ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே 7!

காசுக்குத் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூடிய நிலை வரும் என்று எண்ணிப் பார்க்க முடியாத காலத்திலேயே தண்ணீரை ஒரு கூட்டம் விலைக்கு விற்கிறது என்று முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே 7!

"அன்புக்கு நானடிமை' பாடலின் சரணத்திற்காக... சவுக்குக் கன்றைப் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன். 

அப்போது, எம்.எஸ்.வி. அறையிலிருந்த தயாரிப்பாளர்  வி.டி. லட்சுமணன் செட்டியார், "முத்துலிங்கம் மரத்தைப் பிடிக்கிறான். மட்டையைப் பிடிக்கிறான் சரணத்தைப் பிடிக்கமாட்டேன் என்கிறானே!'' என்று கிண்டல் செய்தார். அது என் காதில் விழுந்தது.

உடனே அறைக்குள் சென்று, "ஆமாம்... நான் அதை இதைப் பிடிக்கிறவன்தான். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து உங்களுக்குப் பிடித்த வகையில் பாடலை எழுதிக் கொள்ளுங்கள்'' என்று கோபமாகச் சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

உடனே, இயக்குநர் கே.சங்கர் அவர்களும் எம்.எஸ்.வி. அவர்களும் ஓடிவந்து என்னை சமாதானப்படுத்தினர்.

"அந்தக் காலத்தில் எங்களுக்கெல்லாம் நேராத அவமானமா உனக்கு நேர்ந்துவிட்டது. சினிமா உலகில் நமது திறமை வெளியே தெரியாதவரை நான்குபேர் நான்குவிதமாகத்தான் சொல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது'' என்று அறிவுரை சொல்லிவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறினார்:

எம்.ஜி.ஆர். நடித்த "ஜெனோவா' என்ற படம்தான் நான் முதன்முதல் இசையமைக்க ஒப்பந்தம் ஆன படம். அந்தப் படத்திற்கு ரிக்கார்டிங் செய்வதற்காக ஆர்க்கெஸ்ட்ராவோடு வந்துவிட்டேன். அந்தப் படத்திற்கு இரண்டுபேர் தயாரிப்பாளர்கள். ஒருவர் பெயர் ஈப்பச்சன். இன்னொருவர் பெயர் எஃப். நாகூர். இவர்தான் அந்தப்படத்தின் டைரக்டரும்கூட.

ஸ்டுடியோவிற்கு எம்.ஜி.ஆர். போன் செய்து யார் மியூசிக் டைரக்டர் என்று எஃப். நாகூரிடம் கேட்டிருக்கிறார். எம்.எஸ்.விசுவநாதன் என்று சொல்லியிருக்கிறார்.
இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் ஆர்மோனியம் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவராயிற்றே அவரா? என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். ஆமாம் என்றார் நாகூர். அவர் வேண்டாம் வேறு யாரையாவது மியூசிக் டைரக்டராகப் போடுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார்.

உடனே நாகூர் என்னிடம் வருத்தப்பட்டு எம்.ஜி.ஆர். இப்படிச் சொல்கிறார். ஆகவே அடுத்தமுறை வேறொரு படத்திற்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் இப்போது புறப்படுங்கள் என்றார்.

நாங்களும் ஆர்க்கெஸ்ட்ராவை டாக்சியில் ஏற்றிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த தயாரிப்பாளர் ஈப்பச்சன் என்ன ரிக்கார்டிங் முடிந்துவிட்டதா... அதற்குள் புறப்பட்டுவிட்டீர்கள்? என்றார்.

நாங்கள் எம்.ஜி.ஆர். சொன்ன விஷயத்தைச் சொன்னோம். அதற்கு அவர், நான் தயாரிப்பாளரா? அவர் தயாரிப்பாளரா? வாருங்கள்... என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து தொலைபேசியில் எம்.ஜி.ஆருடன் பேசி என்னை இசையமைக்க வைத்தார்.

என்னுடைய திறமை என்னவென்று தெரிந்தபிறகு எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம்  பெரும்பாலும் என்னைத்தான் மியூசிக் டைரக்டராகப் போடும்படி எம்.ஜி.ஆரே கேட்கும் நிலை உருவானது. சினிமா உலகில் எல்லாம் தெரிந்தவர்களும் உண்டு. அதே நேரத்தில் எதுவும் தெரியாதவர்கள் கூட எல்லாம் தெரிந்தது போலப் பேசுவார்கள். ஆகவே நீ இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. 

அப்படிப் பொருட்படுத்தினால் சினிமா உலகில் வளரமுடியாது'' என்று கால்மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகளைச் சொல்லி, எம்.எஸ்.வி. அவர்களும்,  இயக்குநர் கே.சங்கர் அவர்களும்  என்னைப் பாடல் எழுத வைத்தனர். எம்.எஸ்.வி சொன்ன நிகழ்ச்சிகளில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய நிகழ்ச்சியும் ஒன்று. அதைப் பிறகு சொல்கிறேன்.

அதன்பிறகு சரணங்களை எழுதி அதை மியூசிக்  டைரக்டரும், டைரக்டரும் ஓ.கே. செய்த பிறகு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் காட்டி அவர் சம்மதம் தெரிவித்த பிறகுதான் இப்பாடல் ஒலிப்பதிவானது.

காலை ஒன்பது மணிக்கு ஒலிப்பதிவு ஆகியிருக்க வேண்டிய பாடல் இரவு ஒன்பது மணிக்கு ஜேசுதாஸ் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதுவரை ஜேசுதாஸ் அங்கேயே காத்திருந்து பாடினார். இப்போது அப்படியெல்லாம் நடக்குமா?

பாடல் சரியாக வரவில்லையென்றால் மறுநாள் வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆரும் சொல்லி விடுவார். அண்ணன் விஸ்வநாதனும் சொல்லிவிடுவார். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை மறுநாளே படிப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். அதற்கு மறுநாள் எம்.ஜி.ஆர். வேறொரு படத்திற்கு மங்களூர் செல்ல வேண்டும் அதனால்தான் இவ்வளவு அவசரம்.

இந்தப் பாடலைப் பொருத்தவரை எல்லோரும் என்னால் சிரமப்பட்டு விட்டார்கள். இருந்தாலும் பாடல் பிரபலமானதால் எல்லாரும் சிரமத்தை மறந்து மகிழ்ச்சியடைந்தார்கள் தயாரிப்பாளர் உட்பட. எம்.ஜி.ஆர். பட வரலாற்றிலேயே முதல்நாள் பாடலை ஒலிப்பதிவு செய்து மறுநாளே படப்பிடிப்பு நடத்தி முடித்தது இந்தப் பாடலாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

மறுநாள் படப்பிடிப்பு முடிந்து பத்திரிகையாளரைச் சந்தித்தபோது, இந்தப் பாடல் குறிப்பிட்டபடி இன்றைக்குப் படமாக்கப்படுமா என்ற பதற்றமான சூழ்நிலை இருந்தது. நல்லவேளை முத்துலிங்கம் காப்பாற்றிவிட்டார். அவருக்கு என் நன்றி என்று சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொன்னாராம். இதை பத்திரிகையாளர் ராமமூர்த்தி என்னிடம் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்.

அன்புக்கு நான் அடிமை என்ற பாடலில் மூன்று சரணங்கள் இருக்கும். அதில் இரண்டாவது சரணம்,
குடிக்கும் நீரை விலைகள் பேசிக்
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கும் காசைத் தண்ணீர் போலே
இறைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே
- என்று வரும்.
ஒருமுறை இந்தப் பாடலைப் பற்றி ஜெயா தொலைக்காட்சியில் பேசிய பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காசுக்குத் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூடிய நிலை வரும் என்று எண்ணிப் பார்க்க முடியாத காலத்திலேயே தண்ணீரை ஒரு கூட்டம் விலைக்கு விற்கிறது என்று முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்.

இன்றைக்குத் தண்ணீரை பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்கிறார்கள். கவிஞர்களின் தீர்க்க தரிசனமுள்ள வார்த்தைகள் பொய்க்காது என்பதற்கு இதெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

ஒரு நாள் சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றபோது தாகம் ஏற்பட்டது. அப்போது மணலைத் தோண்டித் தண்ணீர் எடுத்து வடிகட்டி ஒரு குவளை பத்துக்காசுக்கு விற்பதைக் கண்டேன். அதை வாங்கிக் குடித்த அனுபவம் எனக்கு உண்டு. அதை வைத்துத்தான் குடிக்கும்நீரை விலைகள் பேசிக் கொடுக்கும் கூட்டம் அங்கே என்று எழுதினேன்.

வருங்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் சிக்கல்தான் பெரிய சிக்கலாக இருக்கிறது.

நமக்கு உரிமையுள்ள தண்ணீரையே கர்நாடகம் கொடுக்க மறுக்கிறது. நான்கு நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட போது அமைக்கிறோம் என்று உறுதிசொன்ன மத்திய அரசு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அமைக்க முடியாது என்று கையை விரித்துவிட்டது.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com