
உடலில் கொழுப்பு அதிகமிருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.
உடல் பருமன் என்பது இன்று பெரும்பாலானோருக்கு இருக்கிறது. தற்போதைய வாழ்க்கைச் சூழல், வேலை, சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கம் என இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஏன், மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியான மற்ற பாதிப்புகளும் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகின்றன.
இந்நிலையில் உடல் பருமன் இருப்பது மறதியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டனில் உள்ள ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், உடல் பருமன் அல்லது உடலில் அதிக கொழுப்பு சேர்வது அல்சைமர் எனும் மறதியை நோயைத் தூண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கொழுப்பில் உள்ள எக்ஸ்ட்ராசெல்லுலர் வெசிகிள்ஸ் எனும் கொழுப்பு திசுக்கள், மூளையில் 'அமிலாய்டு-பி பிளேக்'குகளை ஏற்படுத்துகிறது. இதுவே நியூரான்களில் பாதிப்பை ஏற்படுத்தி மூளையின் செயல்திறனைக் குறைத்து மறதியை ஏற்படுத்துகின்றன.
இந்த திசுக்கள் உடல் கொழுப்புக்கும் மூளைக்கும் இடையே தூதர்களாக செயல்பட்டு பாதிப்பை ஏற்படுத்துவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'தி ஜர்னல் ஆஃப் தி அல்சைமர்ஸ் அசோசியேஷன்' இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எலியின் மாதிரிகள் மற்றும் மனிதர்களில் உடல் பருமன் உள்ளவர்களின் கொழுப்பு மாதிரிகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 40% பேர்(70 லட்சம்) உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மறதி ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறதிக்கான ஆபத்து காரணியாக உடல் பருமன் இருப்பது இந்த ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் ஆய்வாளர்கள், உடல் எடையைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.
மூளையில் பிளேக்குகளை ஏற்படுத்தும் அந்த கொழுப்பு திசுக்களை அழிப்பதன் மூலமாக பாதிப்பைக் குறைக்க முடியும் என்றும் மூளையில் மறதியை ஏற்படுத்தும் இந்த அமிலாய்டு - பி பிளேக்குகளை உருவாவதைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிய அடுத்தகட்ட ஆய்வுகள் தேவை என்கின்றனர்.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.