மாணவி தற்கொலைக்குக் காரணம் தேர்வுத் தோல்வியா? ஆசிரியர்களின் பாலியல் வன்முறையா?

மாணவி தற்கொலைக்குக் காரணம் தேர்வுத் தோல்வியா? ஆசிரியர்களின் பாலியல் வன்முறையா?
மாணவி தற்கொலைக்குக் காரணம் தேர்வுத் தோல்வியா? ஆசிரியர்களின் பாலியல் வன்முறையா?
Published on
Updated on
2 min read

மிக அழகாகக் கதக் ஆடத் தெரிந்த மாணவி அவள். 

வயது 15 தான். 

டெல்லியின் சிபிஎஸ்இ பள்ளியொன்றின் 9 ஆம் வகுப்பு மாணவி. 

கதக் ஆடுவதில் இருந்த விருப்பம் பாடங்களைக் கற்றுக் கொள்வதில் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். அதற்காக வீடும், பள்ளியும் அவளைக் கண்டித்திருக்கலாம். இது எல்லா குடும்பங்களிலும் நிகழக்கூடிய ஒன்று தான். நமக்கே தெரியாமல் மனிதத் தவறுகள் இங்கிருந்து தான் தொடங்குகின்றன. 

அவளுக்கு கதக் தான் பெருவிருப்பம் என்றால் அதிலேயே அவளை ஊக்குவித்திருக்க வேண்டும். கல்வி முக்கியமே ஆனாலும் பார்ப்போர் பிரமிக்கத் தக்க அளவில் அவளால் கதக் ஆட முடியுமெனில், அதைக் கற்றுக் கொள்ளும் விருப்பமும் ஒன்றும் தரக்குறைவானதில்லையே! 

ஆனால் நமது இந்திய மனநிலை மெக்காலே வழிக்கல்விமுறையின் அடிப்படையிலான மதிப்பெண்களை உத்தேசித்து மட்டுமே மதிக்கப்படுவதால், நமக்கு எப்போதுமே மதிப்பெண்கள் தான் முதல் முக்கியத்துவமாகப் மனதில் பதிந்து விட்டது. அது நாட்பட, நாட்பட புரையோடிப் போய் மாணவர்களை மதிப்பெண்கள் குறித்த அச்சத்தில் ஆழ்த்தி தேர்வில் தோல்வி என்றதும் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அளவுக்கு விஷ விருட்சமாக இன்று வளர்ந்து நிற்கிறது.

டெல்லி மாணவி விஷயத்தில் அவளது பெற்றோர், ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் அறிவியல் ஆசிரியரும், சமூக அறிவியல் ஆசிரியரும் பாலியல் ரீதியாக அவளைத் துன்புறுத்தியதாகவும் அதற்கு மாணவி எதிர்ப்புக் காட்டியதால் தேர்வில் வேண்டுமென்றே அவள் தோல்வியுறுமாறு மதிப்பெண்களைக் குறைத்து விட்டார்கள் எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், பள்ளியில் முதல்வர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெற்றோரின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்கள். அந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததாகக் கூற முடியாது. அவர் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற மார்ச் 23 ஆம் தேதி தேர்வு ரீசெட்யூல் செய்யப்பட்டிருந்தது. அதற்குள் அவர் இப்படித் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு ஆசிரியர்களின் மீது பழிசுமத்துவது தவறு என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த இரண்டில் எது உண்மை?

பெற்றோர்கள் கூறுவது உண்மையா? பள்ளி நிர்வாகம் கூறுவது உண்மையா?

இரண்டுக்கும் நடுவில் விடை தெரியாக் கேள்விகள் சில இருக்கத்தான் செய்கின்றன.

சம்பவ தினத்தன்று மாணவியைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்றோர்கள் இருவரும் வெளியில் சென்றுள்ளனர். வீட்டில் தனியே இருந்த மாணவி தனது நோட்டுப் புத்தகத்தில், மன அழுத்தம் மிகுந்தவராக ‘ I am failure, I am dumb, I Hate myself' என்றெல்லாம் கிறுக்கித் தள்ளியிருக்கிறார். பெற்றோர் வீட்டிலில்லாத தனிமையில் தனது மனதைத் திறந்து கொட்டி தனது உண்மையான ஏக்கத்தை, சஞ்சலத்தை வெளிப்படுத்த வாய்ப்பு தரப்படாத ஒரு குழந்தையின் மனக்கதறலே இது. இதை அந்தப் பெற்றோர் உணர்ந்தார்களா? எனத் தெரியவில்லை. ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துவது தவறெனக் கூறவில்லை. அவர்கள் குற்றச்சாட்டில் உண்மையிருக்கும் பட்சத்தில் இன்னும் குழந்தமை மாறாத அந்தச் சிறுமியின் உணர்வுகளைக் காயப்படுத்திய எவருமே தண்டிக்கப் பட வேண்டியவர்களே! ஆனால், இதில் பெற்றோர் உணர்ந்து கொண்டாக வேண்டிய விஷயமும் இருக்கிறது.

தங்கள் மகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகள் இருக்கும் பட்சத்தில் சிறுமியின் பெற்றோர் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. அப்படி நடவடிக்கை எடுத்திருப்பின் அதைப் பற்றியும் தங்களது புகாரில் தெரிவித்திருக்கக் கூடும். ஆனால், இதுவரை அதைப்பற்றிய செய்திகள் எதுவும் கவனத்துக்கு வரக்காணோம். மாணவியின் தந்தையும் ஒரு ஆசிரியரே எனும் போது, மகள், தனது ஆசிரியர்கள் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிவித்த போதே அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திருக்க வேண்டும் தானே?! அப்படியல்லாமல் மகளை இழந்த பின்பு அதற்கு காரணம் ஆசிரியர்களின் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் மட்டுமே என்று ஒட்டுமொத்தமாக அவர்கள் மீது மட்டும் பழியைப்போட்டு விட முடியாது.

வீட்டில் யாருமற்ற தனிமையில் தனக்குத் தானே தோல்வியுற்றவளாகக் கருதிக் கொண்டு தூக்கில் தொங்கிய அந்தச் சிறுமியின் மனத்துயருக்கு காரணம் என்ன? வழக்கு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. பெற்றோர் கூற்றுப் படி ஆசிரியர்கள் தவறிழைத்தவர்கள் எனில் அவர்கள் நிச்சயம் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப் பட வேண்டியவர்களே! அன்றியும் முன்னதாக தேர்வுத் தோல்வியால் மனமுடைந்திருந்த மாணவியை வீட்டில் தனியாக விட்டு விட்டுச் சென்ற பெற்றோர் தரப்பில் தான் தவறும், பொறுப்பற்ற தன்மையும் இருந்திருக்கிறது என நிரூபணமானால் அவர்களும் கூடத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

உண்மையில் தண்டனைக்குரியவர்கள் யார் என்பது தெளிவான விசாரணையின் முடிவில் தெரிய வரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com