ஓவியக் கலைக்கென்றே பிரத்யேகமாக ஒரு இணையதளம்!
ஓவியம் தொடர்புடைய பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த ஓவியக் கலைக்களஞ்சியத்தினைப் பார்வையிட விரும்புபவர்கள் http:www.artcyclopedia.com எனும் இணைய முகவரிக்குப் பயணிக்கலாம்.


ஓவியக்கலை என்பது கூட்டமைத்தல், வண்ணங்களைப் பயன்படுத்தி, வரைபவரின் எண்ண ஓட்டத்தையும், நோக்கங்களையும் வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும். ஓவியம் ஒருவரின் பல்வேறு தகவல்களை ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஓர் ஊடகமாக - ஓவியக்கலை குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்ட ஓவியக் கலைக்களஞ்சியமாக - ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த இணையதளத்தில் ஓவியர்களைப் பெயர் வழியில் தேடல் (Artists by Name), ஓவியவேலைகளைத் தலைப்பு வழியில் தேடல் (Artworks by Title), ஓவிய அருங்காட்சியகங்கள் (Art Museums) என்று மூன்று முதன்மைத் தலைப்புகள் வழியாகத் தேடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தத் தேடுதல் மூலம், இந்த இணையதளத்திலிருக்கும் ஓவியம் குறித்த செய்திகளை விரைவில் கண்டறிந்து அதுகுறித்த செய்திகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இது தவிர, இங்கு ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் ஓவியர்கள் (Name, alphabetically), இயக்கம் (Movement), ஊடகம் (Medium), பொருள் (Subject), தேசியம் (Nationality), பெண் ஓவியர்கள் (Women Artists) எனும் தலைப்புகளிலான வழிமுறைகளில் எளிமையாகத் தேடிக் கண்டறிவதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட ஓவியர்கள் குறித்த செய்தியுடன், அவர்களின் சில ஓவியங்களையும் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவர்களைப் பற்றிய முழுமையான செய்திகளை அறிந்து கொள்வதற்காக அவர்களைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கும் பிற தளங்களுக்கான இணைப்பு வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இவை தவிர, கட்டுரைகள் (Articles), ஓவியச் செய்திகள் (Art News), உலகளாவிய ஓவிய அருங்காட்சியகங்கள் (Art Museums Worldwide), இணைப்புகள் (Links), சொல்லடைவுகள் (Glossaries) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
கட்டுரைகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் ஓவியம் தொடர்புடைய ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஓவியச் செய்திகள் எனும் தலைப்பில் சொடுக்கினால், ஓவியம், ஓவியப் போட்டிகள் போன்ற ஓவியத் தொடர்புடைய செய்திகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஓவிய அருங்காட்சியகங்கள் எனுமிடத்தில் சொடுக்கினால், உலக வரைபடம் (World Map) ஒன்று பார்வைக்குக் கிடைக்கிறது. இப்படத்தில் கனடா (Canada), ஐக்கியநாடுகள் (United States), மத்திய மற்றும் தென்னமெரிக்கா (Central South America), ரஷ்யா மற்றும் ஐரோப்பா (Europe (incl Russia)), மத்திய மற்றும் கிழக்கு நாடுகள் (Middle Near East), ஆசியா (Asia), ஆப்பிரிக்கா (Africa) என்று ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மண்டலங்களின் பெயர்களில் சொடுக்கினால், அந்த மண்டலப்பகுதியில் இருக்கும் நாடுகள், மாநிலங்கள், நகரங்கள் வாரியாக அருங்காட்சியகங்கள் குறித்த பட்டியல் ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசைப்படி இடம் பெற்றிருக்கிறது. இங்கிருக்கும் அருங்காட்சியகப் பெயர்களின் மேல் சொடுக்கினால், குறிப்பிட்ட அருங்காட்சியகத்தின் இணையதளத்திற்கு இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாகக் குறிப்பிட்ட அருங்காட்சியகத்தின் முழுமையான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
இணைப்புகள் (Links) எனுமிடத்தில் சொடுக்கினால், பொது நுண்கலை இணைப்புகள் (General Fine Art links) எனும் தலைப்பின் கீழ் ஓவியம் தொடர்புடைய தகவல்களைக் கொண்டிருக்கும் பல்வேறு இணையதளங்களின் பெயர்கள் மற்றும் அத்தளம் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இங்கிருக்கும் இணையதளத்தின் பெயரில் சொடுக்கி, அந்தத்தளத்திற்குச் சென்று மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
சொல்லடைவுகள் எனும் தலைப்பில் சொடுக்கினால், அங்கு நுண்கலைக் குறிச்சொற்கள் (Fine Art Terms), கிரேக்க மற்றும் ரோமானியத் தொன்மவியல் (Greek and Roman Mythology), கிறித்தவப் புனிதர்கள் (Christian Saints) எனும் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இங்கு சொடுக்கினால், தலைப்புடன் தொடர்புடைய சொற்கள் ஆங்கில எழுத்துகளின் அகரவரிசையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட சொற்களின் மேல் சொடுக்கினால், அந்தச் சொற்கள் தொடர்புடைய கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கான இணைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
ஓவியம் தொடர்புடைய பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த ஓவியக் கலைக்களஞ்சியத்தினைப் பார்வையிட விரும்புபவர்கள் இங்கே அழுத்தவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...