உங்க குல தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கா? அப்போ உடனே எங்களுக்கு எழுதி அனுப்புங்க!

வாசகர்கள் அவரவர் குலதெய்வம் தோன்றிய கதைகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அவை ‘குலதெய்வக் கதைகள்’ என்ற பெயரில் தினமணி இணையதளத்தில் தொடராக வெளியிடப்படும்.
உங்க குல தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கா? அப்போ உடனே எங்களுக்கு எழுதி அனுப்புங்க!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குடும்ப அமைப்புமுறை என்று எடுத்துக் கொண்டால் இந்துக்களின் கலாச்சாரத்தில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவரவருக்கு என்று சொந்தமாக குலதெய்வங்கள் உண்டு. குலதெய்வங்கள் என்பவை பெரும்பாலும் பெருந்தெய்வங்களாக இருப்பதில்லை. கருப்பசாமி, அய்யனார், சாஸ்தா, ஜக்கம்மா, அக்கம்மா, கிச்சம்மா, தென்கரை மகாராசா, நாச்சியா, சித்தம்மை, சென்னம்மா, செல்லியரம்மன், மாரியம்மன் என்று நாட்டார் தெய்வங்களாகவே அமைகின்றன. சிலருக்கு முருகன், கள்ளழகர், சிவன் உள்ளிட்ட பெருந்தெய்வங்கள் குலதெய்வங்களாக அமைகின்ற போதிலும் முதல் பூஜை கருப்பசாமிக்கோ அல்லது துடியான வேறு தாய்த்தெவங்களுக்கோ தான் நடத்தப்பட்டு படையலிடப்படுவது வழக்கம்.

குலதெய்வங்கள் உண்டான கதை ஒரு துன்பியல் நாடகம் போன்றது தான்.

  • சரித்திரத்தில் ஏதோ சில சமூகக் காரணங்களுக்காக இளம் வயதில் துள்ளத் துடிக்க போரில் உயிரிழந்தவர்கள்...
  • பிறரது வஞ்சத்தாலோ அல்லது சதியாலோ கொல்லப்பட்டவர்கள்...
  • முகமதிய மன்னர்கள், ஜமீந்தார்கள், பண்ணையார்கள் உள்ளிட்டோரின் சிறையெடுப்பில் சிக்கி அந்தப்புரப் பாவையராகும் அவலத்திலிருந்து தப்ப சொந்தக் குடும்ப உறுப்பினர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்கள்...

- இப்படி அநீதியாக உயிரிழப்பவர்களின் ஆன்மாக்களை திருப்திப் படுத்துவதற்காக, அவர்களது மறைவை, இழப்பைப் புனிதப்படுத்துவதற்காக அவர்களை குலங்களைக் காக்கும் காவல் தெய்வங்களாக்கி ஆண்டு தோறும் குலதெய்வத் திருவிழாக்கள் நடத்தப் படுகின்றன.

சென்னையைப் பற்றிய ஒரு பூர்வீக நாட்டார் கதை...

சென்னையைப் பற்றிய ஒரு பூர்வீக நாட்டார் கதையில், சென்னா தேவி என்ற ஆந்திரத்து இளம்பெண்ணொருத்தியின் அழகில் மயங்கிய முசல்மான் அரசனொருவன் அவளைத் தனது அந்தப்புரத்திற்கு அனுப்பச் சொல்லிக் கட்டளையிடுகிறான். பச்சைக்கிளி போல பாசத்தைக் கொட்டி வளர்க்கப்பட்ட சிறுமி அவள். அவளை முசல்மானிடம் பறிகொடுப்பதை விட அவள் சார்ந்த குலத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவளுடன் ஊரைக் காலிசெய்து கொண்டு அரசனின் எல்லை தாண்டி வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று அரசனைச் சார்ந்தோருக்கு சந்தேகம் வராத அளவில் கையில் சிக்கியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மொத்தமாக கிளம்புகின்றனர். கிளம்பி விட்டார்களே தவிர அவர்களைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டே பின் தொடர்ந்த அரசனின் படைவீரர்களிடமிருந்து தப்பி பயணத்தையும் தொடர்ந்து கொண்டு தங்களது நித்திய வாழ்க்கையையும் நடத்திக் கொள்வது அவர்களுக்குப் பெருந்துன்பமாக இருக்கிறது. பெண்களும், குழந்தைகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இடைவழியில் தொற்றுநோய்களால் சிலர் இறக்க நேரிடுகிறது. இப்படி கிளம்பிய போதில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் பலரை அந்தக் குலம் இழக்க நேர்கிறது. அப்படியானதொரு தருணத்தில் சென்னா தேவியும் தொற்று நோயொன்றில் அவர்களது பயணத்தின் இடைவழியில் பலியாக அவள் உயிரிழந்த இடமே இன்றைய நமது சென்னப் பட்டணம் அலைஸ் சென்னைப் பட்டிணம் என்றொரு கதையுண்டு. சென்னை உருவானதாகக் கூறப்படும் பல கதைகளில் இதுவும் ஒன்று. இது நிஜமா? கற்பனையா? தெரியவில்லை. ஆனால், சென்னம்மா ஒருசாரருக்குக் குலதெய்வமானது இப்படித்தான்.

சென்னா தேவி, சென்னம்மா எனும் குலதெய்வமான கதையைப் போல நம் ஒவ்வொருவருக்குமே சொல்லிக் கொள்ள ஒரு காத்திரமான குலதெய்வக்கதை உண்டு. குலதெய்வங்கள் என்பவை மூத்த தலைமுறையினரோடு மறக்கப்பட வேண்டியவை அல்ல. குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்குமே தெரிந்திருக்க வேண்டிய கதைகளைக் கொண்டவை அவை.

எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள ஒரு குலதெய்வக் கதை இருக்கலாம்...

ஆகவே அவரவர் குலதெய்வங்களை அவரவர் தெரிந்து கொள்வதோடு உங்களது குலதெய்வம் தோன்றிய கதையையும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அவை ‘குலதெய்வக் கதைகள்’ என்ற பெயரில் தினமணியில் தொடராக வெளியிடப்படும். உங்கள குலதெய்வங்களின் புகழ் தினமணி இணையதளம் மூலமாக தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் பரவட்டும்.

பார்க்கலாம் எத்தனை பேர் தங்களது குலதெய்வப் பெருமைகளை ஆர்வத்துடன் சொல்ல முன் வருகிறீர்கள் என! விசாரித்த வரையில் சிலருக்கு குலதெய்வம் என்றால் யாரென்றே தெரியாது என்கிறார்கள். சிலருக்கு குலதெய்வம் தெரியும் ஆனால், அதன் பின்னுள்ள கதையெல்லாம் தெரியாது எனும் நிலை. சிலருக்கு அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்? வெட்டி வேலை என்ற எண்ணம். அப்படி எளிதாக ஒதுக்கி விட முடியாதே குலதெய்வங்களை.

குலதெய்வ வழிபாடும் சமூக ஒற்றுமைக்கான ஒரு திறவுகோலே!

ஏனென்றால் குலதெய்வ வழிபாடு என்பது சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான வாயிலைத் திறந்து வைக்கும் அம்சங்களில் ஒன்றாகவும் விளங்கக் கூடியதாகிறதே! 

தனித்தனியாகக் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்த மானுட சமூகம்  குழுவாக வாழத்தொடங்கிய போது அவர்களை ஒற்றுமையுடன் ஒருங்கிணைக்க மனித சமுதாயத்துக்கு கிடைத்த முதற்பெரும் கொடை வழிபாடுகளே!

அன்று தொடங்கிய குழு உணர்வின் பெருமிதம் இன்று குலதெய்வ வழிபாடுகளின் போதும் தொடர்வது தான் அதன் வெற்றிகளில் ஒன்றாகிறது.

ஒரே குலத்தைச் சேர்ந்த மனிதர்களிடையே எந்தவிதமான பிணக்குகள் இருந்தாலும் அனைவரும் கூடி தங்கள் கைப்பொருளை சரி சமமாகத் தலைக்கட்டு வரி என்ற பெயரில் பங்கிட்டுக் கொண்டு குல தெய்வ வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து ஒற்றுமையாக விழாவெடுக்கின்றனர். இந்த விழாக்களை  தெய்வ வழிபாட்டுக்கான முகாந்திரமாக மட்டும் கருதாமல்  உற்றார் உறவினர்களுக்கும் இருக்கும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து குடும்பத்தின் மூத்த தலைமுறையினர் மத்தியஸ்தம் செய்து வைத்து அனைவரும் கூடி ஒற்றுமையாக தங்களது குலத்தைக் காக்க வந்த கடவுளை வணங்கிப் பிரிய ஒரு வாய்ப்பாகவும் பலர் கருதுகிறார்கள் என்பது தான் குலதெய்வ வழிபாட்டு முறையில் உள்ள   விரும்பத்தக்க அம்சம்! 

சில சமூகங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி அன்று குல தெய்வ பூஜைகள் நடத்தப்படுகின்றன. அவரவர் விருப்பங்களுக்கும், வசதிகளுக்கும் ஏற்ப மூன்று நாட்கள் முதல் 5 நாட்கள் வரை குலதெய்வங்களுக்கு விழா எடுத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் மாசி மாதம் அல்லது பங்குனி, சித்திரை மாதங்கள் குலதெய்வப் பூஜைகளுக்கு உரியவை. இதோ வந்து கொண்டிருக்கிறது மாசி. பலரது குடும்பங்களிலும் குலதெய்வ வழிபாட்டுக்காக இப்போதே திட்டமிடத் தொடங்கி இருப்பார்கள். அவரவர் குலதெய்வங்களைப் பற்றி அறிந்து கொள்ள எங்களாலான ஒரு சிறு உதவியாக இந்த குலதெய்வங்களுக்கான தொடர் அமையும் என்ற நம்பிக்கையில் வாசகர்களுக்குத் தங்களது குலதெய்வக் கதைகளைச் சொல்ல வாய்ப்பளிக்கிறோம்.

ஆர்வமுள்ள வாசகர்கள் எழுதி அனுப்புங்கள். அனைவரது பங்களிப்பும் தினமணி இணையதளத்தில் சிறப்புக் கட்டுரை மற்றும் லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பிரிவுகளில் வெளியிடப்படும்.

வாசகர்கள் செய்ய வேண்டியவை...

  • முதலில் உங்களது குலதெய்வம் எதுவென்ற சிறு அறிமுகம் செய்து விட்டு;
  • குறைந்த பட்சம் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் உங்களது குலதெய்வம் தோன்றிய கதையை விவரிக்கவும்.
  • கதையுடன் இணைந்து உங்களது குலதெய்வத்தின் புகைப்படம், எழுதும் வாசகரின் புகைப்படம், முகவரி, அலைபேசி எண்களுடன் எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dinamani.readers@gmail.com.

கதைகள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20.02.2018.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com