லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது ஆண் தன்மை இல்லையென யார் சொன்னது?!

ஆண்மை என்பது வெளித் தோற்றங்களிலோ, பாவனைகளிலோ இல்லை. அது செயலில், எண்ணத்தில், அதனால் கிடைக்கக் கூடிய பெருமித உணர்வில் இருக்கிறது. லிப்ஸ்டிக்கால் கெட்டுப்போக அது பழைய சோறில்லை!
லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது ஆண் தன்மை இல்லையென யார் சொன்னது?!

தங்கை மகனுக்கு டிரெஸ் வாங்க கடைக்குச் சென்றிருந்தோம். நானும், தங்கையும் அவனுக்காகப் பல உடைகளைத் தேடிக் களைத்து கடைசியில் பிங்க் நிறத்தில் ஒன்றும் இளநீல நிறத்தில் ஒன்றுமாகத் தேறியதை அவனுக்குப் போட்டுப் பார்க்கலாம் என்று அழைத்தோம். இரண்டையும் பார்த்தவனுக்கு பிங்க் நிறத்தைக் கண்டதுமே முகம் சுளுக்கிக் கொண்டது. என்னம்மா இது? பிங்க் கேர்ள்ஸ் கலர். என்னால அதெல்லாம் போட்டுக்க முடியாது. ஃப்ரெண்ட்ஸ் கேலி பண்ணுவாங்க என்று உடனே அதை ஒதுக்கி வைத்து விட்டான். உண்மையில் அவனுக்கு பிங்க் நிறம் பிடிக்காது என்று சொல்ல முடியாது. நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று தான் ஒதுக்கி விட்டான்.

இந்த சமூகம் சிற்சில விஷயங்களில் இப்படித்தான் சில பாலியல் பேதமைகளைப் புகுத்தி விடுகிறது.

  • பிங்க் நிற உடை அணிய வேண்டுமானால் நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும்.
  • லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும்.
  • குறைந்த பட்சம் சமையற்கட்டில் அம்மாவுக்கு உதவுவது என்றாலும் கூட நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும் இத்யாதி... இத்யாதி.

சில ஆண்கள் தப்பித்தவறி விதிவிலக்காக சமூகம் வகுத்த பாலியல் பேதங்களைப் பொருட்படுத்தாமல் தங்களுக்குப் பிடித்தமாதிரியெல்லாம் நடந்து கொண்டு விட்டால் அப்புறம் போயே போச்சு!

‘ஐயே! அங்க பாருடா... அவன் நெயில் பாலிஷ்லாம் போட்டுக்கறான், ஒருவேளை அவன் ஆம்பளையே இல்லையோ?’ என்றெல்லாம் சக நண்பர்கள் மத்தியில் அவனை ஒதுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

உறவில் ஒரு சிறுவனுக்கு பள்ளி நாட்களில் ஆண்டுவிழா மேடைகளில் பரத நாட்டிய உடையணிந்து கொண்டு நடனமாட அத்தனை ப்ரியம். அந்த விருப்பம் அவனுக்குள் எப்படிப் புகுந்ததெனத் தெரியவில்லை. ஒரு வேளை அம்மா ஆசிரியப் பணியில் இருந்ததால் அவன் பெரும்பாலும் பாட்டியின் ஆதிக்கத்தில் தான் வளர்ந்தான். பாட்டிக்கு அந்தக்கால லலிதா, பத்மினி நாட்டியத் திரைப்படங்கள், பாடல்கள் என்றால் இஷ்டம். அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ இவனுக்கு பெண்களைப் போல பரத உடையணிந்து பள்ளி மேடையில் நாட்டியம் ஆட மிகப்பிடித்தமாக இருந்தது. தொடர்ந்து நான்கைந்து வருடங்கள் அப்படி ஆடவும் செய்தான். இதனால் அவனுக்கு கிடைத்த பட்டப் பெயர் பொம்பள தினேஷ்.

அவனை இப்படிக் கேலி செய்து அவனது இயல்பான ஆசைகளை, ஆர்வங்களைக் கொச்சைப்படுத்திய நண்பர்களைப் பற்றியெல்லாம் அவன் பெரிதாக வருத்தப்பட்டதில்லை.

அவர்களது கேலிகளை எல்லாம் தனது வசைகளாலும் மீள் கேலிக் கணைகளாலும் எதிர்கொண்டு அவன் மிகத்திறம்பட சமாளித்தான். ஏனெனில், நண்பர்களால் காயப்பட்ட போதெல்லாம் அவனுக்கு ஆறுதல் தரவும், எதிர்த்துப் போராடும் முறைகளைப் பற்றிச் சொல்லித் தரவும் இந்தப் பொல்லாத வாழ்வைப் பற்றிய போதிய அனுபவஞானம் கொண்ட பாட்டி இருந்தார்.

அவர் அவனுக்குச் சொல்லித் தந்தது.

‘ஆண்மை என்பது வெளித் தோற்றங்களிலோ, அல்லது ஒரு சிறுவனோ, இளைஞனோ தன்னை மகா கனம் பொருந்திய ஆணாக வெளிப்படுத்திக் கொள்ள முயலும் பாவனைகளிலோ இல்லை. அது செயலில், எண்ணத்தில், அதனால் கிடைக்கக் கூடிய பெருமித உணர்வில் இருக்கிறது. அதுவே ஆண்மைத்தனம். அது நீ லிஸ்ப்ஸ்டிக் போட்டுக் கொண்டு, பரத உடை அணிந்து கொண்டு நாட்டியம் ஆடுவதால் கெட்டுப் போக அது ஒன்றும் பழைய சோறில்லை என்றார்.’

எத்தனை உத்தமமான வார்த்தைகள் இவை!

இதோ இந்த அலகாபாத் பையனைப் பாருங்கள்.

இவனுக்கும் லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ் போட்டுக் கொள்வதென்றால் ரொம்பப் பிடிக்குமாம். சமையலறை சென்று சமைப்பது, பரிமாறுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்யப் பிடிக்குமாம். ஆனால், அவன் இவற்றையெல்லாம் செய்யும் போது அதை யாராவது பார்த்து விட்டுச் சிரித்தால் மட்டும் கூசிக் குறுகி ஓடிப்போய் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வானாம். இந்தக் கூச்சம் எதற்காக என்றால்? யாரும் தன்னைக் கேலி செய்து சிரித்து விடக்கூடாது எனும் தன்பயத்தால்.

இந்த பயத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கலாம் என்றால், ஒவ்வொரு முறை லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள ஆசைப்படும் போதும் இவன் இப்படித்தான் கட்டிலுக்கு அடியிலோ அல்லது பீரோவுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டாக வேண்டியதாயிருக்கும். அப்படி ஒழிந்து கொண்டு செய்ய அவன் என்ன திருட்டுத்தனமா செய்கிறான். ஆஃப்டர் ஆல் லிப்ஸ்டிக். அதை குடும்பத்தில் அனைவர் மத்தியிலும் போட்டுக் கொள்வதென்பது எந்த விதத்திலும் தவறான செயலாக ஆக முடியாது. இதை அந்தச் சிறுவன் உணர வேண்டும். அன்றியேல் அவனது சுயமரியாதைக்கு மதிப்பில்லை என அவனது சகோதரி திக்‌ஷா பிஜிலானி சிந்தித்தார்

அந்தச் சிந்தனையின் விளைவு தான் இன்று காலை முதலே டிவிட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள்.

லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள இனி அந்த ‘Little Cuz' கூச்சப்பட மாட்டான் என நம்புவோம்.

விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்ற திக்‌ஷா பிஜிலானிக்கு தனது குட்டித் தம்பியின் நடவடிக்கை வினோதமாக இருந்திருக்கிறது. அவனது எண்ணம் தவறு. இதை திருட்டுத்தனமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்தச் சிறுவனுக்கு உணர்த்த விரும்பினார் திக்‌ஷா. அதன் விளைவாக தன் மூத்த சகோதரனுக்கும் கூட லிப்ஸ்டிக் போட்டு விட்டு அதையும் புகைப்படமெடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் திக்‌ஷா.

இப்படித்தான் பெரிதாக்கப்படத் தேவையற்ற சின்னஞ்சிறு விஷயங்களைக் கூட அப்படியே போகிற போக்கில் ஸ்மூத்தாகக் கையாளாமல் அதை என்னவோ பெருங்குற்றம் போல கையாண்டு பலரை துக்கத்தில் ஆழ்த்தி விடுகிறோம். இதனால் சம்மந்தப்பட்டவர்கள் காலத்துக்கும் கூனிக் குறுகிப் போய்விட வேண்டியதாகி விடுகிறது. அது தவறு. அந்தத் தவறை இனி யாரும் உங்கள் வாழ்வில் உங்களுக்கு நெருக்கமானவர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் இழைத்து விடாதீர்கள். எனும் விண்ணப்பத்தோடு தனது மற்றும் தன் குட்டிச் சகோதரனின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் திக்‌ஷா.

ஹாட்ஸ் ஆஃப் டு யூ திக்‌ஷா & ‘Little Cuz’

Image courtesy: NDTV.COM

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com