வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் அழகப்பா பல்கலைக்கழகம்!
அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், அவர்களின் திறமைக்கு தக்க வேலைவாய்ப்புகளை பரிந்துரைத்து அதற்கும் வழிகாட்டுகிறோம்.


உலகம் மாறிக் கொண்டு இருக்கிறது. அதற்கேற்ப தேவைகளும் மாறுகின்றன.
தேவைகளை நிறைவேற்றவே வேலைகள் உருவாகுகின்றன. வேலையைச் செய்வதற்கு அது பற்றிய அறிவு அவசியம். அந்த அறிவைப் பெறுவதற்கு பல படிப்புகள் தோன்றுகின்றன. அந்தப் படிப்புகளைப் பற்றி இளைஞர்கள் கல்வி பயிலும்போதே தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உதவியாக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இளைஞர்களுக்கு கல்வி அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலைவாய்ப்பின் கதவுகளை திறந்துவிடும் வகையில் பல்கலைக்கழகம் சார்பில் தன்னார்வப் பயிலும் வட்டத்தைத் தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சொ. சுப்பையா நம்மிடம் தெரிவித்தவை:
"அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன. அதோடு 40 இணைப்புக் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்பு மற்றும் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை பயிலும்போதே அவரவர் திறனறிந்து இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு உறுதியான எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள உருவாக்கப்பட்டதே "அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டம்' இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தனியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாரத்தின் ஏழு நாட்களும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயிலும் வட்டத்தில் இந்தப் பகுதியில் பயிலும் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் உறுப்பினர்களாக சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தப் பயிலும் வட்டத்தில், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது, வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவது மற்றும் ஆற்றுப்படுத்துவது, அனைத்து வங்கித் தேர்வு, ஆசிரியர் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகள், சீருடைப் பணியாளர்கள் தேர்வு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், இவற்றோடு இளைஞர்களின் கனவுப் பணியாக இருக்கும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகள் என அனைத்து தேர்வுகளுக்கும் அழகப்பா பல்கலைக்கழக பயிலும் வட்டம் வழிகாட்டுகிறது.
வெறுமனே பயிற்சி மட்டுமே அளிக்காமல், தேவையின் அடிப்படையில் மாதிரி தேர்வுகளும், மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டு இளைஞர்
களின் தேர்வு குறித்த அச்சம் முழுமையாக நீக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் பயிற்சிக்கு வர முடியாதவர்களுக்காக வாரத்தின் விடுமுறை தினங்களான சனி,
ஞாயிற்றுக்கிழமைகளிலும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே பயன்பெறுவது போதாது என நினைத்த நாங்கள், பல்கலைக்கழக இணைவு பெற்ற அனைத்து கல்லூரிகளிலும் தன்னார்வ பயிலும் வட்டத்தை தொடங்கியுள்ளோம். இதற்காக 37 இணைப்புக் கல்லூரிகளுக்கு தலா ரூ. 7 ஆயிரம் என சுமார் ரூ. 2.60 லட்சத்தில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்கியுள்ளோம். கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறையாக கல்வி பெறும் இளைஞர்கள் அனைவரும் போட்டித் தேர்வுகள் குறித்த அச்சம் நீங்கி, வேலைபெற வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வியோடு வேலைவாய்ப்புக்கான திறனையும் சேர்த்து பயிற்றுவிப்பதால் அவர்கள் படிப்பை முடித்து வெளியேறும்போதே நல்ல வேலைக்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இதுபோன்றதொரு நடைமுறை வேறு எங்கும் இல்லை.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள்தான் வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற சிந்தனை விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடியும் என ஊக்கப்படுத்தி வருகிறோம்.
அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், அவர்களின் திறமைக்கு தக்க வேலைவாய்ப்புகளை பரிந்துரைத்து அதற்கும் வழிகாட்டுகிறோம்.
அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதுவதற்காகவே தனியாக ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கில் என்ற அமைப்பு கடந்த 2015, ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, அந்தத் துறையில் வெற்றி பெற்ற சிறந்த ஆளுமைகளைக் கொண்டு பேஸ் டூ பேஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக பயிலும் வட்டத்தில் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் இலவச இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ. 1 லட்சம் மதிப்பிலான போட்டித் தேர்வுக்கான அண்மை பதிப்பு புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு சுயமாக கற்றல், குழுவாக அமர்ந்து படித்தல், கற்றவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவை ஊக்குவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனித்தனியாக ஆலோசனைகள் (கவுன்சிலிங்) வழங்கப்படுகிறது.
எங்களுடைய பயிலும் வட்டத்தில் மாணவர்கள் கற்றுக்கொள்வதை மட்டும் ஊக்குவிக்காமல், அவர்கள் கற்றுக்கொண்டதை தைரியமாக வெளிப்படுத்தும் விதமாக அவர்களையே வகுப்பு எடுக்கச் சொல்கிறோம். வரும் பயிற்றுநர்களுடன் கலந்துரையாடச் செய்கிறோம்.
குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான சில முன்னெடுப்புகளும் நடைபெற்று வருகின்றன. ஆதிதிராவிடர் நல அலுவலகம், தாட்கோ போன்றவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருதல், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு அவர்களைத் தகுதியுடையவர்களாக உருவாக்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஆராய்ச்சி மற்றும் அகாடமிக் கல்வியில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர்கள் மொழித்திறனை வளர்த்துக் கொள்ள சிறப்பு பயிற்சியும், பள்ளி, கல்லூரியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஆன் வீல்ஸ் என்ற திட்டம், தனியார் துறை வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள் பல்கலைக்கழம் மூலம் அளிக்கப்படுகிறது'' என்றார் துணைவேந்தர் சொ. சுப்பையா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...