ஒரே வாரத்தில் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைக்க ஒரு சூப்பர் டயட்!

அதிகாலையில் வெறும் வயிற்றில் காஃபீ, டீ அருந்துவதைத் தவிர்த்து விட்டு தேங்காய்ப்பாலோ அல்லது மலை நெல்லிக்காய் சாறோ தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அருந்துங்கள். இவை இரண்டுமே மிகச்சிறந்த நச்சு நீக்கிகள்.
ஒரே வாரத்தில் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைக்க ஒரு சூப்பர் டயட்!
Published on
Updated on
2 min read

அதிகாலையில் வெறும் வயிற்றில் காஃபீ, டீ அருந்துவதைத் தவிர்த்து விட்டு தேங்காய்ப்பாலோ அல்லது மலை நெல்லிக்காய் சாறோ தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அருந்துங்கள். இவை இரண்டுமே மிகச்சிறந்த நச்சு நீக்கிகள். உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி குடலைச் சுத்தம் செய்வதில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன.

காலையில் 8 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவைச் சாப்பிட்டு விடுங்கள். காலை உணவாக முளைகட்டிய பயிறுகளை சாப்பிடலாம். முளை கட்டிய பயிறுகளில் உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் பூரணமாக இருக்கின்றன. அவற்றை காலையில் உட்கொள்வதால் மூளை சுறுசுறுப்படைவதுடன் உடல் இயங்க போதிய ஆற்றலும் கிடைத்து மதிய உணவு நேரம் வரை பசியுணர்வும், சோர்வும் இல்லாமலும் இயங்க முடியும். எந்தெந்தப் பயிறுகளை முளை கட்டுவதென்றால் பாசிப்பயிறு, உளுந்து, கேழ்வரகு, கம்பு, முக்கடலையுடன் சிறிது வெந்தயத்தையும் முளைகட்டி எடுத்துக் கொள்ளலாம். பாசிபயிறில் புரதம் அதிகமிருக்கிறது, கம்பில் கால்சியச் சத்து அதிகமுண்டு, கேழ்வரகில் இரும்புச்சத்து போதுமான அளவு இருக்கிறது. இவற்றோடு வெந்தயம் எடுத்துக் கொண்டால் போதிய நார்ச்சத்தும் கிடைத்து விடும். முளைகட்டிய பயிறுகளை அப்படியே சாப்பிட போர் அடித்தால் அதில் கொஞ்சல் எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது அரிந்த சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டுத் துறுவல் இட்டு உப்பும், மிளகும் அளவாகத் தூவியும் சாப்பிடலாம். சுவையாக இருப்பதோடு சலிக்காமலும் இருக்கும். முளைகட்டிய பயிறு சாப்பிட சலிப்பாக இருந்தால் ஒரு நாள் முளை கட்டிய பயிறு வகை மறுநாள் சத்தான காய்கறி சாலட்டுகள் என மாற்றி மாற்றியும் சாப்பிட்டுக் கொள்ளலாம். காய்கறி சாலட்டுக்கு கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளைப் பயன்படுத்தலாம்.

மதிய உணவாக நிறையக் காய்கறிகளையும் ஒரே ஒரு கப் சிறு தானிய சோற்றையும் ஒரு கப் கீரையையும் சாப்பிட வேண்டும். சிறு தானியங்களென்றால் சாமை, வரகு, திணை, கம்பு, கேழ்வரகு, சீரகச் சம்பா குருணை அரிசி, என ஏதோவொன்றை சோறாக வடித்துப் பயன்படுத்தலாம். அரிசிச் சோற்றை கூடுமான வரை நிச்சயமாக உடல் எடை குறையும் வரை தவிர்த்து விடுதல் நல்லது. இதே அசைவ உணவுப் பழக்கம் இருப்பவர்கள் 150 கிராம் மட்டுமே அசைவ உணவுகளை உண்ணலாம் அவற்றோடு சேர்த்து சிறு தானிய உணவு ஒரு கப் சாப்பிடலாம்.

இரவு உணவாக வெறும் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். கொய்யா, வாழை, செவ்வாழை, மாதுளை என எல்லாவகைப் நாட்டுப் பழங்களையும் இரவில் சாப்பிடலாம். படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்து விட வேண்டும்.

இந்த டயட்டை தொடர்ந்து 7 நாட்களுக்குப் பிடிவாதமாகப் பின்பற்றினால் நிச்சயமாக உங்களது உடல் எடை 3 முதல் 5 கிலோ வரை குறையும் என யூ டியூப் காணொளியொன்றில் கூறுகிறார்கள்.

அந்தக் காணொளி...

பின்பற்றிப் பார்த்து விட்டு பலிதமானால் எங்களுக்கு எழுதுங்கள். இது பெரிதாக நோய்த்தாக்குதல் இல்லாத சாமானியர்களுக்கு ஆபத்தில்லாத டயட் தான். இதனால் எதிர்விளைவுகள் எனப் பெரிதாக ஏதும் நிகழ்ந்து விடப் போவதில்லை. ஆரோக்யக் குறைபாடுகளோ அல்லது பெரிய நோய்த்தாக்கங்களிலோ இருப்பவர்கள் இம்மாதிரியான டயட்டுகளை மருத்துவர் ஆலோசனையோ, பரிந்துரையோ இல்லாமல் எடுப்பது உசிதமானதல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com