கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
வயிற்றில் குழந்தை வளர, வளர, அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரம் பசியும் எடுக்காது. அதனால் சாப்பிடாமல் இருந்துவிடக் கூடாது, பதிலாக ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணிகள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை வாழைப்பழம் தருகிறது. உடல் சூடு மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப் பழம் நீக்குகிறது. மேலும், வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து குழந்தைகளின் மூளைத் திறனைத் தூண்டுகிறது.
கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப் பெற சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.
பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டி விடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கும் இதுதான் காரணம். எனவே, பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்துதான் அதற்கான பட்டையை அணியலாம்.
கர்ப்பகாலத்தில் அனைத்து பழங்களையும் உண்பதால் உயிர்சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும் என்றாலும், எளிதில் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் பழங்களான ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, அன்னாசி, திராட்சை, வாழைப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை அதிக அளவிலும், தினந்தோறும் சாப்பிடுவதைவிட வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவற்றைத்தவிர, மாதுளம், கொய்யா, நெல்லிக்கனி, நாவல், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்களை தினமும் உண்ணலாம்.
36 வாரத்துக்குள் பிரசவம் ஏற்பட்டால் அதை ப்ரீ டெர்ம் டெலிவரி என்றும் 40 வாரத்துக்கு மேலானால் அதைப் போஸ்ட் டெர்ம் டெலிவரி என்றும் கூறுகிறார்கள். எனவே, பிரசவக் காலத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பது தாய் சேய் நலத்துக்கும், சுகப் பிரசவத்துக்குமான ஒரு முன்னேற்பாடு நடவடிக்கை. சுகப்பிரவசத்துக்கு அதுவும் முக்கியம்.
தாய் சேய் இருவருக்கும் இரும்புச்சத்து மிக அவசியம். அதுதான் ரத்த சோகை வராமல் காக்கும். கர்ப்பத்திலுள்ள குழந்தையின் கல்லீரலில் இரும்புச்சத்து சேர்த்து வைக்கப்படுவதால் பிறந்த பிறகு முதல் மூன்று மாதங்களுக்கு இச்சத்தையே குழந்தை பயன்படுத்திக் கொள்கிறது. எனவே இரும்புச் சத்து மாத்திரையை கட்டாயம் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மல்லாந்த நிலையில் கர்ப்பிணிகள் படுக்கக்கூடாது என்று சொல்வதுற்கக் காரணம், மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களை அழுத்தும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ஆகிவிடும். இது கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. இதனால் தலைச்சுற்றி மயக்கம் வரும். ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே நல்லது.
'கர்ப்பிணிகளுக்கு ஈறு நோய்' எனும் நோய் வரலாம். அதனால் பற்களை சுற்றி இருக்கும் ஈறு வலுவிழந்து காணப்படுகிறது. அதனால் ஈறுகளில் வீக்கம், வாய் துர்நாற்றம், பற்களில் கூச்சம் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் தாய்மார்கள், பற்படலம் உண்டாகாமல் வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை படிந்திருந்தால் பல் மருத்துவரை அணுகி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு, வாயில் உமிழ் நீர் சுரக்கும் அளவில் மாற்றம் ஏற்படலாம். அதனால், வாய் துர்நாற்றம், பற்சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு புளிப்பு மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.
ஆரம்ப மகப்பேற்றின் பொழுது தாய்மார்களுக்கு வாந்தி அடிக்கடி ஏற்படும். அச்சமயம் புளிப்பு மிகுந்த அமிலமும் வயிற்றி லிருந்து வாயினுள் வருவதால், பல் அரிப்பு ஏற்படலாம். ஆகையால், வாந்தி எடுத்த பின், தண்ணீரால் வாயை பலமுறை நன்கு கொப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்வதால், அமிலத்தால் ஏற்படும் சேதங்கள் குறையும்.
இரவு உறங்கும் முன், சிறிதளவு தண்ணீரில், உப்பு கலந்து வாய் கொப்பளித்தல் சிறந்தது. கடைகளில் விற்கும் அமிலத்தன்மை மிக்க வாய் கொப்பளிப்பான்களை தவிர்த்தல் நல்லது.