மகாகவி நினைவைக் கொண்டாட மாத்ருபிருந்தத்தின் சிறப்பு இசை அஞ்சலி! 

“வந்தே மாதரம், தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும், ஜெயமுண்டு பயமில்லை மனமே” உள்ளிட்ட பாடல்களை தேர்வு செய்து இசைக்கலைஞர்கள் பாடவிருக்கிறார்கள்
மகாகவி நினைவைக் கொண்டாட மாத்ருபிருந்தத்தின் சிறப்பு இசை அஞ்சலி! 
Updated on
1 min read

செப் 11, நாளை மகாகவி பாரதியாரின் நினைவு நாள். ஒவ்வொரு வருடமும் பாரதியாரின் நினைவு நாளை அவரது நினைவுள்ள அனைவரும் அவரவர்களுக்குப் பிடித்த விதத்தில் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால்  இது கொஞ்சம் வித்யாசமான கொண்டாட்டமாகத் தெரிகிறது.

மகா கவியின் நினைவுகளை போற்றும் வண்ணம் 45 பெண் இசைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து பாரதியாரின் பாடல்களை மட்டுமே மையமாகக் கொண்டு நடத்தவிருக்கும் 'இசை அஞ்சலி' எனும்  குழு இசை நிகழ்ச்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஏனெனில் இதில் பங்கேற்கும் பெண் இசைக்கலைஞர்கள் அனைவரும் அவரவர் சொந்த காரணங்களுக்காக  இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்குப் பாடுகிறவர்கள். இவர்கள் பிரபல கர்நாடக இசைப்பாடகி சீதா ராஜன் தலைமையில் ஒருங்கிணைந்து தங்களுக்குள் உருவாக்கிய இசைக்குழுவுக்கு 'மாத்ருபிருந்தம்' என்று பெயரிட்டு கடந்த இருண்டு வருடங்களாக குழுவாக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

செப் 12 அன்று திங்கள் மாலை 6.30 மணியளவில் சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் உள்ள குமார ராஜா முத்தையா ஹாலில் இந்நிகழ்வு நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சிக்குத் தலைமை சென்னை மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி. மாத்ருபிருந்தம் இசைக்குழுவிலிருந்து 30 பெண் இசைக்கலைஞர்கள் பாடவிருக்கிறார்கள். இவர்களது நன்முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரபல இசைக்கலைஞர்கள் எம்பார் s கண்ணன் (வயலின்), K சத்யநாராயணன் (கீ போர்டு), அர்ஜூன் கணேஷ் (மிருதங்கம்), S ஜெயச்சந்திரன் (தாள வாத்தியம்) உள்ளிட்டோரும் இவர்களோடு இப்பெரும் குழு இசை நிகழ்வில் பங்கேற்கவிருக்கின்றனர்.

இந்த இசை அஞ்சலியில் பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாட்டுப் பற்று, மொழிப்பற்று, நேர்மறை சிந்தனைத் தூண்டல் எனும் தலைப்புகளில் அவரது பிரசித்தி பெற்ற பாடல்களான “வந்தே மாதரம், தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும், ஜெயமுண்டு பயமில்லை மனமே” உள்ளிட்ட பாடல்களை தேர்வு செய்து இசைக்கலைஞர்கள் பாடவிருக்கிறார்கள்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்றும் ”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்றும்  பெண்களுக்காகப் பாடி பெண் விடுதலையை தமது பாடல்களில், கவிதைகளில் முன்னெடுத்துத் சென்றவர் பாரதி. அவரது நினைவு நாளன்று  தனிப்பட்ட காரணங்களுக்காக இசைக்க மறந்து இசைத்துறையில் ஒதுங்கி இருந்த இந்தப்பெண் இசைக்கலைஞர்கள் பலரும் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சியை நடத்துவது தான் இதன் முக்கியமான சிறப்பு. 

இந்நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமும், வாய்ப்பும் இருப்பவர்கள் மேலதிக தகவல்களுக்கு 24469999 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தேவையான விவரம் அறிந்து கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com