை உணவைத் தவிர்த்தால் வளர்சிதை மாற்ற விளைவுகளை சந்திக்க நேரிடலாம். நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் குறைக்கும், எடை அதிகரிப்பு மற்றும் அடிக்கடி தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்கவும்

30 வயதில், கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துவிட வேண்டும். கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவதுகூட நல்லதுதான். பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள், மேலும் ஹோட்டலில் சாப்பிடாமல் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். துரித உணவுகள் எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளுங்கள். 

மதுப்பழக்கம்

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் 'பீர்' குடிப்பதை ஒரு ட்ரெண்டிங் ஆக பின்பற்றுகின்றனர். 30 வயதுக்குப் பிறகு உடலில் மாற்றங்கள் நிகழ்வதால் கண்டிப்பாக மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்' முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். புகைபிடிப்பதற்கும் இது பொருந்தும்.

தேவையில்லாத சண்டை வேண்டாம்! 

சிறுசிறு விஷயங்களுக்கு சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். சிக்கல்களை நாகரீகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம். ஒரு முதிர்ச்சியான நபராக நடந்துகொள்ள வேண்டிய நேரம் இது. 

பொறுப்பு 

20 வயதிற்குள்பட்ட பல ஆண்கள் தங்களை பொறுப்புகளில் ஈடுபடுத்திக்கொள்வதில்லை. தனிப்பட்ட சந்தோசங்களை அனுபவிக்க இன்னும் காலம் இருக்கிறது என்று வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்கிறார்கள். ஆனால், 30 வயதில் தானாகவே உங்களது பொறுப்புகள் உங்களிடம் வந்துவிடும். அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டிய அவசியமும் அவசரமும் வந்துவிட்டது. 

குறுஞ்செய்தி வேண்டாமே! 

30 வயதில் உங்களுக்கான பொறுப்புகள், செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் இருப்பதால் நேர மேலாண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். 

நண்பர்களுடன் போனில் 'சாட்' செய்வது, அரட்டை அடிப்பது என்று இல்லாமல் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை மாதத்திற்கு ஒருமுறை என வைத்துக்கொண்டு, மற்ற அவசியமான நேரங்களில் 'சாட்' செய்வதற்குப் பதிலாக போனில் அழைத்துப் பேசுங்கள். அரை மணி நேரம் சாட் செய்வது 2 அதிகபட்சம் 2 நிமிடத்தில் முடிந்துவிடும். இது உங்களை முதிர்ந்த பொறுப்பான நபராகக் காட்டும்; செலவழிக்கும் நேரமும் மிச்சமாகும். அந்த நேரத்தை உபயோகமாகக் கழியுங்கள். 

வாகனம் ஓட்டுதல்

பைக்கிலோ, காரிலோ அதிக சத்தம் எழுப்பிக்கொண்டு வளைந்து வளைந்து ஓட்டுவது, சாலைவிதிகளை கடைபிடிக்காமல் செல்வது... என இந்த விஷயங்களை எல்லாம் இனிமேல் விட்டுவிடுங்கள். 

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக ஓட்டுதல் இந்த இரண்டையும் தவிர்த்துவிட வேண்டும். குறிப்பாக வாகனம் ஓட்டும்போது குறுஞ்செய்தி அனுப்புதல், போனில் பேசுதல் வேண்டாம். 

30 வயதில் இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தைகள் இருந்தால் மிகவும் அபத்தமானது. இது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கு இடையூறாகவும் அமையும். சமூகத்தில் உங்களை பொறுப்பற்ற நபராகக் காட்டும். 

ஒட்டுமொத்தமாக அனைத்து விஷயங்களிலும் உங்களை முதிர்ச்சியான நபராக மாற்றிக்கொள்ள வேண்டிய காலம் இது. அதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com