தலைக்கு குளிப்பதால், எண்ணெய் தடவுவதால் முடி உதிருமா?

முடி உதிர்தல் பிரச்னை குறித்து தோல் நிபுணர்கள் கூறியுள்ளது பற்றி....

hair fall

கோப்புப் படம் - ANI

Updated On :

- சுப்ரியா ரமேஷ்

முடி உதிர்தலுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள பரிசோதனை செய்வது அவசியம் என்று கூறும் மருத்துவர்கள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த மேலும் சில விஷயங்களை பரிந்துரைக்கின்றனர்.

முடியின் வேர்க்கால்களைத் தூண்ட வேண்டும்!

முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த முடியின் வேர்க்கால்களைத் தூண்ட வேண்டும் என்று கூறுகிறார் மேன் மேட்டர்ஸ் நிறுவன தோல் மருத்துவரான டாக்டர் சுஷ்மிதா டுரே.

"தலைமுடியை அடிக்கடி கழுவுவது முடியின் வேர்களில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றி, மேலும் முடி உதிர்தலைத் தூண்டுகிறது. அதுபோல வாரத்திற்கு ஓரிரு முறை மட்டுமே தலைக்கு குளிப்பது முடியின் வேர்களில் எண்ணெய், அழுக்கு மற்றும் நாம் பயன்படுத்தும் தயாரிப்பு படிவுகள் தங்கி முடியின் வேர்களை அடைத்துவிடும்" என்றார்.

தலைக்கு குளிப்பதால் முடி உதிருமா?

தோல் நிபுணர் டாக்டர் மிக்கி சிங் கூறுகையில், "அடிக்கடி தலைக்கு குளிப்பதால் முடி உதிர்கிறது என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் குளிக்கும்போது முடி உதிர்ந்தால் அது ஏற்கெனவே வேர்க்காலில் இருந்து உதிர்ந்த முடியாகும். நீங்கள் குளிக்கும்போது அது வெளியேவந்து உதிர்கிறது அவ்வளவுதான். அதனால் குளிப்பதற்கும் முடி உதிர்வதற்கு எந்த தொடர்பும் இல்லை.

ஈரப்பதம் மிகுந்த நகரங்களில் வசிப்போர், பருவமழை காலங்களில், தினமும் தலைக்கவசம் அணிபவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிப்பது ஆரோக்கியமானது" என்று கூறுகிறார்.

டெர்மா ரோலர்!

டெர்மா ரோலர், உச்சந்தலை மசாஜ் செய்யும் கருவிகள், முடியின் வேர்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. டெர்மா ரோலரைப் பொருத்தவரை அத்துடன் பயன்படுத்தப்படும் மினாக்ஸிடில் (முடி உதிர்தல் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்து) முடியின் வேர்க்கால்களைத் தூண்டுகிறது.

ஆனால், டெர்மா ரோலரைப் பயன்படுத்தும்போது அதை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அதில் தொற்றுகள் இருக்கும் என்பதால் ஒருமுறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து பயன்படுத்தலாம். தொற்றுடன் பயன்படுத்தினால் மேலும் விளைவுகளை ஏற்படுத்தும்.

எண்ணெய் தடவுவது அவசியமா?

தேங்காய் எண்ணெய், முடியின் வேர்க்கால்களைப் பாதுகாப்பதில் நல்ல ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டுள்ளது என்கிறார் டாக்டர் மிக்கி சிங்.

"தேங்காய் எண்ணெய் முடி உதிர்தலைத் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எண்ணெய் தலைமுடிக்குள் ஊடுறுவும்போது முடிகளில் புரத இழப்பைக் குறைக்கிறது. இது முடி உடைவதைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும் இந்த எண்ணெய், முடியின் வேர்க்கால்களை குறிப்பிடத்தக்க வகையில் சென்றடைவதில்லை, தேங்காய் எண்ணெய் முடி உதிர்தலைக் சற்று கட்டுப்படுத்துமே தவிர முடி வளர்ச்சிக்கோ, வழுக்கையை சரிசெய்யவோ உதவுவதில்லை" என்றார்.

மேலும் "பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் போது தலைமுடியை இறுக்கமாகக் கட்டுவது, வேலைக்குச் செல்லும்போது இறுக்கமாக போடப்படும் கொண்டைகள், தலைப்பாக அணிவது, திருமணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கனமான செயற்கை முடி, தினசரி ஹெல்மெட் பயன்பாடு முடியின் விளிம்பை இழுப்பது போன்றவற்றாலும் முடி உதிர்தல் ஏற்படலாம்.

அதேபோல வழுக்கைக்கு மினாக்ஸிடில் மருந்து பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி உதிர்தல் பிரச்னையை சரிசெய்ய பொறுமை தேவை. ஏனெனில் அவற்றின் முடிவுகளுக்கு சற்று நேரம் எடுக்கலாம். நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும்" என்றார்.

ஊட்டச்சத்தும் வாழ்க்கை முறையும்...

இந்தியாவில் பல சைவ உணவுகளில் புரதம் குறைவாகவும் கார்போஹைடிரேட் அதிகமாகவும் உள்ளன. முடி புரதத்தால் ஆனது. திருமணங்களுக்கு முன்பு முடி உதிர்வதற்கு பொதுவான காரணங்களில் ஒன்று திடீர் எடைக் குறைப்பு மற்றும் திடீர் உணவுக் கட்டுப்பாடுகள் என்றும் டாக்டர் சிங் கூறுகிறார்.

திடீரென திட்டுத் திட்டாக முடி உதிர்தல், உச்சந்தலையில் அரிப்பு அல்லது வீக்கம், சில வாரங்களுக்குள் திடீரென அதிகரிக்கும் முடி உதிர்தல் ஆகியவை தோல் மருத்துவரை அணுகுவதற்கான அறிகுறிகள். நீங்களாக ஒரு தயாரிப்பைத் தேடி பயன்படுத்துவது பெரும்பாலானோருக்கு பயன் தராது. மரபணு ரீதியாகவும் முடி உதிர்தல் ஏற்படலாம், மன அழுத்தத்தாலும் முடி உதிர்தல் ஏற்படலாம். சரியான பராமரிப்பு முறை என்பது முடி உதிர்தலுக்கான காரணத்தை எவ்வ்ளவு சீக்கிரமாக கண்டறிகிறீர்களோ அது பிரச்னையை விரைந்து சரிசெய்ய உதவும் என்றும் கூறினார்.

தமிழில்: எம். முத்துமாரி

Summary

Does washing the hair or applying oil cause hair loss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.