உங்கள் மகளிடம் இதைக் கேளுங்கள்!
By DIN | Published On : 28th September 2022 03:01 PM | Last Updated : 28th September 2022 06:19 PM | அ+அ அ- |

உங்கள் மகளிடம் இதைக் கேளுங்கள்!
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும்.. தீயவராவதும்.. ஆம் பெற்றோர் கையில்தான். இப்போது இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் பிள்ளைகள் கையில் இருக்கும் செல்லிடப்பேசியில்தான் என்று கூட சொல்லிவிடலாம்.
நாம் இப்போது செல்லிடப்பேசியில் நேரத்தை செலவிடுவதைப் பற்றி பேசப்போவதில்லை. அது பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் காலம் கடந்தே விட்டது.
இதையும் படிக்க | இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎன்ஆர், ரயில் ஸ்டேடஸ் அறியும் வசதி!
இனி பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் கூட இருப்பார்கள் கையில் செல்லிடப்பேசி இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை காலக்கொடுமை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
நேராக விஷயத்துக்கு வரலாம்.. பிள்ளைகளை துணிச்சலாகவும், அதிக தைரியம் கொடுத்தும் வளர்க்க வேண்டும். ஏனெனில் சமூகத்தில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுதான். அதற்காக அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க வைக்கக் கூடாது. அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்துவிட்டு, அவர்களே அதனைக் கண்டறிந்து தெளிவுபெற வைக்க வேண்டும்.
மகன் அல்லது மகள் என்றில்லை, பொதுவாகவே பிள்ளைகளை தைரியமாக வளர்ப்பதில் பெற்றோரின் பெரும் பங்கு இருக்கிறது.
சரி ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நமது பிள்ளைகளிடம் சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்கு அதற்கான பதில்கள் தெரிந்திருக்கலாம், சொல்லத் தெரியாமல் கூட போகலாம். ஆனால் அது தொடர்பான சிந்தனையை அது தூண்டிவிடும்.
எனவே, மகனோ மகளோ இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சிந்தனையின் ஓட்டத்தை உணரலாம்.
- உங்களைப் பற்றி நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நல்ல பழக்கம்?
- எங்கே இருக்கும் போது நீங்கள் அதிக உற்சாகத்துடன் இருக்கிறீர்கள்?
- எதன் மீது உங்கள் அதீத ஆர்வம் செல்கிறது?
- மற்றவர்களிடமிருந்து நீங்கள் எந்த வகையில் தனித்துவமான நபராக உணர்கிறீர்கள்? மற்றவர்களிடமிருந்து எந்த விஷயத்தில் வேறுபடுகிறீர்கள்?
- நீங்கள் வாழ்வில் எந்த இலக்கை அடைந்தால், பெருமையாக உணர்வீர்கள்?
- மற்றவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்றால் நீங்கள் எதைக் கற்றுக் கொடுப்பீர்கள்?
- உங்களிடமிருக்கும் ஒரு பழக்கத்தை அல்லது திறமையை மேம்படுத்த வேண்டும் என்றால் அது என்னவாக இருக்கும்?
- ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய நீங்கள் அதிக அச்சமடைந்ததுண்டா? அப்படியும் அதைச் செய்து முடித்தீர்களா? அது என்ன
- உங்களைப் பற்றி அழகான 5 வார்த்தைகளால் விவரியுங்கள்..
இந்தக் கேள்விகளை எல்லாம் இப்போது கேட்கலாமா? என்று யோசிக்காதீர்கள். கேட்டுத்தான் பாருங்களேன். மிக ருசியான பதில்கள் கிடைக்கலாம். அவர்களைப் பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள் கூட தெரியவரலாம்.