ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் சாப்பிடுவதால் இவ்வளவு பெரிய பிரச்னையா?

ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் போன்ற வறுத்த உணவுகளைச் சாப்பிடுவது மனச்சோர்வு, பதட்டத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் சாப்பிடுவதால் இவ்வளவு பெரிய பிரச்னையா?

ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் போன்ற வறுத்த உணவுகளைச் சாப்பிடுவது மனச்சோர்வு, பதட்டத்தை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 

பொதுவாக வறுத்த உணவுகள் இன்றைய குழந்தைகள் அதிகம் சாப்பிடும் ஒன்றாக இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு வறுவல்தான் பிரதான உணவாக பெற்றோர்கள் கொடுத்து அனுப்புகிறார்கள். ஏன், சில பள்ளிகளிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன. அதுபோல இன்று மால்களில் விற்கப்படும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் எனும் உருளைக்கிழங்கு வறுவலை பலரும் விரும்பி, அளவுக்கதிகமாகவே சாப்பிடுகின்றனர். 

இந்த நிலையில்தான் வறுத்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். வறுத்த உணவுகளை வழக்கமாகவோ அதிகமாகவோ சாப்பிடும்பட்சத்தில் மனச்சோர்வு, பதட்டத்தை அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளனர். 

கவலை, மனச்சோர்வு, பதட்டம் எல்லாம் இன்றைய சூழ்நிலையில் அதிகமானோருக்கு ஏற்படக்கூடிய பொதுவான மனநலப் பிரச்னைகளாக இருந்தாலும் வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வறுத்த உணவுகளில் சுவைக்காக ரசாயனம் ஏதும் கலக்கப்பட்டால் இன்னும் அதீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். 

உருளைக்கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை வறுக்கும்போது அக்ரிலமைடு என்ற வேதிப்பொருள் வெளியாகும். இது உடல் பருமன், வளர்சிதை மாற்றத்தில் கோளாறு, நரம்பியல் கோளாறு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று விளக்கமளித்துள்ளனர். 

கவலை, மனச்சோர்வின் வளர்ச்சியில் இந்த அக்ரிலமைடு முக்கியப் பங்கு வகிப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இந்த ஆய்வின் முடிவுகள் பிஎன்ஏஎஸ்(PNAS) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

வறுத்த உணவுகளுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரைப் பொருட்கள், பீர் ஆகியவற்றை உட்கொள்வதும் மனச்சோர்வை அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல். 

எனவே, கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை வறுக்காமல் வேக வைத்து சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கும் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொடுப்பது நல்லது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com